காதலின் மறுபக்கம்

“எல்லாவற்றையும் கடந்து போகத் தானே வேண்டும்.? இதற்காக வருத்தப்பட்டுக் கண்களைக் கசக்கிக் கொண்டிருந்தால் சரியாகி விடுமா.? முதலில் கண்களைத் துடை” என்றான் எழில்.
“என்னால அழாம இருக்க முடியல எழில். உங்களப் பார்க்கும் போதெல்லாம் எனக்குள்ள ஏற்படுறக் குற்றவுணர்ச்சியக் கட்டுப்படுத்த முடியாமத் தோத்துப் போயிடுறேன். அதவிட, எல்லாந் தெரிஞ்சும் என்னைப் பெத்தவங்க உங்களக் கல்யாணம் பண்ணிக்கக் கூடாதுன்னு ஒத்தக் கால்ல நிக்கிறாங்க பாருங்க, அதைத் தான் என்னால ஏத்துக்க முடியல” என்று கண்களைக் காகிதத்தாளில் துடைத்தப்படி குரல் கம்ம பேசினாள் தமிழரசி.
“அப்போ அவங்க என்னை மாதிரியே நிக்க முயற்சி பண்றாங்கன்னு சொல்லு” என்று சிரித்துக் கொண்டே கிண்டலாகப் பதிலளித்தான் எழில்.
“பேசுற அவசரத்துல வாய் தவறி வந்துடுச்சி. என்னை மன்னிச்சிடுங்க எழில்’ என்று தழுதழுத்தாள் தமிழரசி.
“சே..சே, இப்ப எதுக்கு மன்னிப்பெல்லாம் கேக்குற. நீ எதிர்பாராம சொன்னாலும் நான் இப்போ ஒத்தக் கால்ல நிக்கிறது தானே நெஜம்.”
“ஆனா, அதுக்குக் காரணம் நான் தானே எழில். நீங்க எவ்வளவு சொல்லியும் கேக்காம வண்டியை வேகமா ஓட்டிட்டுப் போயி விபத்தை ஏற்படுத்தினேன். நடந்த அந்த விபத்துல, சின்னக் காயத்தோட நான் தப்பிச்சுட்டேன். ஆனா, உங்களுக்கு ஒரு காலையே இழக்க வேண்டியதா போச்சு. எத்தனை வேதனை! எத்தனை வலி! அத்தனையும் தாங்கிட்டுக் கொஞ்சம் கூடக் கோபமோ, வெறுப்போ காட்டாம இப்பவரைக்கும் என் மேல நீங்க காட்டுற அன்பை பார்க்கும் போது அப்படியே உள்ளுக்குள்ள மருகிப் போயிடுறேன்.”
“தமிழ், இன்னும் எத்தன நாளைக்குத் தான் இதையே சொல்லிகிட்டு இருப்ப. நடந்ததை யாராலும் மாத்த முடியாது. ஆனா, இந்த இரண்டு வருட வாழ்க்கை எனக்கு நிறையக் கத்துத் தந்திருக்கு. இதோ! கரையைத் தழுவத் துடிக்கும் இந்த ஓயாத கடல் அலைகளைப் போல, வாழ்க்கைல என்னை நிலைப்படுத்திக் கொள்ள ஓயாம உழைத்த உழைப்பு, இன்று ஓர் இளம் தொழில் முனைவரா என்னை உயர்த்தியிருக்கு. எத்தனையோ கடினமான பாதைகளைக் கடந்து வந்துட்டோம். உன் பெற்றோரோட சம்மதத்தைப் பெறுவதா கஷ்டம்?. பொறுமையா இருந்தா, இதுவும் கடந்து போகும். கவலைப்படாதே. சரி, நாம வந்து ரொம்ப நேரமாச்சுக் கிளம்பலாம் என்று கூறிக் கொண்டு தன் மேல் ஒட்டியிருந்த ஈரமணலைத் தட்டிக் கொண்டே எழுந்தான்.
அப்போது ‘கட்,கட்,கட்’ என்று கூறிக்கொண்டே வந்தார் அன்பரசன்.
“எழில், கதைப்படி நீங்க ஒரு காலை இழந்த மாற்றுத்திறனாளியா நடிச்சுகிட்டு இருக்கீங்க. அப்படியிருக்கும் போது, தமிழரசி உங்களைத் தூக்கி விட, உங்க பக்கத்துல இருக்கிற ஊன்றுகோலை எடுத்துக்கிட்டு அப்புறம் தானே எழுந்து நிக்கனும். இப்படி ‘படக்’குன்னு எந்திரிச்சுட்டீங்களே” என்றார் ‘காதலின் மறுபக்கம்’ என்ற குறும்படத்தை இயக்கும் இயக்குனர் அன்பரசன்.
“மன்னிச்சுக்கோங்க சார், மேலே ஒட்டியிருந்த மணலை தட்டிவிட்டுகிட்டு அப்படியே மறந்து எந்திரிச்சுட்டேன். மறுபடியும் இன்னோர் ‘டேக்’ போகலாம்” என்றான் அந்தக் குறும்படத்தின் நாயகன் எழில்.
“ஓகே, ஆக்க்ஷன்” என்றார் அன்பரசன்.

எழுதியவர் : virubha (30-Nov-15, 12:45 pm)
சேர்த்தது : விருபா
Tanglish : kathalin MARUPAKKAM
பார்வை : 571

மேலே