ஒரு ஊரில் ஒரு சிட்டு குருவி இருந்தது

ஒரு ஊரில் ஒரு சிட்டு குருவி இருந்தது அதற்கு வினோதமான பொழுதுபோக்கு..

ஒவ்வாருவரும் ஒவ்வொன்றை சேகரிப்பது போல தனக்கு பின்னால் ஒரு பை-யை கட்டிகொண்டு வினோதமான உணர்வுகளை மனித இனத்திலிருந்து சேகரிக்க ஆரம்பித்தது.....

மனிதர்களுக்கு இடையே ஒரு இடத்தில் சண்டை நடப்பதைப் பார்த்தால் அங்குள்ள கோபத்தை அது சேகரிக்கும்,இன்னொரு இடத்தில் இருக்கும் ஏமாற்றத்தை அது சேகரித்து கொள்ளும்,பொறாமையில் ஒருவன் தீயாக எரிவதை பார்த்தால் சிட்டு குருவிக்கு சந்தோஷம் வந்து விடும்.தன் பையில் பொறாமையை சேர்த்து கொள்ளும், இப்படி பார்க்கும் இடமெல்லாம் அபூர்வமான, வினோதமான உணர்வுகளை சேகரிக்க ஆரம்பித்தது..

மனிதர்களின் சண்டைகளில் தான் எத்தனை விதம்! பொறாமைகளில் எத்தனை புதுமாதிரிகள்! பேராசைகளின் அடிபடையிலான வினோதமான உணர்வுகளுக்கோ அளவே இல்லை, தனது சேகரிப்பினை எண்ணி மகிழ்ந்து போனது அது,இன்னும் சில நாட்களில் அதன் குட்டி பை வினோத உணர்வு சேகரிப்புகளினால் நிரம்பி் தழும்ப போகிறது.....

ஒரு நாள் அதற்கு பறப்பதற்கு சற்று கஷ்டமாக இருந்தது, இது வரை லகுவாக மயிலிறகு போல ஜம்மென்று வானில் சீறி பாய்ந்த அதனால் இன்று வேகமாக பறக்க முடியவில்லை.

சோர்ந்து போன அது,ஒரு மரத்தில் வந்து உட்கார்ந்தது,.அதனை பார்த்த அதன் நண்பனான நாய், "என்ன குருவி! வழக்கிற்கும் மாறாக இப்படி சோர்ந்து உட்கார்ந்திருகிறாயே! உடம்புக்கு என்ன?" என்றது.

நண்பனே என்னால் பறக்க முடியவில்லை, வேகமாக செயல்பட முடியவில்லை, எனது ஆற்றல் போய் விட்டதை போல் உணர்கிறேன், காரணம் புரியவில்லை என்றது.நண்பனான நாய், "அது சரி,உன் பின்னால் ஒரு பை வைத்திருகிறாயே, அதில் என்ன இருகிறது? "என்று கேட்டது.

"அதுவா,என்னுடைய சேகரிப்புகளான உணர்வுகளை வைத்திருகிறேன்! "என்றது குருவி, அப்படியா? என்ன என்ன உணர்வுகள்? எனக்கு சொல்லேன் என்றது நாய்.

எங்கு பார்த்தாலும் ஏமாற்றம், கோபம், பொறாமை,சோகம், பேராசை இவையெல்லாம் வேறு வேறு ரூபத்தில் விதவிதமாக எனக்கு கிடைத்தன.அனைத்தையும் சேகரித்திருக்கிறேன் என்றது குருவி.

அப்படியா!, இந்த பை தான் உன்னை பறக்கவிடாமல் செய்கிறது என நான் எண்ணுகிறேன்,இதை கவிழ்ந்து கொட்டி பாரேன் என்றது நாய்..

சே! புரியாமல் பேசுகிறாயே! இது மிகவும் சிறிய பை, இதில் கனமே இல்லை என்றது குருவி, நாய் நண்பன் விட வில்லை "எனக்காக நான் சொல்வதை செய்து பாரேன் "என்றது அது.

ஒத்து கொண்ட குருவி, தன் பையிலிருந்து ஒரு கோப உணர்வை எடுத்து கீழே போட்டது, அடுத்த கணம் வானில் ஜிவ்வென்று பறந்தது.

அதிசயத்து போன அது இன்னொரு உணர்வான பொறாமை எடுத்து கீழே போட்டது, என்ன அதிசயம்! இன்னும் ஆற்றல் கூடி அதிக உயரத்தில் பறக்க ஆரம்பித்தது, ஒவ்வொன்றாக அது கீழே போட போட முன்பிருந்ததை விட லேசாக மாறி அதிக உயரத்தில் பறந்து பறந்து விண்ணையே தொட்டு விட்டது...

சிறிது காலம் சென்ற பின்னர் அது நாயை சந்தித்த போது சொன்னது நண்பனே! ஒரு அரிய உண்மையை எனக்கு நீ உணர்த்தி விட்டாய், இந்த எதிர்மறை உணர்வுகளை சேகரிக்க கூடாது.. அவை மிக சிறியவை போல
தோற்றமளித்தாலும் அதன் பாரம் மிகவும் பெரிது..அதுமட்டுமல்ல அவை என் சக்தியை உறிஞ்சி விட்டன,ஒவ்வொன்றாக அவற்றை கழட்டி விட கழட்டி விட எனது ஆற்றலும் வேகமும் முன்பை விட பல நூறு மடங்கு பெருகிவிட்டது, விண்ணையே என்னால் இப்போது தொட முடிகிறது..

மனிதர்கள் இதுபோ‌ன்ற உணர்வுகளை சுமக்காமல், அவ்வப்பொழுது இவற்றை கழட்டி விட்டால் விண்ணை தொட்டுவிடலாம்........

எழுதியவர் : செல்வமணி - மீள் பதிவு (15-Nov-15, 7:40 pm)
சேர்த்தது : செல்வமணி
பார்வை : 465

மேலே