வஞ்சி மன்னன் - சரித்திரத் தொடர்- பாகம் 2 நடுவிலிருந்து போகும் கதை

............................................................................................................................................................................................

பாண்டிய மன்னர்கள் மெதுமெதுவாய் வலுப்பெற்ற காலம்..! சேரர்களும் சோழர்களும் சிதறிப் போய் சிற்றரசர்களாக ஆட்சி செய்து வந்த காலம்..! சாளுக்கியர்களும், ஹொய்சாளர்களும் அரியணையில் பார்வை பதித்த நேரம்..! சீன யாத்திரிகர்களும், அந்நிய தேசத்து வணிகர்களும் இரண்டு கண் போதாவென்று நம்மவர்களை பிரமித்துப் பார்த்த நேரம்...! வஞ்சி நகரத்தை தலைநகராகக் கொண்டு கொங்கு நாட்டை ஆண்டு வந்த கடுங்கண் சேரலாதர் எதிர்பாராத விதமாய் இறையடி சேர, அவர் மைந்தன் குருகுல வாசம் புரிந்து கொண்டிருந்த மதுரமொழி மகுடமேற்றான்.

அரியணை ஏறும் அரசன் தனியாக அமரக்கூடாது என்பது அக்கால விதி.!

இளவரசி கீர்த்திவதனாவைக் கைப்பிடித்தான்.!

இருவரும் கவிஞரும் கவிதையும் போலத் தெரிந்தார்கள்..! புத்தம் புதுத் தம்பதிகள் இளமையின் ருசியை மிச்சம் வைக்காமல் பருகுவார்கள் என்று எதிர்பார்த்தனர் பிறர்.

மன்னனுக்கும் அந்த ஏக்கம் இருந்தது. இருப்பினும் அரசக் கடமைகளை தன் முதல் மனைவியாக்கினான்.

குருகுல வாசம் ஊர் சுற்றச் சொன்னது. தேனும் தினைமாவும் கொடுத்து உபசரிக்கும் மலையும் மலை சார்ந்த குறிஞ்சி நிலமாகட்டும்; மூங்கிலரிசியும் முருங்கைக் கீரையும் வைத்துப் பசியாற்றும் காடும் காடு சார்ந்த முல்லை நிலமாகட்டும்; நெய் பெய்த செந்நெல் சோற்றுடன் கும்பாயம் படைக்கும் வயலும் வயல் சார்ந்த மருதமாகட்டும்; நண்டு-பீர்க்கங்காய் கலவை ஊற்றிய களி உருண்டையை சுட்ட மீனுடன் தின்னக் கொடுக்கும் நெய்தலின் கடற்கரை கிராமமாகட்டும்.. உடும்புக் கறி தின்று மது குடிக்கும் பாலையாகட்டும்..

ஐவகை நிலங்களைச் சுற்றியிருந்தாலும் அவனது சொந்த ராஜ்ஜியத்தின் எல்லைகளை இது வரை அவன் கண்டதில்லை..!

கடுங்கண் சேரலாதர் உடல் முழுக்கப் போர்த் தழும்பும், உள்ளம் முழுக்கச் செயல் திறனும், அனுபவ அறிவும் கொண்டவர். அவரிடத்தில் இளமை நர்த்தனம் புரியும் குமாரன் வீற்றிருப்பது கண்ணுக்கு அழகாய்த் தெரிந்தாலும் குடிகளின் கருத்துக்கு இடறலாகவே இருந்தது..! புது மன்னர் செங்கோல் வளையாமல் ஆள்வதிருக்கட்டும்..! பகையும் சூழ்ச்சியும் வகையாய்த் தாக்கினால் தான் வளையாது வாழ்வாரா?

குடிமக்களின் நம்பிக்கையைப் பெற்றாலன்றி கொற்றவன் உயர முடியாது என்பது மதுரமொழிக்கும் தெரியும். எனவே ஆட்சிக்கட்டில், நகர்வலம், நீதி மன்றம், மாறு வேடமிட்டுச் சோதனை என்று தன்னாளை வகுத்துக் கொண்டவனுக்கு கீர்த்திவதனா நன்றாக ஆடுவாள் பாடுவாள் என்பது பிறரைப் போலவே கேள்விப்பட்ட ஒன்றாக மட்டுமே இருந்தது.

கீர்த்திவதனா அரச குலப் பெண்ணென்றாலும் அவளின் பால பருவம் கழிந்தது சாத்வீகமான சங்கர நம்பூதிரியின் குடிலின்தான். கோபால கிருஷ்ணன் இல்லாத ராதையாக மகிழ்ச்சியுடனும் மலர்ச்சியுடனும் அந்த மலையருவியையும் நந்தவனத்தையும் அழகாக்கினாள் அவள்.

கீர்த்திவதனாவை நினைத்த மாத்திரத்தில் மதுரமொழிக்கு மனதில் மங்கள வாத்தியம் முழங்கியது..! நிழல் கூடப் பிரகாசிக்கும் கீர்த்திவதனா..! சூரியோதய சமயத்தில் ராஜகாளியை தரிசிக்க அவள் பல்லக்கில் பயணப்படும் நேரம் காவலுக்கு வரும் காவலர்களில் ஒருவன் போல் மாறுவேடமிட்டு அவன் கடப்பான். தன் அருகாமையால், இன்னதென்று தெரியாமல் அவள் பரபரத்து, திரைச் சீலையை விலக்கி நாற்புறமும் தன் ஈட்டி விழியைச் சுழற்றி, மார்பகத்தை விம்மித் தாழ்த்துவதை ரசிக்கிறபோது ஒரு குற்ற உணர்ச்சியும் அவனுக்குத் தோன்றும்.

இயற்கையின் இந்த ரகசியம் வினோதமானதுதான். எங்கேயோ பிறந்து, எப்படியோ வளர்ந்து கைப்பிடித்த பின்னர், பற்றிய கைகளின் வழியாக இதயம் இடம் மாறி, குறுகிய காலத்தில் ஒருவர் பசிக்கு ஒருவர் உணவருந்துகிற அளவுக்கு ஒத்த எண்ணம் உண்டாவது அதிசயம் தானே?

சுற்றம் சூழ மாக்கோலமிட்ட மனையில் தலை கவிழ்ந்து அமர்ந்திருந்த கீர்த்திவதனாவின் கழுத்தில் வாசமாலை சூட்டிய அந்த வைபவம்..!

கீர்த்திவதனா எழுந்த சமயம், மணமாலை கழன்று மண்ணில் விழுந்தது...!

அரசப் புரோகிதர்களின் முகங்கள் ஒரு கணம் இருண்டு போனதை மதுரமொழி கவனிக்காமல் இல்லை..!

நிமித்தம் சரியில்லை என்பதால் பாணிணி முனிவரை நாடினார் மந்திரியார்..

“ மனக்காவல் மேன்மையைக் கூட்டும்; மணவாளன் காவல் ஆயுளைக் கூட்டும்..! ஒரு நாற்பத்தெட்டு நாட்கள் கணவரோடு புண்ணிய தீர்த்தத்தில் இணைந்து நீராடி, நாளின் தொடக்கத்தில் ராஜகாளியம்மன் சந்நதியில் வழிபடட்டும் ” என்றார் பாணிணி முனிவர்.

அதற்குள் எல்லைக் கிராமங்களில் கலகம் என்ற செய்தி கிடைத்தது. மன்னன் மாறுவேடமிட்டுப் போக வேண்டிய சூழ்நிலை..! கீர்த்திவதனா தனியாகத்தான் கோயில் போகிறாள்..!

அன்றிரவு அந்த விறலியைப் பார்த்ததும் ஒரு சமயம் கீர்த்திவதனாதான் மாறு வேடமிட்டு வந்திருக்கிறாளோ என்று தடுமாறிப் போனான் மதுரமொழி.

கீர்த்திவதனா அழகு கொஞ்சும் பொன் மயிலென்றால் அந்தப் பெண் ராஜாளிக் கழுகாகத் தெரிந்தாள். அவள் கையில் ஒளிர்ந்த முத்திரை மோதிரம் அவள் ராஜதானியில் எங்கும் செல்லலாம் என்கிற கௌரவத்தை வழங்கிக் கொண்டிருந்ததை மதுரமொழியின் அசுரக்கண்கள் அன்றைக்கே கவனித்து விட்டன.

இத்தகைய கௌரவம் அவன் வழங்கவில்லை..! தந்தையார் வழங்கியது..

ஆம்..! ஆம்..!! அந்தப் பெண்..! அரண்மனையின் பணிப்பெண்..! அரண்மனை மற்றும் அந்தப்புரத்தில் ரத்தினக்கடிகை, தூபக்கடிகை, மணற்கடிகை, நீர்க் கடிகை முதற்கொண்டு சூரியக்கடிகை ஈறாக இயங்கும் கடிகைகளைப் பார்வையிட்டு பழுதின்றி இயங்க வைக்கும் பணிக்காரி..! மேலோட்டமாகப் பார்த்தால் சாதாரணப் பணி போன்று தெரியும்..! ஆயினும் ராஜதானியின் மூலை முடுக்கெங்கும் நித்தமும் நடமாட இதை விட இன்னொரு பணி என்ன வாய்ப்பைக் கொடுத்து விட முடியும்?

அந்தப் பெண்ணின் பெயர்தான்... அஷ்ட சித்திகளுள் ஒன்று...

அணிமா..! ஆம்.. அணிமா..!

தொடரும்

எழுதியவர் : அருணை ஜெயசீலி (9-Nov-15, 11:20 am)
பார்வை : 195

மேலே