நட வண்டி 2 - சிவராமன் வாத்தியாரு

"அக்குளுக்குக் கீழபுடிச்சிக் கிள்ளுனாரு...... கருத்தத் தோலுகூட செவந்து போயிரும்" ன்னு....
நாங்க....எங்களுக்கு அடுத்த வருசம் படிக்க வாறவைய்ங்ககிட்ட பயமுறுத்திச்சொல்லுற அளவுக்கு கண்டிப்பானவரு சிவராமன் சாரு...
அவருக்கு எந்த சாரு சொல்லிக்குடுத்திருப்பாருன்னு தெரியல... நல்லா மனசுல பதிச்சிவச்சிக்கிட்டு கொஞ்சம் பெரிய மோதரத்தொடவே எங்க மண்டையிலயும் பதியம் போட்ருவாரு... இப்ப வாற " தெறிக்க விடலாமா" ல்லாம் நாங்க அப்பவேஅனுபவிச்சவைங்க....

இம்புட்டு கொடுமையா தண்டிக்கிற சிவராமன் சாரு பொம்பளப்புள்ளைகள மட்டும் தொடக்கூட மாட்டாரு... இதுனாலேயே அப்ப இருந்த அறிவுக்கு எங்க கிளாஸ் பொம்பளப்புள்ள பேருகளையும் பக்கத்துல செமினி கணேசன் படத்தையும் ஒட்டி சிவராமன் சாருன்னு பேரு எழுதி... காரணம் புரியாம வேண்டுதலு பூசை எல்லாம் போட்ட காலமெல்லாம் கண்ணுக்குள்ளயே நிக்கி...

வருசந் தவறாம திருச்செந்தூரு கோயிலுக்குப் போற சிவராமன் சாரு.... சாம்பல் நெறத்துல கடல்பாசி மாதிரி இருக்குற ஒண்ண வாங்கிட்டு வந்து எல்லாருக்குங் குடுப்பாரு... அது சிலேட்டு குச்சி மாதிரியே எழுதும். ஆனா தேயவே தேயாது. இது வருசந் தவறாம நடக்கும்..... ஆக... எங்களுக்கு சிலேட்டுக்குச்சி வாங்குற காசு ஒருமூணு மாசத்துக்கு மிச்சம்....

யாருயாரெல்லாம் ரொம்ப சேட்டை பண்றமோ.. அவிங்களஎல்லாம் புடிச்சி.. பள்ளிக்கொடம் முன்னால குழி தோண்டச்சொல்லி... அவரு வாங்கிட்டு வந்த மரக்கண்ணுகள நடச்சொல்லுவாரு.. மரத்துக்கு ரெண்டுன்னு பொம்பளப்புள்ளைகள மட்டும் தெனமும் தண்ணி ஊத்தச்சொல்லுவாரு...
எங்களுக்கு அடப்பு வக்கிற வேல.... இப்படியா வருசத்துக்கு பத்து மரமாவது பள்ளிக்கொடத்த சுத்தி நட்டு வச்சிருப்பம்...என்னதாங் கோவம் வந்தாலும் எங்களக் கிள்ளுவாரே தவிர... மரத்துல.. ஒரு சில்லுப் பேக்கமாட்டாரு...

ஒவ்வொரு வாட்டி பயலுக படிச்சி முடிச்சிப் போறப்ப.. நல்லாருன்னு சொல்லுவாரு... அப்ப மட்டும் பொம்பளப் புள்ளைக தலையத் தடவி அவிகளையும் நல்லாருன்னுசொல்லுவாரு...
அப்படித்தாம்.. கடேசியா மாத்தல் வந்தப்ப எல்லா மரத்தையும் தடவிக்குடுத்து நல்லாருன்னு சொல்லிட்டுப் போனாராம்.....

இந்த வாட்டி ஊருக்குப் போனப்பகூட பள்ளிக்கொடத்துக்குப் போயி... நாங்க வளத்த மரத்தச்சுத்தி தடவிப்பாத்தேன்...
சிவராமன் சாரு... பச்சையா சிரிச்சாரு.....!!

எழுதியவர் : கட்டாரி (சரவணா ) (24-Nov-15, 9:04 am)
பார்வை : 186

மேலே