தகுதியுள்ளவை தப்பிப் பிழைக்கும், தகுதியற்றவை அழிந்துவிடும்’

சார்லஸ் டார்வின் ... !

இந்தப் பேரைக்கேட்டாலே அல்லது படித்தாலே, உலகம் இருவேறுக் கூறுகளாகப் பிரிந்துவிடும். பரிணாமக் கொள்கையை நம்புகிறவர்கள், அதை நம்மபாதவர்கள், கடவுள் உலகையும் உயிரினங்களையும் படைத்தான் என்றும், கடவுள் என்று ஒன்று இல்லை என்றும் இருவேறுப் பிரிவுகளாக பிரிந்துவிடுவதைப் பார்க்கலாம். நாம் இதில் ஏதாவது ஒருப் பிரிவைச் சார்ந்தவர்களாகவோ, அல்லது மதில் மேல் பூனையாகவோ கண்டிப்பாக இருப்போம். அது அவரவர்களின் பின்னணியையோ, புரிதலையோப் பொறுத்தது. டார்வினின் பரிணாமக்கொள்கை, அது வெளியிடப்பட்ட நாள் முதலே ஒரு விவாதத்துக்குரிய கருத்தாகவே இருந்து வந்திருக்கிறது, இன்றும் காரசாரமாக விவாதிக்கப்படுகிறது. எல்லா விவாதங்களும் கடைசியாக கடவுள் என்று ஒன்று உண்டா இல்லையா என்ற வாதத்தில் வந்து முடிகிறது.

ஆனால், பாவம் டார்வின் தன் ஆராய்ச்சிகளை தொடங்கியது, கடவுள் என்ற கருத்தை ஒழிக்கவேண்டும் என்ற எண்ணத்தில் அல்ல!.

அவர் பாட்டுக்கு அவர் தன் வேலையை அதன் வழியிலே செய்துக்கொண்டேப் போனார். கடைசியாக கடவுள் என்ற கருத்து தானாகவே இதில் வந்து சிக்கிக் கொள்ளுகிறது!

அதனால் டார்வினையும், அவரின் கொள்கையான பரிணாமக்கொள்கையை ஆதரித்துப் பேசுபவர்களையும், பலர் ஒரு எதிரியாகவேப் பாவிக்கின்றனர். இப்போது நாம் காணப்போவது டார்வின் 'தகுதியானவைப் பிழைக்கும்' எனும் தத்துவத்தை உலகுக்குக் காட்டியது எவ்வாறு என்று தான்?

இப்போது அவர் வாழ்விலிருந்து சில துளிகள்.....

1809- ம் வருடம் செல்வச் செழிப்புள்ள குடும்பத்தில் பிறந்து, டாக்டருக்கு படித்தவர் டார்வின். சிறு வயதியிலிருந்தே டார்வினுக்கு புழு, பூச்சிகள், விலங்குகள் ஆகியவற்றின் மீது மிகுந்த ஆர்வம் இருந்தது. எடின்பர்க் சென்ற பிறகும் அவர் கற்கள், செடிகள், புழு, பூச்சிகள் ஆகியவற்றை சேமிக்கத் தொடங்கினார். இயற்கையின்மீது அப்படி ஒரு ஈடுபாடு அவருக்கு. மருத்துவம் படித்துக்கொண்டிருந்தபோது ஒருமுறை ஒரு குழந்தைக்கு அறுவை சிகிச்சை நடப்பதை பார்க்க வேண்டிய கட்டாயம் டார்வினுக்கு ஏற்பட்டது.

அப்போதெல்லாம் மயக்க மருந்தின்றி அறுவை சிகிச்சைகள் செய்யப்பட்டதால் அந்தக் குழந்தை பட்ட வேதனையைக் கண்டும், கேட்டும் மருத்துவத்தின்மீது இருந்த ஆர்வத்தை இழந்தார் அவர். தந்தைக்கு ஏமாற்றமாக இருந்தாலும் அடுத்து அவரை natural 'theology' அதாவது 'இறையியல்' பயிலுமாறு ஆலோசனை கூறினார். அதனை ஏற்று கேம்ஃப்ரிட்ஜ் (University of Cambridge) பல்கலைக்கழகத்தில் சேர்ந்தார் டார்வின்.

தென் அமெரிக்க கடலோரப் பகுதிகளில் ஆய்வு செய்ய HMS Beagle என்ற கப்பல் புறப்படவிருந்தது. கேப்டன் Robert FitzRoy-யின் தலமையில் செல்லவிருந்த அந்தப் பயணத்தில் கலந்துகொள்ளுமாறு டார்வினுக்கு அழைப்பு வந்தது. அதனை ஏற்றுக்கொண்டு 1831-ஆம் ஆண்டு டிசம்பர் 27-ஆம் தேதி கேப்டன் பிட்ஸ்ராயும், டார்வினும் பயணத்தைத் தொடங்கினர். ஐந்து ஆண்டுகள் நீடித்த அந்த வரலாற்று சிறப்பு வாய்ந்த பயணம்தான் பரினாம வளர்ச்சி சித்தாந்தம் உருவாவதற்கு அடிப்படை காரணமாக அமைந்தது. அந்தப் பயணத்தைத் தொடங்கியபோது டார்வினுக்கு வயது 22.

இங்கிலாந்தில் இருந்து கிளம்பிய‘பகீல்’ HMS Beagle எனும் கப்பல். சுமார் நான்கு ஆண்டு பயணத்திற்குப் பின் 1835-ம் ஆண்டு... மனித நடமாட்டமே இல்லாத கலோபஸ் தீவுக் கூட்டத்தில் நங்கூரமிட்டது. ‘பகீல்’ தீவிற்குள் நுழையும்போதே சார்லஸ் டார்வினுக்கு ஆச்சர்யம். கரையோரமாக முதிர்ந்த ராட்சச ஆமைகள் கூட்டம். கடலுக்குள் சுறாமீன்கள் துள்ளி விளையாடுவதையும், கூட்டமாக ஒரு மீன் கூட்டம் சரசரவென கரையேறுவதையும் பார்த்தவர் சற்றே நெருங்கியபோது அதிர்ந்தார். அவை மீன்கள் அல்ல... சின்னஞ்சிறு கால்களைக் கொண்ட பல்லிகள்.

மீன்களாக இருந்தவை சுறாக்களுக்கு பயந்து ஆபத்தில் இருந்து தப்புவதற்காக தங்கள் செதில்களயே கால்களாக மாற்றிக்கொண்ட ஜீவராசிகள் எனத் தெரிந்ததும் சந்தோஷத்தில் துள்ளிக் குதித்தார். மனித குலத்திற்கு அதிர்ச்சி தரக்கூடிய மாபெரும் அறிவியல் உண்மையை அறிந்துவிட்டாலும் எப்படி அதைச் சொல்வது எனத் தயக்கம் டார்வினுக்கு.

அதுவரை மற்றவர்கள் பொழுதுபோகிற்காக 'பகீல்’ என்னும் ஆராய்சிக் கப்பலில் ஊர் சுற்றுகிறார் என நினைத்திருந்தனர். டார்வின் அபூர்வ தாவரங்கள், அதிசய உயரினங்கள் என தேடி தேடிச் சேகரிப்பதை யாரும் அறிந்திருக்கவில்லை. அதனால் அவரை ஒரு ஆராய்ச்சியாளராக யாரும் கருதவில்லை. அதனால், ஒரு பெரும் உண்மையைக் கண்டுபிடித்தும் மனதில் போட்டு பூட்டி வைத்து புழுங்கினார் டார்வின்.

1838-ம் ஆண்டு மக்கள் தொகை பெருக்கம் பற்றி தாமஸ் மால்தூஸ் எழுதிய கட்டுரையை தற்செயலாக படித்தார் டார்வின். 'மக்கள் தொகை பெருகிக்கொண்டே வந்தாலும் ஒருகட்டத்தில் உணவுப் பஞ்சம் ஏற்பட்டு, போர் உண்டாகி, மக்கள்தொகை குறையத் தொடங்கிவிடும். தகுதியுள்ளவை தப்பிப் பிழைக்கும்

தகுதியற்றவை அழிக்கப்பட்டுவிடும்’ என்ற வரிகள் டார்வினை உலுக்கியது. அவரது ஆராய்ச்சியின் தடுமாற்றத்தை, அவருக்குள் இருந்த தயக்கத்தை அந்த ஒரே வரி அழுத்தமாய் தீர்த்துவைத்தது. ‘தகுதியுள்ளவை தப்பிப் பிழைக்கும்' என தனக்குள் ஆயிரமாயிரம் முறை சொல்லிப் பார்த்தார் டார்வின்.

எதிர்ப்புகளைப் பற்றி கவலைப்பட வேண்டியதில்லை என்ற முடிவுடன் தனது ஆராய்ச்சியை எழுதத் தொடங்கினார். எழுதி முடிக்க இருபது ஆண்டுகள் ஆகின. 1859-ம் ஆண்டு 'உய்ரினங்களின் தோற்றம்' என்ற புத்தகத்தை பலவித எதிர்ப்புக்களுக்கு மத்தியில் வெளியிட்டார் டார்வின்.

உயரினங்கள் அனைத்தும் சிறிது சிறிதாக மாற்றமடைந்து இன்றைய உருவத்திற்கு வந்திருக்கின்றன... என்பதை தன் ஆராய்ச்சியின் மூலம் பல்வேறு ஆதாரங்களுடன் விளக்கினார் டார்வின்.

1871-ம் ஆண்டு 'மனித வம்சம்' "Theory of Evolution' என்ற தனது அடுத்த ஆராய்ச்சி நூலை வெளியிட்டார் டார்வின். 'குரங்கில் இருந்து மனிதன் வந்தான்' என்கிற கருத்தை இந்த நூலில் வலியுறுத்தினார்.

இந்தமுறையும் பல்வேறு தரப்பிலிருந்து எதிர்ப்புகள் கிளம்பியது. அப்போதும் அவருக்கு கைகொடுத்தது ‘தகுதியுள்ளவை தப்பிப் பிழைக்கும்' என்ற மந்திர சொல்தான்.

"ஒவ்வொரு உயிரினமும் இன்னுமொரு உயிரினத்தின் பரிணாம வளர்ச்சியினால் உருவாகியது. அதுமட்டுமில்லாமல், இந்த வரிசையில் குரங்கிலிருந்து படிப்படியான பரிணாம வளர்ச்சி மூலம் மனிதன் தோன்றினான்" என்று டார்வின் கூறினார். பல ஆண்டுகால ஆராய்ச்சிகளின் அடிப்படையை வைத்து அவர் சமர்ப்பித்த கோட்பாடு அறிவியலால் ஏற்றுக் கொள்ளப்பட்டாலும், இன்றுவரை பலரால் இந்தக் கொள்கையை ஏற்க முடியாது என்று முன்வைக்கும் முக்கிய வாதம் ஒன்றும் உள்ளது.
.
'குரங்கிலிருந்து மனிதன் உருவாகியிருந்தால், இப்பொழுது குரங்குகள் எப்படி இருக்க முடியும்? அவைதான் மனிதனாக மாறிவிட்டனவே!' என்பதுதான் அந்த வாதம். கேட்கும்போது சரியானதாகத் தோன்றினாலும், இதற்கும் டார்வின் தனது கோட்பாட்டின் மூலம் பதில் சொல்லியே இருந்தார்.
.
அதாவது, குரங்கிலிருந்து மனிதன் தோன்றியிருந்தால், குரங்கு எப்படி இருக்க முடியும் என்பதற்கு டார்வின் சொன்ன விளக்கம் இதுதான்.

'ஒரு காட்டில் குரங்குகள் வாழ்ந்து வருகின்றன. அவை அனைத்தும் வாழ்வதற்கும், உண்பதற்கும் தேவையான அளவு பழங்கள் அந்தக் காட்டில் இருக்கின்றன. ஒரு காலகட்டத்தில் அந்தக் குரங்குகள் நன்றாக இனத்தைப் பெருக்குகின்றன. இப்போது காட்டில் உள்ள பழங்கள் அனைத்துக் குரங்குகளுக்கும் போதாத அளவுக்கு குரங்குகளின் எண்ணிக்கை அதிகரித்துவிட்டது. இந்த நேரத்தில் பலசாலியான குரங்குகள், பலமில்லாத குரங்குகளை உணவைப் பெற முடியாமல் அடித்துத் துரத்துகின்றன. இதனால் பலமில்லாத குரங்குகளுக்கு உணவு கிடைப்பது சிரமமாகின்றது. எனவே அந்தக் குரங்குகள் அந்தக் காட்டை விட்டு வெளியேறி வேறு இடத்துக்குச் செல்கின்றன.

வேறு இடங்களுக்குச் சென்ற குரங்குகளுக்கு ஆச்சரியம் காத்திருக்கிறது. அங்கு பழங்கள் மரத்தில் ஏறிப் பறிக்கவே தேவையில்லாமல், நிலத்திலிருந்தே பெற்றுக் கொள்ளும்படி இருக்கின்றன. அதனால் அந்தக் குரங்குகள் அந்தச் சூழ்நிலைக்கேற்ப மாறத் தொடங்குகின்றன. நிலத்தில் நின்றபடியே பழத்தைப் பறித்து உண்டதால், அவற்றுக்கு வால் என்பது பாவனைக்குத் தேவையில்லாமல் போகத் தொடங்கியது. இதனால் வால் படிப்படியாகச் சுருங்கத் தொடங்குகிறது. வாலில்லாத புது இனக் குரங்கு தோன்ற ஆரம்பிக்கிறது. அதே நேரத்தில் பழைய காட்டில் பழைய குரங்குகள் இன்னும் குரங்குகளாகவே வாழ்ந்து கொண்டிருக்கின்றன. உணவுப் பிரச்சினை மீண்டும் இந்தப் புதுக் காட்டிலும் தோன்றுகிறது. அங்கும் முன்னர் நடந்தது போல பலமில்லாத குரங்குகள் வேறு இடத்துக்கு செல்ல வேண்டிய சூழ்நிலை தோன்றுகிறது.

இப்படிப் படிப்படியாகக் குரங்குகள் வெவ்வேறு இடங்களுக்குச் சென்றடைந்ததால் இறுதியாக மனித இனம் தோன்றுகிறது. அதேநேரம் பல்வேறு வகையான குரங்கினங்களும் காணப்படுகின்றன. மனித இனத்தைச் சரியாகக் கவனித்தால், ஆரம்பக் குரங்கினங்களை விடப் பலவீனமான ஒரு இனமாகக் காணப்படுவது தெரிய வரும். மனித இனம், குரங்கின் ஒரு கிளை மூலம் உருவாக, குரங்குகளிலும் பல இனங்கள் உருவாகியிருப்பது தெரியவரும்.

இது போலத்தான் உலகில் உருவாகும், உருமாறும் ஒவ்வொரு உயிரினத்துக்கும் பூமியில் அது எங்கு வாழ்ந்து வந்ததோ, அந்த அடிப்படையிலேயே குணங்களும், உருவங்களும் பரிணாம வளர்ச்சியடைந்திருக்கும். இதையே டார்வினின் கோட்பாடு சொல்கிறது.
.
பரிணாம வளர்ச்சி சித்தாந்தம் மனிதனுக்கும் பொருந்த வேண்டும் என்பதை உலகம் உணரத் தொடங்கியபோது நாம் குரங்கிலிருந்து பிறந்தோமா? என்ற கேள்வி எழுந்தது. டார்வின் அப்படி நேரடியாக சொன்னதில்லை நம்பியதுமில்லை. ஆனால் அறிவுப்பூர்வமாக சிந்தித்துப் பார்த்தால் அப்படித்தான் நடந்திருக்க வேண்டும் என்று விஞ்ஞானிகள் கருதத் தொடங்கினர். அவர் வாழ்ந்த போதே அவரது "The Origin of Species" என்ற நூல் உலகம் முழுவதும் பதிக்கப்பட்டது. கேம்ஃப்ரிட்ஜ் பல்கலைக்கழகம் அவருக்கு கெளரவ டாக்டர் பட்டம் வழங்கியது.
.
டார்வினின் சித்தாந்தத்தை ஏற்றுக்கொண்டு குரங்கிலிருந்துதான் நாம் தோன்றினோம் என்று நீங்கள் நம்பினாலும் சரி, இல்லை அது அபத்தமான கருத்து என்று புறம் தள்ளினாலும் சரி ஒன்றை மட்டும் நாம் மறுக்க முடியாது, வரலாற்றாலும் புறக்கணிக்க முடியாது. உயிரினங்களின் தோற்றம், வளர்ச்சி பற்றிய மனுகுல அறிவை விருத்தி செய்ததில் டார்வின் என்ற தனி ஒரு மனிதன் மிகப்பெரிய பங்களிப்பை செய்திருக்கிறார் என்பதுதான் அந்த உண்மை!.
.
அன்று டார்வினை உலகம் ஒப்புக் கொள்ளவில்லை. இன்றோ அறிவியல் உலகத்தில் டார்வின்தான் விஞ்ஞானத் திருவள்ளுவர். ‘தகுதியுள்ளவை தப்பிப் பிழைக்கும்' என்பதற்கு அவருடைய வாழ்வே சிறந்த உதாரணம்!
.
நன்றி - இணையத்தளம்

எழுதியவர் : செல்வமணி - மீள் பதிவு (30-Nov-15, 9:33 am)
சேர்த்தது : செல்வமணி
பார்வை : 604

சிறந்த கட்டுரைகள்

மேலே