கீழ்படிந்துள்ளவனாய் இருக்கிறேன்

4. சொல், நான் எவ்வளவு கீழ்படிந்துள்ளவனாய் இருக்கிறேன்


1947 - ம் வருடம் பீகாரிலுப் வகுப்புவாத்த் தீ கொழுந்து விட்டு எரிந்தது. அங்கு அமைதியை நிலைநாட்ட காந்தியடிகள் சென்றார். ஒருபக்கம் இவ்வேலை நடந்து கொண்டிருக்க இன்னொரு பக்கம் தம் அன்றாட வேலைகளையும் கவனித்து வந்தார். மனுகாந்தியும் அவருடன் தான் இருந்தாள். அவ்வப்போது அவளைப் பரீட்சிப்பதிலும் அடிகள் தவறுவதில்லை. அன்று கீதையின் மூன்றாவது, ஐந்தாவது அத்தியாயங்கள் வாய்மொழியிலும், எழுதுவதிலும் தேர்வு நடத்தினார். இரண்டிலும் அவள் வெற்றிப் பெற்றாள். காந்தியடிகள் மனுவிடம், உன்னைக்காட்டிலும் என்க்குத்தான் அதிக மகிழ்ச்சி; ஏனென்றால் தேர்வில் நான் வெற்றிப்பெற்றேன் என்றார்.

மனு, ‘உழைப்பு என்னுடையது, ஆனால் பெருமையை நீங்கள் எடுத்துக்கொள்கிறீர்களே!’ என்றாள்.

காந்தியடிகள் சிரித்துக் கொண்டே, ‘ஆனால் நான் இழிவையும் ஏற்றுக் கொள்ளத் தயாராக இருந்தேன் அல்லவா? உனக்கோ அப்படி இல்லை’ என்றார்.

இம்மாதிரி நகைச்சுவையுடன் பேசிக்கொண்டே காந்தியடிகள் உடனே வங்காளப் பாடத்தை எழுத உட்கார்ந்துவிட்டார். அதை சகோதர் நிர்மல் பாபுவிடம் காண்பித்தார். சற்று நேரத்திற்கு முன் தேர்வாளராக இருந்தவர் சிறிது நேரத்திற்குள் மாணவராக மாறிவிட்டார்.

முதல் நாள் இரவு 2.30 மணிக்கு எழுந்த அவர் அதன் பின் தூங்க முடியவில்லை. மக்களுக்குத்தாம் நினைப்பதை எப்படிப் புரியவைப்பது என்பதையே யோசித்துக்கொண்டிருந்தார் அவர். இருந்தபோதிலும் அவர் களைத்துப் போகவில்லை. எல்லா வேலைகளும் முறைப்படி நடந்தன. திருவாளர்கள் ஷா நவாஸ் கான், கான் அப்துல் காபார்கான் முதலியோருடன் பேசிக்கொண்டிருந்தார். அன்று விசேஷமாக மனுவைப்பற்றிப் பேச்சு வார்த்தை நடைப்பெற்றது. குடும்பத்தைப்பற்றிய முழுவரலாறும் கூறிமுடித்தார்.

பின்னர் உடம்பு தேய்த்து விடும்போது, ‘கான் சாஹிபுக்கும், ஷா நவாஸூக்கும் எல்லா விஷயமும் தெரியப்படுத்துவது என்னுடைய கடமை. ஆனால், அவர்களோ மிகுந்த பக்தியுடையவர்கள். என்னிடத்தில் உள்ள கெட்ட குணங்களைக் காண விரும்புவதே இல்லை. நேரம் கிடைத்த போதேல்லாம் நீ அவர்களிடம் பேசினால் உனக்கும் உலக விஷயங்களை அறிந்து கொள்ளும் வாய்ப்புக் கிடைக்கும். என் மீது நிறைந்த பக்தியுடையவர்கள் காட்டிலும், என் குறைகளைக் காண்பவர்களை நான் பெரிதும் விரும்புகிறேன். இதில் தான் என்னுடைய நன்மை இருக்கிறது. இதனால், நான் வழி தவறிப்போகிறேனோ என்று எண்ணிப்பார்க்க வாய்ப்பு ஏற்படுகிறது’ என்று மனுவிடம் சொன்னார்.

காந்தியடிகள் இரவு 2.30மணியிலிருந்து விழித்துக் கொண்டிருந்தார் என மனுவிற்குத் தெரியும். ‘தாங்கள் இப்பொழுது ஓய்வெடுப்பது நல்லது. 2.30 மணியிலிருந்து விழித்துக்கொண்டிருக்கிறீர்கள். எனக்கு உலக அறிவைச் சொல்லிக்கொடுக்கும் பொறுப்பை வேறு மேற்கொண்டிருக்கிறீர்கள். இந்த பாவம் எல்லாம் எனக்கே சாரும்’ என மனு கூறினாள்.

காந்தியடிகள் இதற்கு இசைந்தார். இருபது நிமிடங்கள் வரை தூங்கினார். பிறகு விழித்தவுடன், ”பார், உன் ஆலோசனைப்படி நடந்ததால் இப்பொழுது நான் புத்துணர்வு பெற்று சுறுசுறுப்பாக இருக்கிறேன். சொல், ‘நான் எவ்வளவு கீழ்படிதலுள்ளவனாய் இருக்கிறேன்’ என்று பகர்ந்தார்.

எழுதியவர் : படித்தேன் பகிர்ந்தேன் (13-Nov-15, 6:17 am)
பார்வை : 243

மேலே