சிவமயம் சிவாயநம

திருக்கயிலாய பரம்பரைத் திருவாவடுதுறை ஆதீனம் சைவ சித்தாந்த நேர்முகப் பயிற்சி வகுப்பில் சேர்ந்து படிப்பதனால் என்ன கிடைக்கும் என்பதைப் பற்றிப் பார்ப்போம்

1. சமயம் என்றால் என்ன?

சமையம் என்ற சொல் சமயம் என்று மருவிற்று, சமையம் என்பது பக்குவப்படுத்தலே ஆகும் ( சமைத்தல் எப்படி சமைப்பதற்கு தேவையான பொருட்களை சேகரித்து முறைப்படி சமைத்து சாப்பிடுகிறோமோ) அதுபோல மக்களைப் பக்குவப்படுத்தும் நெறிகளைக் கூறுவதே சமயமாகும்

2. சைவ சமயம் என்றால் என்ன?

மக்களைப் பக்குவப்படுத்தி வாழ்வாங்கு வாழ்வதற்குரிய குறிக்கோளை உணர்த்தி, அக்குறிக்கோளை அடைவதற்குரிய நெறிகளைத் தெளிவாகச் சுட்டிக்காட்டுவது சைவ சமயம் ஆகும் சைவம் சிவ சம்பந்தமுடையது சிவம் என்ற பெயர்ச்சொல்லடியாகத் தோன்றிய பெயரே சைவம் ஆன்மாக்கள் ( உயிர்கள்) வாழுங்காலத்தில் ( உலகியல் வாழ்க்கையில் அனுபவிக்கும் துன்பங்களை) விட வேண்டியவைகளை விடுவித்துப் பெற வேண்டிய முத்தி என்னும் உயரிய பேரின்பத்தைப் பெறும் வழிமுறைகளைக் கூறுவது சைவ சமயமாகும்

3. சித்தாந்த சைவம் என்றால் என்ன?

சித்தாந்த சைவம் என்பது வேத ஆகமங்களை முற்றும் பிரமாணமாகக் கொண்டு அவற்றின் பொருளை உள்ளவாறு உரைப்பது சித்தாந்த சைவம் ஆகும்

4. சித்தாந்தம் என்றால் என்ன?

சித்தம் + அந்தம் - சித்தாந்தம் ஆகும் சித்தம் - நிலை நிறுவப்பட்ட உண்மை, அந்தம் - முடிவு, முற்றும் முடிந்த மெய்ப்பொருட்கொள்கை ஒவ்வொன்றையும் நன்கு ஆராய்ந்து, இஃது அன்று என்று ஒதுக்கித் தள்ளிவிட்டு இறுதியில் இதுவே முடிந்த முடிவு, இதற்கு மேல் இல்லை என்று அறுதியிட்டுக் கூறும் தத்துவம் ஆதலின் சித்தாந்தம் எனப்பட்டது, சுருங்கச் சொன்னால் தத்துவச் சிந்தனைகளின் இறுதி முடிவிடம் என்று கூறலாம்

5. சைவ சித்தாந்தம் என்றால் என்ன?

பல சமயங்கள் பல்வேறு நெறிகளை மக்களுக்குக் காட்டின அவைகளை எல்லாம் உட்கொண்டு பிற சமயங்கள் முடிவாகச் சொன்னவற்றைக் கருத்தில் கொண்டு சிந்தித்து இதுவே முடிந்த முடிவு என்று யாவராலும் மறுக்க முடியாததொரு முடிவை உலகுக்குக் காட்டியது சைவசமயம், அந்த முடிந்த முடிவே சைவ சித்தாந்தம் எனப்பட்டது, சைவத்தின் கொள்கைகளே சைவ சித்தாந்த கொள்கையாகும்

சைவ சித்தாந்தம் வாழும் மனிதர்களுக்கு ஒரு வழிகாட்டும் நூல், சைவ சித்தாந்தம் உணர்த்தும் உண்மைகளை நன்கு அறிந்து கொண்டால் ஒரு பெரிய மாற்றம் ஏற்படும் நமது வாழ்க்கையிலே, இறை வழிபாட்டில் உறைப்பு, சிவபெருமான் மீது அளவற்ற உறைப்பு, துன்பங்களை வெல்லும் ஆற்றல், பில்லி,சூனியம், ஏவல்,ஜோதிடம், மற்றும் பரிகாரம் போன்ற மூட நம்பிக்கைகளையும் புறம் தள்ளும் துணிவு, மரண பயத்தை மாற்றும் வல்லமை, எக்காலத்தும் மகிழ்ச்சியோடு வாழும் தன்மை ஆகியவைகள் எல்லாம் தானே சிவபெருமானின் பெருங்கருணையால் நம்மிடத்தில் வந்து சேரும்

சைவ சித்தாந்த மெய்மைகளை ( உண்மையான உட்பொருளை) ஒரு நல்ல குருநாதரிடம் கேட்டு அதன்படி நடந்தால் வாழ்வில் வளமையும் மிக்க மகிழ்வும் பெற்று வாழலாம் ஆகவே சைவ சித்தாந்த வகுப்புகளில் சேர்ந்து பயன் பெற்று பிறந்த பிறவியின் பயனை பெறவும்

சைவ சமய நெறிகளிலும், சைவ சித்தாந்த நெறிகளிலும் நின்று வாழ்தலே வழிபாடு ஆகும்

ஒரு போதும் துன்பமில்லை எந்நாளுமே இன்பம் உண்டாகும்

எல்லாம் அவன் செயல் சிவன் செயல் ஆகும்

குருவருளும் திருவருளும் ஒரு சேர கூட்டிவைக்கட்டும்

திருச்சிற்றம்பலம்

எழுதியவர் : செல்வமணி - மீள் பதிவு (27-Nov-15, 10:52 pm)
சேர்த்தது : செல்வமணி
பார்வை : 583

சிறந்த கட்டுரைகள்

மேலே