கோபங்களின் கோபம்

விளையாட்டில் தன்னை
வேண்டுமென்றே தள்ளிவிட்டது
யாரென்று தெரிந்த போதும்
வெளிவராத கோபம்...

எதிர்பார்க்கப் பட்ட
பிறந்தநாள் பரிசு
ஏமாற்றம் தந்த போதும்
ஏற்படாத கோபம்...

பசியே இல்லை என்றாலும்
பதினைந்து நிமிடத்திற்குள்
தின்றே தீர வேண்டுமென்று
திணிக்கும் ஆயாம்மா மேல்
தோன்றாத கோபம்...

பள்ளியில் படிப்பது போதாதென்று
வீட்டுப் பாடம் கொடுத்து
வெறுப்பேற்றும் நேரங்களில்
வெளிப்படாத கோபம்...

விடைகள் சரியாக இருந்தும்
கையெழுத்திற்காக மதிப்பெண் குறைத்த
கணக்கு ஆசிரியர் மேல்
காட்டத் தெரியாத கோபம்...

இஷ்டப் பட்டதை படிக்க விடாமல்
கஷ்டப் பட்டு காசு கொடுத்து
கண்டதை கற்று கொடுக்கும்
கல்வி முறை மேல்
கண்டிக்கத் தெரியாத கோபம்...

ஒரே ஒருமுறை மட்டும்
உச்சக் கட்ட கோபம்
உடனே வருகிறது குழந்தைகளுக்கு
"உனக்கு ஒன்னும் தெரியாது...
சும்மா இரு.." என்கிறபோது...

எழுதியவர் : ஜின்னா (22-Nov-15, 7:23 pm)
பார்வை : 1005

மேலே