கோடம்பாக்கத்தின் நுழைவாயில் குறும்படங்கள்

" ஸ்டார்ட் ... கேமரா ... ஆக்க்ஷன்... டேக் ஒ. கே"
" ஆர்டிஸ்ட மார்க்குக்கு வர சொல்லுங்க, ஒரு க்ளோஸ் அப் எடுத்துக்கலாம்"
"கட் ..கட் .. பீல்ட் கிளியர் பண்ணுங்களேம்பா ..."
" வாயமட்டும் அசைக்க சொல்லு.. டப்பிங் ல பாத்துக்கலாம் "

இவ்வாறு ஏக போக வசனங்கள் ;முனைக்கு முனைத் திருப்புமுனையாக ஏதோ ஒரு தெருமுனையில் குறும்படம் எடுத்துக் கொண்டிருப்பதை நாம் அன்றாடம் கவனித்துக் கொண்டிருக்கிறோம். இப்போது பத்தில் ஆறு பேரிடம் டிஜிட்டல் கேமரா உள்ளது, இல்லாதவர்கள் தின வாடகைக்கு கேமராவும் இதர உபகரணங்களின் கொண்டு குறும்படங்கள் இயக்குகிறார்கள், இன்னும் சிலர் மொபைல் கேமராவில் கூட குறும்படம் எடுக்கிறார்கள்.

இந்த அளப்பறியா ஆர்வத்திற்கு நவீன தொழில்நுட்பமும், சமூக வலைதளங்களும் , இணையமும், ஊடகங்களும் மற்றும் குறும்படம் மூலமாக பெரிய திரைக்கு சென்றவர்களும் முக்கிய காரணிகள். சமீப காலமாக, ஊடகங்கள் நடத்தும் குறும்பட போட்டிகளின் வாயிலாக பலரின் சினிமா ஈர்ப்பை காண முடிகிறது. இன்றைய சூழலில், குறும்படங்களின் பங்கு திரைத்துறையிலும் சமூக விழிப்புணர்வைப் பிரதிபலிக்கும் வகையிலும் இருக்கும் பாங்கை நம்மால் மறுக்கமுடியாது.பெருங்கட்டுரையை வாசிக்க தயங்குபவர்கள் கூட ஒரு குறும்படத்தை பார்த்து விடுவார்கள். தமிழகத்தில் ஒரு நாளில் சராசரியாக நூற்றிற்கும் மேற்பட்ட குறும்படங்கள் இணையத்தில் சேர்க்கப்படுகிறது. இதிலிருந்து சிறந்த படைப்புக்கள் சமூக வலைதளத்தில் பகிர்தலால் பிரபலமடைய, அதில் பணிபுரிந்தவர்களுக்கு அதன் மூலம் பெரிய திரைக்கு வாய்ப்பு கிடைக்கிறது.கடந்த 6 ஆண்டுகளில் தமிழ் சினமாவின் வளர்ச்சியைப் பார்க்கும்போது குறும்படங்களினால் வந்த இயக்குனர்களின் பங்களிப்பு அதிகமே. இதனால், வெள்ளித் திரையில் பல வெற்றி படம் கொடுத்து இயக்குனர்களும் தங்களது படைப்புகளின் தரத்தை உயர்த்துகிறார்கள். கு.மு/கு.பி (குறும்படங்களின் வருகைக்கு முன்/பின்) என்று கூட எடுத்துக் கொள்ளலாம் ஆக மொத்தத்தில் நல்ல போட்டியும் நேர்த்தியான படைப்புகளின் வித்தே இன்றைய சூழல்.

குறும்படங்கள் வாய்ப்பின் சாளரம் :

குறும்படங்களின் அங்கீகாரத்தால், கோடம்பாக்கத்தின் வரவேற்பறையில் நுழைந்த இயக்குனர்கள் சிலர் இருப்பினும் வருகைக்காக பலர் இருக்கிறார்கள், பத்து அல்லது பதினைந்து நிமிடத்திற்குள் புதுமையான கதைகள், வித்தியாசமான களம் என கற்பனை குதிரைக்கு கடிவாளம் இல்லாத சிந்தனையாளர்கள் - கார்த்திக் சுப்பாராஜ் , நளன் குமாரசாமி, பாலாஜி மோகன், பாலாஜி தரணிதரன், ராம் குமார் ,அல்போன்ஸ் புத்திரன் என பட்டியல் நீளும். இவர்கள் அனைவரும் தனித்தனியே 15 க்கும் மேற்பட்ட வெவ்வேறு பாணியில் குறும்படங்களை இயக்கியுள்ளனர். 'ஜிகர்தண்டா' இயக்கிய கார்த்திக் சுப்பாராஜ் தகவல் தொழில்நுட்பத்தில் பணிபுரிந்து குறும்படங்களின் உந்துதலால் முறையாக சில பயிற்சி எடுத்து திரைபடத்தின் நுண்ணியியலை புரிந்து பல குறும்படங்களை இயக்கியுள்ளார். அதில், சில ஆங்கில படமும் அடங்கும், 'சூது கவ்வும்' இயக்கிய நளன் ரியல் எஸ்டேட் பணியிலிருந்து குறும்படங்கள் இயக்கியவர், தனியார் தொலைக்காட்சியின் போட்டிக்காக ஆரம்பித்த அவரின் பயணம் இன்று மிக முக்கியமான திரைக்கதையாசிரியராக உருவெடுத்துள்ளார். ஒரு காலக்கட்டத்தில் திரைப்படம் இயக்க முதலில் உதவி இயக்குனராக இருந்து தொழிலைக் கற்று நேர்த்தியான கதையை உருவாக்கி, நடிகர்கள் ஒப்புக்கொண்டு தயாரிப்பாளரைப் பிடிப்பதற்குள் ஒரு வழியாகிவிடுவார்கள், ஆனால் இன்று குறும்படங்கள் நம் திறமைகளை எளிதாக எல்லாரிடமும் சேர்த்துவிடும், அப்படியாக வந்தது பாலாஜி மோகன் இயக்கிய 'காதலில் சொதப்புவது எப்படி' , முதலில் குறும்படமாக வெளிவந்தது பின் மக்களிடம் இணையத்தில் பெரிய வரவேற்பு வந்தமையால் பின்னர் முழு நீள திரைப்படமானது. பாலாஜி மோகனின் வெற்றி மற்ற குறும்படங்கள் இயக்குனர்களை உற்சாகப்படுதியது, 'பண்ணையாரும் பத்மினியும்','நேரம்','முண்டாசுப்பட்டி' என கனிசமான படங்கள் வெளிவந்தது.இப்படியாக குறும்படங்களும் அதன் இயக்குனர்களின் எழுச்சி இருப்பதற்கு கனிசமான குறும்படம் இயக்கிய அனுபவமும், விடா முயற்சியும்,விழா ஊக்கமும் தான் வெற்றியின் சாவி, இரண்டு குறும்படங்கள் இயக்கியவுடன் திரைப்படத்தை இயக்கிவிடலாம் என்ற மாயை பலருக்கு இருப்பதை நம்மால் மறுக்க முடியாது.

குறும்படங்கள் நவீன இலக்கியம் :

குறும்படங்கள் பத்து நிமிடம் பொழுதுபோக்கு என்பதை மீறி சமூக அவலத்தை, விழிப்புணர்வை, பொதுவுடமையை, மனிதத்தை, அநீதியை என மூன்றாவது கண்ணாகவும் விழிக்கிறது. எஸ். ராமகிருஷ்ணன் எழுதிய 'கர்ணமோட்சம்' என்ற குறும்படம் முரளி மனோகர் இயக்கினார், இந்த படம் குறும்படங்கள் பிரிவில் 2010 ல் தேசிய விருது பெற்றது. கூத்துக்கலையும், கலைஞனும் இன்றைய உலகக் கண்ணாடியில் எப்படி தெரிகிறார்கள் என்பதை தெளிவாகச் சொல்லும் படம்,குறும்படத்தை இயக்குபவர்கள் இந்தப் படத்தை பார்க்க வேண்டும்.

சந்தோஷ் சிவன் இயக்கிய கன்னட குறும்படம், 'பிராரம்பா' 2008 ல் சிறந்த ஊக்கமூட்டும் படிப்பினை கொண்ட படம் என்று அங்கீகரித்து தேசிய விருது பெற்றது, இதில் பிரபு தேவா,சரோஜா தேவி முக்கிய கதாப்பாத்திரத்தில் நடித்திருப்பார்கள், எய்ட்ஸ் விழிப்புணவிற்கான பரப்புரை, மனதை கனக்க வைக்கும் படம் . 'ஆரண்ய காண்டம்' படத்தின் இயக்குனர் தியாகராஜன் குமாரராஜா 2005 ல் இயக்கிய படம் 'பெக்கி'(Becky), இது ஒரு நிமிட படம் ,ஆனால் அதில் சொல்லப்படும் உணர்வுகள் மாற்றுத்திறனாளிகள் மீது நமது பார்வை சட்டென மாறும்.நடிகரும் இயக்குனருமான ஆர்.பாண்டியராஜன் இயக்கிய குறும்படங்கள் உலகளவில் பெரும் பாராட்டு பெற்றது, 'மகன்' குழந்தைகளுக்கான திரைப்பட விழாவில் சிறந்த படமாக 2004ல் தேர்வு செய்யப்பட்டது, 2006 ல் 'இரு துளிகள்' போலியோ விழிப்புணவிற்கான படம், 2009 ல் 'அழகு' என்ற படம் உடலுறுப்பு தானத்தின் பரப்புரை; சமீபத்தில் எடுத்த 'மண் பானை' ஐரோப்பாவில் நடந்த குறும்பட திருவிழாவில் சிறந்த படம் மற்றும் இயக்குனர்கான விருதும் வழங்கப்பட்டது,குறும்படங்கள் வாயிலாக சமூக மேம்பாட்டை உரக்கச் சொன்னது பாராட்டுக்குரியது. நல்ல சிறுகதையோ , கவிதையோ வாசிப்பது போன்ற உணர்வு இத்தககைய குறும்படங்கள் தருகின்றன.

90 களின் இறுதியில் பாலு மகேந்திரா அவர்கள், சின்னத்திரையில் பெரிய மாற்றத்தை விதைத்தார் 'கதை நேரம்' வாயிலாக,6 சிறுகதைகளை 20 நிமிட குறும்படமாக எடுத்தார், குறிப்பிடும் படியாக சுஜாதாவின் சிறுகதை 'நிலம்', சுந்தர ராமசாமியின் 'பிரசாதம்', ஜெயந்தனின் 'காயம்' என இக்கதைகள் வாசித்தோருக்கு வரப்பிரசாதமாக செல்லுலாயிடில் பதிவு செய்தார். இப்படியாக படைப்புகள் இன்றளுவும் பேசபட அச்சாரமாக இருப்பது கலை, இலக்கியம் மீதுள்ள தீரா காதலும் சமூக பொறுப்புணர்வும் மட்டுமே, மேலும் இவ்வாறான குறும்படங்கள் பார்க்கையில் சமூகம் சார்ந்த கேள்வி பதிலை, விழிப்புணர்வை இலகுவாக பெரிய படத்தில் கோர்க்கலாம், இன்றைய தினத்தில் காதல்/நகைச்சுவை,திகில்/நகைச்சுவை என மீண்டும் மீண்டும் அதே மாதிரியான குறும்படங்களையே பெரும்பாலும் காண முடிகிறது, ஒரு நல்ல சிறுகதையை யாரும் குறும்படமாக எடுக்க முற்படுவதில்லை இவ்வாறான முயற்சிகள் தொடுங்கும் என்று நம்புவோம்.

குறும்படங்கள் எடுப்பவர்களுக்கு...

குறும்படங்கள் எடுப்பவர்களுக்கு சினிமா பயிற்சியும், வாசிப்பும், இலக்கிய பரிச்சயமும் மிகவும் முக்கியம். நிறைய பேருக்கு இவை இல்லாததை அவர்கள் எடுக்கும் படங்கள் சொல்லும். சிறிய பயிற்சி முகாம்களோ வகுப்புகளோ நடந்துக் கொண்டிருக்கிறது, அதில் சினிமா குறித்து முழுமையாக கற்றுக் கொடுப்பது சாத்தியமில்லாதது. ஆனால், இத்தகைய முகாம்களில் சினிமா குறித்த ஒரு பரிச்சயமும் தெளிவும் வரக்கூடும். சிறந்த நாவல்களையும், சிறுகதைகளையும், இலக்கியத்தையும் வாசிக்க வேண்டும். வாசிப்பு தன்மை திரைக்கதை எழுதுவதற்கு ஊன்றுகோலாக இருக்கும். டேவிட் மமெட் (David Mamet) குறிபிடத்தக்க நாடக ஆசிரியர், திரைப்படம் பற்றி பல புத்தகங்களை எழுதியுள்ளார், முடிந்தால் இணையத்தில் அவரின் படைப்புக்களை வாசியுங்கள், சுஜாதா எழுதிய 'திரைகதை எழுதுவது எப்படி' என்ற புத்தகம் திரைக்கதை எழுத மிகவும் உதவும்.

சென்னை அண்ணா நூலகத்தில் உலகில் தலைச் சிறந்த திரைப்படங்களின் திரைக்கதைகள் புத்தகமாக இருக்கிறது,தேர்ந்தெடுத்து வாசித்தால் திரைக்கதையின் பாணி புரியவரும், திரைக்கதையின் இரு பிரிவுகளான நேரியல்(Linear), நேரியல்சாரா(Non-Linear) திரைகதையின் ஆழத்தை உணரமுடியும். திரைக்கதை எழுத கற்றுக்கொண்டால் எந்த கதையையும் படமாக்கலாம். குறிப்பாக புதுமைப்பித்தனின் 'சிற்றன்னை' எனும் சிறுகதை 'உதிரிப்பூக்கள்' என மகேந்திரன் 70mm ல் எழுத்தோவியத்தை உயிரூட்டினார், அதன் திரைக்கதை புத்தகமாக மகேந்திரன் வெளியிட்டுள்ளார். ஒரு சிறுகதையை படமாக்குவது எப்படி ? திரைக்கதை எழுதுவதன் நுணுக்கத்தை எளிமையாக தெரிந்துக்கொள்ளலாம். உலக படங்கள் பார்ப்பதனூடே நம் சிந்தனையின் அளவு கோல் புலப்படும் மேலும் கதை சொல்லுதலின் அடிப்படை புரியும். வுட்டி அல்லன் (Woody Allen), குவாண்டின் டாரண்டினோ(Quatin Tarintino), மரியோ புசோ (Mario Puzo), பிட்ரிக்கோ பெல்லினி(Fedriko Fellini), அகிரா குரோசவா(Akiro kurosawa), சத்யஜித் ரே (Sathayjith Ray) இன்னும் சிறந்த படைப்பாளிகள் ஏராளம் அவர்களின் படங்களைத் தேடிப் பாருங்கள், சினிமா மொழியை தாமே கற்கலாம்.

குறும்படங்கள் வாய்ப்பிற்கான ஆதார் அட்டை. தயாரிப்பாளரை சந்திக்க கிடைத்த துருப்புச் சீட்டு. திரைக்கதை எழுதி , காட்சிக்கு காட்சி கதை சொல்லும் முறையை மீறி ஒரு பானை சோற்றுக்கு ஒரு சோறு பதம் எனும் வகையில் குறும்படங்களை வைத்தே அந்த இயக்குனரை கணித்து விடுகின்றார்கள் தயாரிப்பாளர்கள். உதவி இயக்குனர்களாக வாய்ப்புத் தேடி வருபவர்களிடம் முதல் வினா 'எத்தனை குறும்படம் இயக்கியிருக்கீறீர்கள்', முன்னர் மேற்கோடிட்ட படி கடந்த 6 ஆண்டுகளில் தமிழ் சினிமா தொழில்நுட்பத்திலும், தரத்திலும் உலகளவில் விளங்குவதற்கு புதிய இரத்தங்களின் பங்களிப்பு குறிப்பிடத்தக்கது. படம் எடுப்பது கூட்டு முயற்சி. ஆகவே, எல்லாப் பிரிவிலும் தெரிந்து வைத்துக்கொண்டு மேலும் தங்கள் திறமைகளை வளர்த்துக்கொண்டால் இத்துறையில் மிளிர முடியும்.புதுமையும் தனித்துவம் இருந்தால் குறும்படத்தை அஸ்திவாரமாகக் கொண்டு முழு நீள திரைப்படத்தை இயக்கலாம்.

"வெற்றி தூரமில்லை
உழைப்பும், முயற்சியும் அருகிலிருந்தால் !!"

எழுதியவர் : பவித்ரன் (7-Nov-15, 2:32 pm)
சேர்த்தது : pavithran
பார்வை : 71

மேலே