என்னுடைய டிக்கெட்டை நீ எடுத்துக்கொள்

35. என்னுடைய டிக்கெட்டை நீ எடுத்துக்கொள்.


ஜிரால்டா பார்பீஸ் காந்திஜியை இதற்கு முன் ஒருபோதும் சந்தித்ததல்லை. முதன்முதலாக அவள் இங்கிலாந்திலிருந்து பம்பாய் வந்து இறங்கியதும், அடுத்த வண்டியிலேயே தான் லாகூருக்குச் செல்லவேண்டுமென அவளுக்குத் தெரியாது. வழியில் சிறிது நேரம் கழிந்ததால் ரயிலடிக்குப் போய்ச்சேர சிறிது தாமதமாகிவிட்டது. வண்டி புறப்படத் தயாராக இருந்தது. பெண்களுக்காக இரண்டாம் வகுப்புப் பெட்டி ஒன்று மட்டும் அதில் இருந்தத. அதிலும் ஏராளமானவர்கள் ஏறியிருந்தார்கள். இடத்தைப் பிடிப்பதற்காக அவள் இங்கு மங்கும் ஓடித்திரிந்தாள். ஆனா பயன் இல்லை. திடீரென்று அவளுடைய பார்வை காலிப்பெட்டி ஒன்றின் மீது விழுந்தது. அது முதல்வகுப்புப் பெட்டி. அதிகப்பணம் கொடுத்தாவது முதல் வகுப்பில் போய் ஏறிவிடலாம் என நினைத்துக் ‘கார்டி’டம் செல்வதற்காக அவரைத் தேடினாள். அது ‘ரிசர்வ்’ செய்யப்பெட்டி என்பதை அவசரத்தில் அவள் பார்க்கவில்லை.

ரயில் பெட்டியில் நுழையும் வாயிலில் சிலர் நின்று கொண்டு பேசிக்கொண்டிருந்தனர். அதில் ஒருவர் அம்மாதுவை நிறுத்தி, ”நான் தங்களுக்கு ஏதாவது உதவி செய்யவேண்டுமா?” என்றார்.

அந்தமனிதர் அதிக உயரமில்லாமலும், எளிய கபடமற்ற முகத்தோற்றத்துடனும், பொக்கை வாயுடனும் இருந்தார். அதற்குள் வண்டி புறப்பட ‘கார்டு’ ‘விசிலு’ம் ஊதியாயிற்று. உடனே அம்மனிதர் ‘கார்டு’ பக்கம் திரும்பிச் சமிக்ஞை காட்டினார். பச்சைக்கொடியைக் காண்பிக்கத் தயாராயிருந்த கார்டு உடனே வண்டியை நிறுத்துவதற்கு மறு ‘விசில்’ கொடுத்தார். அதற்குள் அந்தக் கலக்கமுற்ற மாது தன் கதையைச் சொல்லி முடித்திருந்தாள். மற்றொரு மனிதர் இதைப்பார்த்துச் சங்கடப்பட்டுக் கொண்டிருந்தார். உடனே அம்மனிதர் வேஷ்டியில் மடித்து வைத்திருந்த முதல் வகுப்பு டிக்கட்டை அம்மாதினிடம் கொடுத்துவிட்டு அவள் வைத்திருந்த டிக்கெட்டைக் கேட்டார்.

இம்மாதிரி கேட்டதை மற்றொரு மனிதர் ஆட்சேபித்தார். ஆனால் டிக்கெட்டை எடுத்துக் கொடுத்த அம்மனிதரோ எல்லோரையும் அடக்கிவிட்டார். இதற்குள் அங்கு கூட்டம் சேர்ந்துவிட்டது. வண்டி நின்றுபோய்விட்டதன் காரணத்தையறிய ஸ்டேஷன் மாஸ்டர் ஓடோடியும் வந்தார். ஆனால் அந்த விசித்திர மனிதரோ வழக்கம்போல் அமைதியாக ஒரு கூலியிடம் அம்மாதின் சாமான்களை உள்ளே வைத்துவிட்டுத் தனது சாமான்களை வெளியே எடுத்து வைக்குமாறு கூறினார்.

”விஷயம் இதுதான். நான் முதல் வகுப்பில் பிராயாணம் செய்ய விரும்புவதில்லை. என் நண்பர்கள் எனக்குத் தெரியாமலேயே முதல் வகுப்புச் சீட்டை வாங்கி ரிசர்வ் செய்துவிட்டார்கள். நானும் லூகூர் தான் செல்கிறேன். ஆகையால் இடம் மாற்றிக்கொள்வதில் எனக்கு மகிழ்ச்சியே” என்று அம்மனிதர் சொன்னார்.

வியப்புக் குறிகளும் வினாக்குறிகளும் தோன்றக்கூடிய முகபாவத்துடன் கூடிய நயிலையில் அம்மாது அம்மனிதர் கூறியதை நிராகரிக்க முடியவில்லை; சீட்டை மாற்றிக்கொள்ளத்தான் வேண்டியதாயிற்று. அம்மனிதர் தன்னுடைய நண்பர்களின் வெறுப்புக்களைப் பற்றிச் சிறிதும் கவலைகொள்ளாமல் பின்னாலுள்ள மூன்றாவது வகுப்புப் பெட்டியில் ஓர் ஓரத்தில் இடமு பிடித்து உட்கார்ந்தார்.

அம்மனிதர் வேறு யாருமில்லை. சாக்ஷாத் மகாத்மாஜீயே.

எழுதியவர் : படித்தேன் பகிர்ந்தேன் (12-Nov-15, 6:51 pm)
பார்வை : 86

மேலே