இயற்கை நேசி

குளங்கள் இருந்த இடத்தில் முன்னர்
==குப்பைக் கொட்டி நிரப்பி வைத்தோம்
வளமாய் நீர்சே மித்தத் தன்மை
==வறண்டு போக வழிச மைத்தோம்
அளவாய் சேர்க்கும் நினைவை விட்டு
==அல்பத் தனத்திற் காசை பட்டே
களவாய் நிலத்தை அடைந்து வீட்டைக்
==கட்டிக் கொண்டு குடிபு குந்தோம்

பிழையோ சரியோ எதுவென் றாலும்
==பிறகு பார்ப்போம் என்றி ருந்தோம்
மழையோ வெயிலோ எதுவந் தாலும்
==மரம்போல் நிற்கத் துணிந்தி ருந்தோம்
அழையா விருந்தாய் ஊருக் குள்ளே
==அடித்த மழையால் துடித்து விட்டோம்
நுழையா இடமும் நுழைந்த நீரால்
==நுணல்போல் பாயும் நிலையும் கொண்டோம்

வயலாய் இருந்த நிலத்தி லெல்லாம்
==வரிசை யாய்பல வீடு கட்டி
ரியல்எஸ் டேட்டேன் னுவியா பாரம்
==ரியலாய் நடக்க உதவி நாமும்
முயலாய் பாய்ந்து முன்னால் நின்று
==முயன்று வீட்டைக் வாங்கிக் கொண்டு
புயலும் மழையும் வந்து தங்கும்
==பொழுதில் இன்று புலம்பு கின்றோம்

வடிகால் இருக்கும் இடத்தி லெங்கும்
==வகைவகை யாக ஞெகிழிப் போட்டு
முடிவாய் அடைத்து வைத்த சாபம்
==முழுதாய் நமக்கே திருப்பி வந்து
படிடா மனிதா என்று சொல்லி
==படகுப் போட்டு இழுத்துச் செல்லும்
கடினப் பாடம் இயற்கை எமக்கு
==கற்றுத் தந்த வாழ்க்கை வேதம்

ஆற்று மணலைத் திருடி எடுத்து
==அழகாய் கொண்டு போகும் போதும்
சேற்று வயலை சிதைத்து நாட்டை
==சீரழித் துவைக்கும் போதும் உயர்ந்த
காட்டை அழித்து கடத்திச் செல்வோர்
==கண்டும் காணா திருந்த தற்கும்
ஊற்றிய மழையும் வழங்கிய தண்டனை
==உணர்ந்து இயற்கை வளத்தைப் பேணு.

கொடுக்க வில்லை என்ற போது
==கொதித்து நின்ற நாங்கள் இயற்கை
கொடுத்த போதும் அளவுக் கதிகம்
==கொடுத்த தென்று குழம்பு கின்றோம்
எடுத்த தற்கும் குறைகள் சொல்லி
==எடுத்தெ ரிந்து பேசி இயற்கை
விடுக்கும் செய்தி தன்னை ஏற்று
==விழிப்பாய் இருக்க மறந்து போனோம்

அடுத்த டுத்து என்ன நடக்கும்
==அதுஎ மக்குத் தெரிவ தில்லை
படுத்தெ ழும்பும் போதில் வாழ்வும்
==பறிபோய் விடுமோ புரிவ தில்லை
நடுத்தெ ருவினிலே நிற்கும் பொல்லா
==நிலைவரக் கூடும் அதனை இங்கு
தடுப்ப தற்கு மட்டு மேனும்
==தக்க வழிசெய். இயற்கை நேசி .!

*மெய்யன் நடராஜ்

எழுதியவர் : மெய்யன் நடராஜ் (இலங்கை) (27-Nov-15, 3:04 am)
Tanglish : iyarkai nesi
பார்வை : 1204

மேலே