’புக்’ மார்க்ஸ் தொகுப்பு 10

64

’மோனை’ என்றால், இரண்டு சொற்களின் முதல் எழுத்துகள் ஒன்றி வருவது, உதாரணமாக ‘கல்விக் கடல்’, ’காத்திருந்த கண்கள்’… இப்படி.

செய்யுளில் ‘மோனை’ பயன்படும்போது, அதில் பல வகைகள் உண்டு. அவை:

* இணை மோனை : முதல், இரண்டாவது சொற்களில்மட்டும் மோனை அமைவது.

உதாரணம்: ’கடற்கரையில் காற்று வாங்கித் திரும்பினோம்’

* பொழிப்பு மோனை : முதல், மூன்றாவது சொற்களில் மோனை அமைவது

உதாரணம்: ’கடற்கரையில் இன்று காற்று அதிகம்’

* ஒரூஉ மோனை : முதல், நான்காவது சொற்களில் மோனை அமைவது

உதாரணம்: ’கடற்கரையில் இன்று நல்ல காற்று’

* கூழை மோனை : முதல் மூன்று சொற்களில் மோனை அமைவது

உதாரணம்: ‘கடற்கரைக் காற்றைக் காணாமல் வாடினோம்’

* மேற்கதுவாய் மோனை: 1, 3, 4 சொற்களில் மோனை அமைவது

உதாரணம்: கடற்கரை என்றாலே காற்று கிறங்கடிக்கும்

* கீழ்க்கதுவாய் மோனை : 1, 2, 4 சொற்களில் மோனை அமைவது

உதாரணம்: கடற்கரைக் காற்றில் மனம் கிறங்கியது

* முற்று மோனை : நான்கு சொற்களிலும் மோனை அமைவது

உதாரணம்: கடற்கரைக் காற்றில் கந்தன் கிறங்கினான்

(ஆதாரம்: கி. வா. ஜகந்நாதன் எழுதிய ‘கவி பாடலாம்’)

65

கல்கி தன்னுடைய சொந்தப் பெயரில் ஒரு பத்திரிகை தொடங்கிய நேரம். அதன் நிர்வாகத் தலைமையை ஏற்றிருந்தவர் சதாசிவம். அவருக்கு ஒரு பெரிய கவலை. காரணம், காகிதத் தட்டுப்பாடு.

இதைப் பற்றிக் கேள்விப்பட்ட கல்கி கிண்டலாகச் சிரித்தார்., ‘கவலைப்படாதீங்க, நான் ஒரு தமிழ்நாட்டுச் சரித்திர நாவல் எழுதப்போறேன், அதை அதிகப் பேர் படிக்கமாட்டாங்க, நமக்கு அச்சிடக் காகிதமும் நிறையத் தேவைப்படாது’ என்று வேடிக்கையாகச் சொன்னார்.

1941ல் தொடங்கிய அந்தச் சரித்திர நாவலின் பெயர், ‘பார்த்திபன் கனவு’. சதாசிவத்திடம் சொன்னதுபோலவே, அதிக எதிர்பார்ப்புகள் இல்லாமல் சாதாரணமாகதான் எழுத ஆரம்பித்தார் கல்கி.

ஆனால், கல்கியின் எழுத்து லாகவம், அந்த நாவல் உடனடி ஹிட். தமிழர்கள் கல்கி இதழைத் தேடித் தேடி வாசிக்க, விற்பனை கிடுகிடுவென்று உயர்ந்தது. கூடுதல் பிரதிகளை அச்சிடுவதற்காக சதாசிவம் காகிதத்தைத் தேடிப் பல ஊர்களுக்குப் பயணமாகவேண்டிய நிலைமை.

’பார்த்திபன் கனவு’ தந்த உற்சாகத்தில் கல்கி தனது அடுத்த சரித்திர நாவலை இன்னும் விரிவான களத்தில் எழுதத் தொடங்கினார், 1944ல் ‘சிவகாமியின் சபதம்’ வெளிவந்து பெரும் வெற்றி பெற்றது.

ஆறு வருடங்கள் கழித்து, கல்கி ‘பொன்னியின் செல்வன்’ நாவலை எழுதத் தொடங்கினார். அது தொடர்ந்து மூன்றரை ஆண்டு காலம் தொடராக வந்து மிகப் பெரிய வெற்றி பெற்றது. இன்றுவரை தமிழில் மிக அதிகம் விற்பனையாகும் நூல்களில் அதுவும் ஒன்று.

பக்க அளவு என்று பார்த்தால், ‘பார்த்திபன் கனவு’ சுமார் 400 பக்கங்கள், ‘சிவகாமியின் சபதம்’ 1000 பக்கங்கள், ‘பொன்னியின் செல்வன்’ 2400 பக்கங்கள்!

(ஆதாரம்: பூவண்ணன் எழுதிய ‘டைட்டானிக்கும் டி.கே.சி.யும்’ நூல்)

66

’முன்னுரை’கள் என்பவை புத்தகங்களின் ட்ரெய்லர்மாதிரி. பலர் இந்த முன்னுரைகளை வாசித்துவிட்டுதான் புத்தகத்தை வாங்கலாமா வேண்டாமா என்று தீர்மானிப்பார்கள். ’அதெல்லாம் போர், நான் நேரடியா மெயின் பிக்சர் பார்க்கிறேன்’ என்று சொல்கிற தீவிர வாசகர்களும் உண்டு.

சில முன்னுரைகளில் சுய புகழ்ச்சியே நிரம்பிக் கிடக்கும், சிலவற்றில் அடுத்தவர்களுக்கு நன்றி சொல்லிப் பட்டியல் போடுவார்கள். இன்னும் சிலர் தங்களுக்கு நெருக்கமான பிரபலங்களிடம் முன்னுரை வாங்கிப் பிரசுரிப்பார்கள். புத்தகத்தைவிட முன்னுரை அதிகம் உள்ள ஒரு நூலைக்கூட நான் வாசித்திருக்கிறேன்.

அபூர்வமாகச் சில எழுத்தாளர்கள், தங்களது முன்னுரைகளுக்காகவே புகழ் பெற்றவர்கள். சிறந்த உதாரணம், ஜெயகாந்தன். இவரது முன்னுரைகள் தொகுக்கப்பட்டுத் தனி நூலாகவே வெளிவந்துள்ளது. அந்தத் தொகுப்பில் ஜெயகாந்தன் குறிப்பிடும் சுவாரஸ்யமான ஒரு விஷயம்:

சரத் சந்திரர் தன்னுடைய நாவல்களுக்கு முன்னுரை எழுதமாட்டாராம். காரணம் கேட்டால், ‘400 பக்க நாவலில் விளக்கமுடியாத எந்த விஷயத்தை இந்த நாலு பக்க முன்னுரை விளக்கிவிடப்போகிறது?’ என்பாராம்.

67

திருக்குறளுக்குப் பலர் உரை எழுதியுள்ளார்கள். அதன் தொடக்க கால உரை ஆசிரியர்களில் மிக முக்கியமான பத்து பேர்:

தருமர்
மணக்குடவர்
தாமத்தர்
நச்சர்
பரிதி
பரிமேலழகர்
திருமலையார்
மல்லர்
பரிப்பெருமாள்
காளிங்கர்

திருக்குறள் முழுமையும் வெண்பாக்களால் ஆனதுதான். அதே பாணியில், இந்தப் பத்து பேரின் பெயர்களைக் குறிப்பிடும் வெண்பா ஒன்றும் உள்ளது:

தருமர், மணக்குடவர், தாமத்தர், நச்சர்,
பரிதி, பரிமே லழகர், திருமலையார்,
மல்லர், பரிப்பெருமாள் காளிங்கர் நூலினுக்கு
எல்லைஉரை செய்தார் இவர்


68

தமிழில் தனித்துவமான உரை நடை (வசன நடை) கொண்டவர்கள் யார்?

1984ம் வருடம் வெளிவந்த ‘விமரிசனக் கலை’ நூலில் இந்தக் கேள்விக்கு விமர்சகர் க. நா. சுப்ரமணியம் ஒரு பதில் சொல்லியிருக்கிறார். அவருடைய பட்டியல்:

* வீரமாமுனிவர்
* வேதநாயகம் பிள்ளை
* சுப்பிரமணிய பாரதியார்
* வ. ரா.
* டி.கே.சி.
* புதுமைப்பித்தன்
* லா. ச. ராமாமிருதம்

எத்தனையோ எழுத்தாளர்கள் இருக்க, இவர்களை ஏன் தேர்ந்தெடுக்கவேண்டும்? அதற்கும் க.நா.சு.விடம் தெளிவான பதில் உண்டு. அவரது அளவுகோல்:

இவர்களுடைய வசன நடையிலே குறைகள் இருக்கலாம், ஆனால் அடிப்படையாக ஒரு தனித்துவம் இருக்கிறது. வார்த்தையை உபயோகிப்பதிலே, வார்த்தைகளை ஒன்று சேர்ப்பதிலே, அந்த வார்த்தைகளையும் வாக்கியங்களையும் தனி அழகு, ‘தன்’ அழகு கூடுவதாகச் சொல்வதிலே அவர்களுக்கு ஒரு திறமை இருக்கிறது. புதுமைப்பித்தனேதான் அவர் நடை என்றும், டிகேசியே அவர் நடை என்றும் சொல்வதற்கு ஆதாரம் உண்டு.


69

‘சூரிய நாராயண சாஸ்திரி’ என்கிற ‘பரிதி மால் கலைஞர்’ அற்புதமான ஆசிரியர். தமிழை அழகாகவும் ஆழமாகவும் ரசித்து ருசித்துச் சொல்லித்தருகிறவர்.

உதாரணமாக, சீவக சிந்தாமணியில் ஒரு வரி, ஆண்மகன் ஒருவனைப் பெண்கள் ‘தாமரைக் கண்ணால் பருகினார்கள்’ என்று வரும்.

மேலோட்டமாகப் பார்த்தால், இது ஒரு சாதாரணமான வாக்கியம்தான். ஆனால், பரிதி மால் கலைஞர் இதை விளக்கும்போது, மூன்று விதமான விளக்கங்களைத் தருவார்:

1. பெண்கள் தாமரை போன்ற தங்களுடைய கண்களால் அவனைப் பருகினார்கள்
2. தாம் அரைக் கண்ணால், அதாவது, பெண்கள் அவனை முழுவதுமாகப் பார்க்க வெட்கப்பட்டு, ஓரக்கண்ணால், அதாவது அரைக் கண்ணால் பார்த்து ரசித்தார்கள்
3. தாம் மரைக் கண்ணால், ’மரை’ என்றால் மான் என்று பொருள், பெண்கள் தங்களது மான் போன்ற கண்களால் அவனைப் பார்த்து மகிழ்ந்தார்கள்

(ஆதாரம்: பி. சி. கணேசன் எழுதிய ‘தமிழ் வளர்த்த பேராசிரியர்கள்’ நூல்)


70

சென்ற ஆண்டு (2011) ‘அமுத சுரபி’ தீபாவளி மலரைப் புரட்டிக்கொண்டிருந்தேன். அதில் தீபாவளி மலர்களைப் பற்றிய சுவாரஸ்யமான பல புள்ளி விவரங்கள். தொகுத்து வழங்கியவர் பெயர் ‘சின்னஞ்சிறுபோபு’. அவற்றிலிருந்து சில இங்கே:

* தமிழில் வந்த முதல் தீபாவளி மலர், 1934ம் வருடம். வெளியிட்டது, ஆனந்த விகடன்

* தமிழில் அதிக தீபாவளி மலர்களை வெளியிட்ட பத்திரிகை, கல்கி (60+)

* இப்போதெல்லாம் தீபாவளி மலர்களின் அட்டையில் புகைப்படங்களைப் பிரசுரித்துவிடுகிறார்கள். ஆனால் அன்றைய தீபாவளி மலர்களுக்கான அட்டைப்படங்கள் தனித்துவம் வாய்ந்தவை, பெரும்பாலும் புராண அல்லது இலக்கியக் காட்சிகளின் விரிவான சித்திரிப்புகளாக இருக்கும். அவற்றை அதிக எண்ணிக்கையில் வரைந்தவர், கோபுலு

* சிறுவர்களுக்குமட்டுமான சிறப்பு தீபாவளி மலர்களும் ஐம்பதுகள், அறுபதுகளில் வெளியானதுண்டு. அவற்றை வெளியிட்ட பத்திரிகையின் பெயர் ‘கண்ணன்’, இதன் ஆசிரியர், எழுத்தாளர் ஆர்.வி.

(தொடர் நிறைவடைந்தது)

நன்றி:

***

என். சொக்கன் …

14 08 2012

எழுதியவர் : பகிர்வு:செல்வமணி மூலம்:என (6-Nov-15, 1:14 am)
சேர்த்தது : செல்வமணி
பார்வை : 53

மேலே