இனி அப்படி பண்ணமாட்டேன்

சிங்கப்பூர் சீமையிலே..
.........................................
ஒரு சோப்பு வாங்கினேன் .
கடைக்காரர், எனக்கும்,நான் வாங்கிய ஒற்றை பொருளுக்கும் மரியாதை கொடுக்கும் விதமாக
அதை ஒரு பாலிதீன் பையில் போட்டு கொடுத்தார்.
வெளியே வந்த நான்,
சோப்பை தூக்கி சோப்பில் [சட்டை பையில் ] போட்டுக்கொண்டு,அந்த பாலிதீன் பையை விரல்களிருந்து சாலையில் நழுவ விட்டேன்.
[இந்திய புத்தி.சிங்கப்பூர் போன புதிதில் நடந்தது இது.]
சில விநாடிகளில்,பின்னாலிருந்து ஒரு கனைப்பு சத்தம்.
நான் திரும்பி பார்த்தேன்.
எனக்கு பின்னால்,ஒரு பத்தடி தூரத்தில் நடந்து வந்துக்கொண்டிருந்த வயதான ஒரு சீன பெண்மணியின்
கைகளில் இருந்தது நான் விட்டெறிந்த அந்த பாலிதீன் பை.
சிங்கப்பூரில் ,பொதுஇடங்களை மாசு படுத்துவோருக்கு
தண்டனை உண்டு என்பதை ,நான் பழைய நண்பர்கள் மூலம் அறிந்த ஒன்று தான்.
இருந்தாலும்,இந்த சாதாரண பாலிதீன் பை அவ்வளவு பெரிய விளைவயா உண்டாக்கிவிடப்போகிறது /என்று நான் கொஞ்சம் அசால்ட் ஆக நினைத்தேன்.
ஆனால், இப்போது அந்த சீன பெண்ணின் கையிலிருக்கும் நான் விட்டெறிந்த பாலிதீன் பை ,
எனக்கு மிகப்பெரிய ஆபத்தான பொருளாக தோன்றியது.
நான் ,நடையின் வேகத்தைக்கூட்டி,ஒரு தெருமுனையில் திரும்பி ,பின்னால் வந்துக்கொண்டிருந்த அந்த பெண்மணியை பார்த்தேன்.
'போலீசுக்கு தகவல் கொடுத்து விட்டாரா ..அல்லது,
துரத்திவந்து என் சட்டை காலரை பிடித்து
திட்டப்போகிறாரா 'என்ற பயத்தில்.
நல்லவேளை..
அப்படியொன்றும் நடக்கவில்லை.
என் கண்முன்பு ,அந்த பாலிதீன் பையை சாலையோரோமிருந்த குப்பைதொட்டியில் போட்டுவிட்டு ,என்னைப்பார்த்து சிரித்தார்.
அந்த சிரிப்பு,என்னை செருப்பால் அடிப்பது போல் இருந்ததால்..
பதிலுக்கு நானும் சிரித்து வைத்தேன்.
'இனி அப்படி பண்ணமாட்டேன் ' என்பது போல்.

எழுதியவர் : செல்வமணி (19-Nov-15, 11:31 pm)
பார்வை : 168

மேலே