என் வாழ்க்கைப் பயணம் - அனுபவச்சாரல்கள் 25

​நான் கடந்த அரை நூற்றாண்டு காலத்தில் கண்ட காட்சிகள் முழுவதும் நினைவில் இல்லாவிட்டாலும் , சில நெஞ்சில் நிலைத்துவிட்டன . பல பெரிய அரசியல் தலைவர்களையும் , தேசிய தலைவர்களையும் , கொள்கை வீரர்களையும் , தன்மான சிங்கங்களையும் , ​தாய் மொழிக்காக அரும்பாடுபட்டவர்களையும் , இன்னுயிர் நீத்த தியாகிகளையும் , பல துறைகளில் சிறந்து விளங்கியவர்களையும் கண்டும் , ஒரு சிலரிடம் உரையாடியும் வாய்ப்பினைப் பெற்றேன் . பெருந்தலைவர் காமராஜரை மிக நெருக்கமாக நின்று பார்த்தவன் ...பகுத்தறிவு பகலவன் தந்தை பெரியார் அவர்களை கரம் குலுக்கி மகிழ்ந்தவன் ,அவரின் பொதுக்கூட்டங்களில் கலந்து கொண்டு அவரின் துணிச்சலான உரையை கேட்டவன் , மூதறிஞர் ராஜாஜி அவர்களை நேரிடையாக கண்டவன் , பேரறிஞர் அண்ணா அவர்களை பலமுறை பார்த்தவன் , அவரின் உரையையும் கேட்டவன் , மக்கள் திலகம் எம் ஜி ஆர் அவர்களை பார்த்தவன் , நடிகர் திலகம் அவர்களை பார்த்தவன் , ஜெமினி கணேசன் அவர்களிடம் இருந்து என்னுடைய 10 வது வயதில் பரிசு பெற்றவன் , நாகேஷ் அவர்களிடம் பலமுறை எங்கள் வங்கிக்கு வரும்போதெல்லாம் பேசியவன் , கலைஞர் அவர்களை நேரில் சந்தித்து மகிழ்ந்தவன் , மிக அதிகமாக அவரின் பேச்சுக்களை கேட்டவன் , கவியரசு கண்ணதாசன் அவர்களை நேரில் கண்டவன் ....கவிபேரரசு வைரமுத்து அவர்களும் இருமுறை தனியாக உரையாடி மகிழ்ந்தவன் .....இப்படி பல கூறிக்கொண்டே போகலாம் .

சிறு வயதில் இருந்தே இலக்கிய நிகழ்ச்சிகள் , கவியரங்கங்கள் , பட்டிமன்றங்கள் போன்று பல நிகழ்வுகளை நேரில் சென்று கண்டு களித்தவன் . அதனால் தான் எனக்கும் கவிதை மீது தாக்கம் பிறந்தது என்றும் கூறலாம் .
ஒருமுறை ஆனந்த விகடன் பொன்விழா நிகழ்ச்சியில் , கலைஞர் அவர்களின் தலைமையில் நடந்த கவியரங்கம் , சென்னை கடற்கரை சாலியில் உள்ள சென்னை பல்கலைகழக நூற்றாண்டு மண்டபத்தில் பெருமளவில் திரண்டிருந்த கூட்டத்தின் நடுவே பல பெருங்கவிஞர்கள் கலந்து கொண்டு கற்கண்டு கவிதைகள் வழங்கியதும் , அதை நான் மிகவும் ரசித்து கேட்டதும் இன்னும் என் நெஞ்சில் பசுமையுடன் நினைவில் உள்ளது. அன்றுதான் முதன்முதலில் கவிக்கோ அப்துல் ரகுமான் , கவிஞர் நா காமராசன் , கவிஞர் மு மேத்தா அவர்களையும் எழுத்தாளர்கள் திருமதி இந்துமதி , திருமதி சிவசங்கரி அவர்களையும் நேரில் கண்டதும் , அவர்களின் உரைகளை கேட்டதும் , அவர்களிடம் உரையாடி மகிழ்ச்சி அடைந்ததையும் மறக்கவே முடியாத அனுபவங்கள் .

இவையெல்லாம் நான் இங்கே பதிவிடுவதற்கு காரணம் தற்பெருமை பட்டியல் அல்ல...... இவர்கள் வாழ்ந்த , வாழ்கின்ற காலத்தில் நாமும் வாழ்ந்தோம் , இதுபோன்ற அரிய வாய்ப்பெல்லாம் எனக்கு கிடைக்கப் பெற்றதற்காக பெருமிதம் கொள்கிறேன் என்பதை வெளிப்படுத்தவே அன்றி வேறல்ல . இது என்னுடைய சாதனையும் அல்ல ...அந்தந்த துறைகளில் சாதிததவர்களை சந்தித்ததும் கண்டதும் நான் பெற்ற ஆனந்தம் . அதை பகிரவே இங்கே பதிவிட்டேன் .

அதேபோன்று மனம் வருந்துகின்ற அளவிற்கும் , உள்ளம் உடைந்துபோகின்ற நிலைக்கு தள்ளப்படுவதும் ,சோகமான , துக்கம் நிறைந்த நிகழ்வுகளும் , சில இழப்புகளும் நம் வாழ்வில் நடைபெறுகின்றன . இரண்டையும் ஒன்றாக பாவித்து , மனதை ஒரே நிலையில் இருக்கும்படி பழகிட்டால் நமக்கு வெற்றி தோல்விகளை பற்றி கவலை கொள்ளவேண்டாம் . சிலரின் தொடர்புகள் நமக்கு பெருமையையும் பெயரையும் மேலோங்கிட செய்திடும் . அதே நேரத்தில் கூடா நட்பு பலவிதத்தில் கேடுகளையே விளைவிக்கும் . நான் அதனை பலநேரங்களில் சிலரால் உணர்ந்தும் இருக்கிறேன்.

கடந்த ஒரு வாரகாலமாக கொட்டி தீர்த்த பெருமழையால் பாதிக்கப்பட்ட பல்லாயிர கணக்கான மக்களை பார்க்கும்போது நெஞ்சம் உடைகிறது. அவர்கள் படும் அவலங்கள் , வீடுகளை இழந்து உடமைகளை துறந்து பரிதவிக்கும் அந்த உள்ளங்களை பார்க்கும்போது நம் விழிகள் நிறைகிறது. அரசியல் மற்றும் மதம் மொழி வேற்றுமைகளை மறந்து மக்களே அவர்களாகவே முன்வந்து ஒருவருக்கு ஒருவர் உதவிடும் காட்சிகளும் செய்திகளும் நெஞ்சை நெகிழ வைக்கிறது. இதுதான் மனித நேயம்., அரசு இயந்திரங்களும் , அரசியல்வாதிகளோ செய்ய முடியாத ஒன்றை நல்ல இதயங்கள் செய்வதை கண்டு வியப்புற்றேன் . இதுதான் தேவை இன்று . மனிதனை மனிதன் மதிக்கும் காலம் , உதவிடும் உள்ளம் , வேறுபாடுகளை களைந்து மாறுபாடின்றி , அவதியுறும் மக்களுக்கு உதவிடுவதும் , உணவு அளிப்பதும் உள்ளத்தைத் தொடுகிறது.

இயற்கையின் சீற்றம் ஒரு பாடமாகவே அமைந்துவிட்டது. இனியாவது நாட்டை ஆண்டவர்களும் , ஆள்பவர்களும் , ஆளப்போகிறவர்களும் மக்களின் துன்பங்களை பிரிந்து கொண்டு வாழ்வாதாரத்தின் அடிப்படை தேவைகளை ஆராய்ந்து அளித்து அவர்களை நல்ல முறையில் வாழ்ந்திட வழி வகுக்க வேண்டும் என்பதே என் விருப்பம் . துயரங்கள் நீக்கப்பட வேண்டும் .

மக்களும் இனி சிந்திக்கும் நேரம் வந்துவிட்டது . ஆக்கிரமிப்பு முறையை கைவிட வேண்டும் . அந்தந்த இடத்தின் தன்மையை ஆய்ந்து புரிந்து கொண்டு குடியேற வேண்டும் .

பல தொண்டு நிறுவனங்களும் தனிப்பட்ட மக்களும் தானாகவே முன்வந்து பாதிக்கப்பட்ட மக்களுக்கு முழுமனதுடன் மனித நேய அடிப்படையில் பலவித வழிகளிலும் உதவியதற்கு எனது சிரம் தாழ்ந்த நன்றிகள் .


மீண்டும் சந்திக்கிறேன் ......

பழனி குமார்
04.12.2015

எழுதியவர் : பழனி குமார் (5-Dec-15, 8:32 am)
சேர்த்தது : பழனி குமார்
பார்வை : 383

மேலே