காலைச் சாரல் 20 - மழை

19-11-2015

அதிகாலை எண்ணங்கள் - மழை

நேற்று அந்த மூன்று சக்கர வண்டியைத் தள்ளிக்கொண்டு வந்த பெண்மணியைப் பார்த்தபின்தான் நினைவுக்கு வந்தது சென்ற ஞாயிறு மழையின் அடுத்தநாளும் பார்த்தது....

திங்கள் அன்று அவர்களைத் தெருவில் பார்த்தபின் வீட்டில் தனியே சேர்த்து வைத்துள்ள நெகிழிப் பொருட்களை கொடுக்கச் சென்ற போது, மழையில் ஒரு பாலிதீன் தொப்பி அணிந்துகொண்டு வழக்கம்போல் குப்பை அள்ள வந்திருந்தார்... "ஏன் சார் மழையில் வந்தீர்கள் நான் வந்து வாங்கிக் கொள்ளமாட்டேனா ...? என்ற கரிசன வினாவுடன்... அன்றும் வந்திருந்தார்.... தொடர்ந்து இன்றுவரை எல்லா நாட்களிலும் குப்பை அள்ள வந்துள்ளார் அந்த மாநகராட்சித் துப்புரவு தொழிலாளி....

அதுபோல தினம் குப்பைத் தொட்டியில் உள்ள குப்பைகள் லாரியின் மூலம் அகற்றப்படுவது தொடர்ந்து நடந்து கொண்டிருக்கிறது... இவர்களை இந்த அடை மழை பாதித்திருந்தாலும் இவர்கள் அதை வெளிக் காட்டிக்கொள்ளவில்லை........ கருமமே கண்ணாயினர்! வாழ்த்துக்கள்!
***

எங்கள் வளாகத்தில் சென்ற திங்கள் அன்று முதல்நாள் பெய்த மழையின் காரணமாக மின்சார ஜங்ஷன் பெட்டியின் அருகில் தண்ணீர் தேங்கத் துவங்கி இருந்தது.... ஜங்ஷன் பெட்டியை தாழ்வான பகுதியில் வைத்து சுற்றி தொட்டிபோல் கட்டியிருந்தார்கள்... மின்துறைக்கு தொடர்பு கொள்ள உடனே வந்து மின்சாரத்தை துண்டித்துவிட்டு சென்றுவிட்டார்கள்.... தண்ணீர் அளவு குறைந்தவுடன் தொடர்பு கொள்ளச் சொன்னார்கள்... ஆராய்ந்ததில் சுற்றியுள்ள நிலத்தடி நீரின் அளவு உயர்ந்துள்ளதால் அந்த இடத்தில ஊற்று கிளம்பி உள்ளது என்று.... ஒரு மோட்டார் வைத்து தண்ணீர் இறைக்க இறைக்க வந்துகொண்டே இருந்தது ... (அன்று இரவு வரை மழை இல்லாவிட்டாலும் தொடர்ந்து மோட்டார் இயங்கிக் கொண்டிருந்தது... )

தண்ணீர் அளவு குறைந்தபின் மின்துறைக்குத் தெரிவிக்க அவர்கள் வந்து மீண்டும் மின் இணைப்பு தந்தார்கள்..... தண்ணீர் அளவு உயர்ந்தால் தெரிவிக்க கூறினார்கள்.... ஒரு மூன்று மணி நேரம் கழித்து அவர்களே தொலைபேசியில் தொடர்பு கொண்டு தண்ணீர் அளவு கட்டுக்குள் இருக்கிறதா என்று அக்கறையாக விசாரித்தார்கள். முக்கியமாக எங்கள் பகுதியில் மின்சாரம் தடையின்றி கிடைத்தது.... மின்துறையினர் இரவுபகல் பாராமல் பொதுமக்களுக்காக உழைத்தனர் என்பதே காரணம் ....
***

இதுபோல் பல அரசு அலுவலர்களும் அதிகாரிகளும் இரவு பகல் பாராமல் உழைத்துக் கொண்டிருக்கிறார்கள் என்பது உண்மை...
****

எதிர் வளாகத்தில் (புதிதாக கட்டப்பட்டது ) உள்ளவர்கள் இன்றும் underground electrical ducting - ல் உள்ள நீரை மோட்டார் வைத்து சேந்திக் கொண்டிருக்கிறார்கள்... இதற்குக் காரணம் மழை அல்ல... ஊற்று நீர் வராதபடி ducting அமைக்காத தவறு.... அருகில் உள்ள காலி மனைகளில் உள்ள நீர் வற்றும்வரை அங்கே ஊறிக் கொண்டுதான் இருக்கும்...
***

சென்ற திங்கட் கிழமை மாலை குடையுடன் ஒரு சுற்று எங்கள் பகுதியை சுற்றிப் பார்த்து வந்தேன் .... பள்ளமான காலிமனைகள் /பள்ளமான ஒரு வீதியைத் தவிர வேறு எங்கும் ஒரு சொட்டு (மீண்டும் கூறுகிறேன் ஒரு சொட்டு ) தண்ணீர்கூட இல்லை.... பிரதான வீதியிலும் அப்படியே.. காரணம் சென்ற ஆண்டு அமைக்கப்பட்ட மழை நீர் வடிகால் கால்வாய்கள்... மற்றும் சிறப்பாக செயல்படும் அரசு இயந்திரமும்தான் காரணம்..... நிற்க....

***
திங்கள் / செவ்வாய் நாட்களில் தீவுபோல் தண்ணீரில் தவித்த மக்களின் காட்சியைத் தொலைக்காட்சியில் கண்டோம்.... அவர்களை ஏமாற்றி நீர்நிலைகளுக்கு அருகில் நிலங்களை விற்றவர்களையும், (நீர்நிலைக்கு உள்ளேயும் ) தண்ணீர் போக்குக்கு இடையூறாக கட்டுமானம் செய்தவர்களையும் என்ன செய்யப்போகிறோம்.... அன்று தவித்த மக்களின் நிலை இன்று என்ன....? நிலமை சீரானதா..? என்ற எந்தத் தகவலும் இல்லை.... (படகில் இருந்துகொண்டு மூச்சுவிடாமல் பேசியவர்கள் எங்கே ?)

மீண்டும் மீண்டும் பழையக் காட்சிகளே காட்டப்படுகிறது.... (இதிலும் ஏதாவது லாபம் பார்க்கிறார்களா...?)
****

சில ஆண்டுகளுக்குமுன் இதுபோன்ற பேரிடர் ஏற்பட்டால் பொதுமக்களும் துணைநின்று அரசுக்கு உதவுவார்கள்.... இப்பொழுதெல்லாம் வேடிக்கை பார்க்கவும், கேமரா முன் முகம் காட்டவும் அதிக ஆர்வம் காட்டுகிறார்கள்.... இல்லை அதுபோன்ற செய்திகள் இருட்டடைப்புச் செய்யப் படுகிறதா....?

****
ஒரு சுரங்கப் பாதையில் மூழ்கிய பேருந்தை இருவர் வெளிக்கொண்டு வருவதை 200 பேர் வேடிக்கை பார்க்கிறார்கள்...!

****
அயராது உழைத்த அரசு அலுவலர்களுக்கு ஏன் ஒரு வார்த்தை கூட பாராட்டு இல்லை.....

சமுதாயக் கண்ணோட்டம், கவிதையிலும், முக நூல்களில் மட்டுமே காணத் தொடங்கி விட்டோமா...? அதுவும் குறை கூற மட்டும்....?
--- முரளி

எழுதியவர் : முரளி (19-Nov-15, 10:25 am)
பார்வை : 267

சிறந்த கட்டுரைகள்

மேலே