கைடு - நிமிட கதை

கைடு!

ஜெ ய்சல்மீர் ஹவேலிகளைச் சுற்றிப் பார்க்க நான் போயிருந்தபோது, “கைடு வேணுமா சார்?” என்றபடி அந்தச் சிறுவன் ஓடி வந்தான்.

எட்டு வயதுதான் இருக்கும். கிழிந்த சட்டை. கலைந்த தலை. மெலிந்த உடம்பு. ‘இவனுக்கு என்ன தெரிந்திருக்கப் போகிறது!’ என்ற நினைப்பை, அவன் மீதான இரக்கம் ஒதுக்கியது.

“சரி, வா!” என்றேன்.

அவன் உற்சாகமாக ஆரம்பித்தான்... “இது பட்வோ கீ ஹவேலி. அதோ... அது ஒரு காலத்தில் இந்த ஊரில் பிரதம மந்திரியாக இருந்த சாலிம் சிங்குடையது. இதோ, இந்த ஹவேலி, அரச சபையில் பிரபுவாக இருந்த பிரேம் சந்த்தினுடையது. உழைப்பால் உயர்ந்து பெரும் பணக்காரரானவர் அவர். ஆனால், அவருக்குப் பின் வந்த சந்ததிகள் சோம்பேறிகள் மட்டுமல்ல; உல்லாச கேளிக்கைகளில் ஈடுபட்டு அத்தனைச் சொத்துக்களையும் தொலைத்தவர்கள்...”

“அட, இத்தனை விவரமும் உனக்கு எப்படித் தெரியும்?” என்றேன் ஆச்சர்யமாக.

“தெரியாமல் என்ன சார், அந்தப் பரம்பரையில் எங்க அப்பா நான்காவது தலைமுறை. உடம்பு சரியில்லாமல் இருக்கும் அவருக்கு மருந்து வாங்கக்கூட முடியாமல், நான் கைடு வேலை பார்க்கிறேன்..!”

- லக்ஷ்மி ரமணன்

எழுதியவர் : படித்தேன் பகிர்ந்தேன் (9-Nov-15, 3:46 pm)
பார்வை : 189

மேலே