தேவதைகள் தூங்குகிறார்கள் - 13

பரவசத்துடன் தேவதை தொடர்ந்தாள் "வழக்கில் ஏதாவது முன்னேற்றம் இருக்கா ?" தோழர் பரதன் தொடர்ந்தார் "நீங்க கவலை இல்லாமல் இருங்க எல்லாம் கூடி வருது சீக்கிரம் விஜியை வரவேற்கக் காத்திருங்க " என்று மட்டும் சொல்லிவிட்டு தொலைபேசியைத் துண்டித்தார். தொலைபேசியைத் துண்டித்த இயக்கத் தலைவர் தன் அருகில் அமர்ந்திருந்த விஜியின் தந்தையிடம் " அந்தப் பொண்ணுதான் பேசினாள் " என்றார் விஜியின் தந்தையும் "ம்.." என்று புரிந்தது என்ற வகையில் தலையை மட்டும் அசைத்தார் மனம் முழுவதும் மகனின் மீது விழுந்திருக்கும் கறை மறையவேண்டும் என்பதாகவே இருந்தது மகனின் காதல் ஒரு தவறாகத் தெரியவில்லை. மீண்டும் இயக்கத் தலைவர் பரதன், விஜியின் தந்தையிடம் "சரி இன்னமும் நாம தாமதப் படுத்த வேண்டாம் காவலர் சிவா உங்க வீட்டுல இருந்து கொண்டுபோன அந்த பழைய கிழிக்கப்பட்டிருந்த நாட்குறிப்பைப் பற்றி நம்ம வக்கீல் கிட்ட சொல்லிட்டு அடுத்த என்ன பண்ணுறதுன்னு யோசிப்போம்" என்றார் சம்மதித்த விஜியின் தந்தையும் உடன் புறப்பட்டார் தன் மனைவிக்கு நடப்புதனைச் சொல்லிப் பதட்டமில்லாமல் இருக்கச் செய்ய தொலைபேசியில் அழைத்தார். ஆதவப் பார்வை தரையைத் தொடும்படி மேகங்கள் விலகி மிதந்துகொண்டிருந்தது.

கடைவீதியில் செழியனைக் கண்டான் ஆதி, "செழியா நீ அழைத்த போது சற்று வேலையாக இருந்தேன் ஆனா அப்பறம் நான் அழைத்த போது நீ எடுக்கவில்லையே..." என்றான், "இல்லண்ணா அந்த நேரம் அப்பா பரதன் அண்ணாகிட்ட பேசிக்கிட்டிருந்தாரு அதான்..." என்றான், "அப்பா அம்மாவுக்கு அண்ணாவோட காதல் தெரிஞ்சுடுச்சு நான்தான் சொன்னேன் அப்பறம் விசாந்தினி பற்றி உங்களுக்கு தெரியுமான்னு கேட்கத்தான் அழைத்தோம்..." என்றான் செழியன். விசாந்தினி காணாமல் போன அன்று விஜி அழைத்தது முதல் அவன் விசாந்தினியின் தந்தையைத் தொடர்ந்தது... அவரின் கார் விபத்து என்று தனக்குத் தெரிந்தவைகளை செழியனிடம் சொல்லிக்கொண்டே நடந்து வந்ததில் இருவரும் விஜியின் வீட்டையே அடைந்து விட்டார்கள்.

மல்லிகைக் கொடி காற்றில் அசைந்து சாளரம் வழியே விசாந்தினியை அழைத்தது... கொஞ்சம் கவலை கொஞ்சம் தைரியம் இரண்டிற்கும் மேலாய் நம்பிக்கையுடன் மொட்டுக்களுடன் காத்திருந்த மல்லிகைக் கொடியைத் தன் ஒற்றை விரல் கொண்டு தீண்டினாள். இலைகள் மூடியிருந்த மல்லிகை அவளின் துன்பம் மறைத்திருக்கும் காதலைச் சொன்னது. கொஞ்சம் பொறு என்று விசாந்தினி சொன்னது அந்தச் செடிக்குப் புரிந்திருக்கக்கூடும்... குருவியொன்று தன் பஞ்சுச் சிறகுதிர்த்துக் கீச்சிக்கொண்டே முகப்பினைக் கடந்து பறக்க… உதிர்ந்த அந்தச் சிறகினைக் குனிந்து எடுத்தாள்... உதிர்ந்தது தெரிந்ததோ இல்லையோ குருவி உல்லாசமாய்த்தான் பறந்தது... இன்றைய இந்த வலிகளும் இப்படி ஒருநாள் உதிரும்… படபடக்கும் இரண்டு சிறகுகளில் ஒன்று விசாந்தினி மற்றொன்று விஜி பறக்கும் இலக்கு காதல் காதல் காதல்.... அது விசாந்தினியின் பார்வைக்குத் தெரிந்திருக்க வேண்டும் கண்கள் விசனிக்கவில்லையே... விஜியுடனான பேருந்துப் பயணங்களில் அவளின் அனுபவம் வெறும் வேடிக்கை மட்டுமில்லை... காரணம் இல்லாத அல்லது காரணம் தேவையற்ற ஒரு நம்பிக்கை யாத்திரை...அந்த முன்னுரை யாத்திரைகள் போருளுரைக்கப் போகும் காலம் விரைவில் வரப்போகிறதென்று அவள் வீட்டுச் சுவர்க்கடிகாரம் மணியொலித்து மகிழ்த்தியது... "காபி எடுத்துக்கம்மா " என்று தம் உறவின்முறையின் அழைப்பில் நினைவு கலைந்தவள் காபியைப் பெற்றுக்கொண்டு அருகிலிருந்த மேசையில் வைத்துவிட்டு தனது நாட்குறிப்பை எடுப்பதற்காக மெத்தையை விலக்கினாள் அப்பொழுதுதான் தனது நாட்குறிப்பு அங்கே இல்லை என்பதை உணர்ந்தாள் எங்கே போயிருக்கும் ஒருவேளை தடயங்கள் தேடிக் காவல் அதிகாரிகள் கொண்டுபோயிருக்கக் கூடும் என்று தனக்குத் தானே சமாதானம் சொல்லிக்கொண்டாள். மெத்தையைச் சரி செய்துவிட்டு காபிக் கோப்பையை கையிலெடுத்தவள் விஜியுடன் மீண்டும் பயணிக்கலானாள்... தோள்சாய்ந்து நடந்த அந்தப் புதிய மலைப் பயண வழித்தடங்கள் இப்போது அவளை பழகிய பாதையாகி அழைத்துச் சென்றது... பூத்துச் சிரித்த மலர்கள் தங்களைப் பார்த்து நாணுவதாகவே நனைந்துபோனாள்... அன்று நடந்த பாதைகளில் மீண்டும் விஜியுடன் கைகோர்த்து வருவேன் காதலியாக அல்ல மனைவியாக என்று எண்ணத்தூது எய்துகொண்டிருந்தாள் அந்த மலைப் பாதை மலர்களுக்கு... அந்த மரநிழலில் அவள் நிழலுக்காகக் கொஞ்சம் தஞ்சம் நின்ற பொழுதும்... விஜி அவளுக்காக இளநீர் வாங்கச் சென்றதும்... நேற்று நடந்ததாகத்தான் இருந்தது அவளுக்கு... விஜி மணாளனாகிப் போனதாகவும்... வெளியூர் சென்ற கணவன் வீடு திரும்பக் காத்திருக்கும் மனைவியாகவும் நிமிடங்களை நகர்த்திக் கொண்டிருக்கிறாள்... மாலைகளில் அவன் இல்லத்தில் இருக்கும் வேளைகளில் இல்லாத குறும்புகள் எல்லாம் செய்ய குறிப்பெடுத்துக் கொண்டிருகிறாள் இந்தக் குமரி... தானிருக்கும் வீடோ அவனிருக்கும் வீடோ தங்கியிருக்கும் பொழுதெல்லாம் தங்களின் காதல் சாம்ராஜ்ய அரசவைகளாகவே அவள் ஆக்கிப் பார்த்தாள்... தாமதமாக வீடு திரும்பும் வேளைகளில் பொய்க்கோபம் கொள்வது எப்படியென முகபாவனைகள் செய்து பார்த்துப் புன்னகைத்துக் கொண்டிருகிறாள் இந்தப் பூவரசி... அவன் சொல்லப் போகும் காரணங்கள் செல்லாமல் போகச் செய்ய முத்தத்தால் வாய் பொத்தும் மூலகூருகளையும் வகுத்துக் கொண்டிருந்தாள் இந்த ஜப்பான் வடிவழகி... விஜியின் திரு லீலைகளுக்காய் இனிவரும் நாட்களெல்லாம் இருவரும் விலகாமல் இருக்க வேண்டும் என்பதற்காக தானிருக்கும் விரதம்தான் இந்தத் தனிமை என்று இந்தப் பொழுதுகளை நோன்புக் கணக்கில் நுழைத்துக் கொண்டிருந்தாள் இந்த நூதனப் பார்வையழகி...

இன்று வெளியில் பொழியும் மழை அன்று போல் என்னை அவ்வளவாகப் பாதித்துவிட வில்லை... காகிதமும் பேனாவும் தேடிய நாட்கள் இன்னும் கனமாகவே இருக்கிறது என் நினைவுகளில்... அதோ சன்னல் வழியே தெரிகிறது ஊசிகளின் வீழ்ச்சி... குளிரவில்லை... ஏனோ குத்துகிறது... நேரத்தைக் கசக்கிகொண்டிருக்கும் இந்தப் பொழுதுகள் உலரப் போவது எப்போது... உன் மூக்கழகில் நான் முத்த முத்துக் குளிக்கும் நேரம் எப்பொழுது... இந்த கடக்கும் நொடிகளின் கால்களில் பாறைகளைக் கட்டி இருத்தியது யாரோ... என் மீது சுமத்தப் பட்டிருக்கும் வீண் பழி அது காலம் சற்று நேரம் நம்மிடையே நடத்தும் கண்ணாமூச்சி விளையாட்டு... தோற்கப் போகிறது காலம் விசாந்தினி... வீணையும் நரம்புமாய் உன்னில் நானும் என்னில் நீயும்... என் நினைவுக் களம் சற்று இளைப்பாறட்டும் என்றவாறு என்னை திருப்பியது என் அருகில் இருந்த மற்றொரு கைதியின் அழைப்பு... "என்ன சார் ரொம்பத் தீவிரமா யோசிக்கறீங்க... என்ன குற்றம் செஞ்சீங்க... எதுக்காக இப்போ விசாரணையில் இருக்கீங்க... எந்த ஊர் உங்களுக்கு..." கேள்விகளை அடுக்கிக்கொண்டே போனார் அந்தத் திருவாளர் கைதி. நான் சிறிய புன்னகையுடன் "நான் தவறேதும் செய்யலை சார்... புயலில் சிக்கிய காகிதம் சற்றுநேரம் புயலின் போக்கில் போகும்... புயல் சற்று ஓயும் பொழுதோ அல்லது உரிமைக்காரர் அதனைப் பிடிக்கும் பொழுதோ... காகிதம் அதற்கான நிலையை அடையும்... நான் இப்போ புயலில்... அவ்வளவுதான் " என்றேன். நான் ஏதோ பிதற்றுகிறேன் என்று அந்தத் திருவாளர் கைதி என்னை மேலும் கீழுமாகப் பார்த்துவிட்டு "நீங்க இருக்க வேண்டிய இடம் இது இல்ல..." என்றார். "நானும் அதைத்தான் சொன்னேன் ..." என்றேன். பின் என்னைவிட்டு அவர் நகர நான் சுவரோரம் சாய்ந்தமர்ந்து கண்களை மூடினேன்... இமைகளுக்குள் நினைவுகள் வரைந்த ஓவியத்திடம் பேசத் துவங்கினேன்... முடிந்துபோகும் இந்தப் பிரிவு... முளைத்த காதல் மொட்டுவிடப்போகிறது வெகு சீக்கிரம்... என்றேன்... தெரியும் என்று சிரித்தாள் சிலையழகி... சின்னச் சின்னக் கோபம் அவள் விழிகளைச் சுருக்க... அவளின் சின்னக் கண்கள் இப்போ மொத்தமாகவே மூடிக் கொண்டதுபோல் தோன்ற... சினுங்கல் குரல் மட்டும் அவள் அழுகிறாள் என்று உணர்த்த... என் கைவிரல்கள் அவள் கன்னத்தை மெதுவாகக் கிள்ள... பக்கம் வராதே நான் கோபத்தில் இருக்கேன் என்று அவள் குழந்தையாகத் தள்ள... இந்த ஊடல் நாடக ஒத்திகையில் மூடியிருந்த என் கண்கள் ஓரமாகக் கொஞ்சம் கசிந்து பார்த்தது... அந்தக் கண்ணாடித் தொட்டி மீன்களுடன் அவள் ஏதோ வாய்மட்டும் அசைத்துக் கொண்டிருக்க குரல் வெளிவரவில்லை... கொஞ்சும் குமரி மீன்களிடம் பேசுவது கூடக் கலை... அவள் காதருகே சென்று நானும் வாய்மட்டும் அசைக்க... என்ன இது என நிமிர்ந்தாள்... நீ மீனுடன் பேசு நான் மீன்விழியாளுடன் பேசுகிறேன் என்றேன்... போதும் புலவரே என்றவள் விலகி ஓட... பூக்காலப் பூங்காவின் வாசம் புகுந்து நெகிழ்த்தியது என் மேனியெங்கும்... பூவான காரிகையைப் புண்ணாக்கிப் பார்த்துவிட்டது இந்தப் பணப் பேய்களின் வக்கிரம்... இதுவரை அவள் பட்ட இரணங்களுக்கும் வலிகளுக்கும் இனி முற்றுப்புள்ளி பெறட்டும்... மரங்களின் காதல் இலைகளோடு... இலையுதிர்காலம் மரங்களுக்கான விரதம்... விரதப் பலன்... மரங்களை இலைகள் பூக்களோடு வந்துசேர வசந்தகாலம்... என்னவள் எனைச் சேரும் வசந்தகலாம் பத்து விரல்களின் எண்ணிக்கைக்குள்தான்...

அம்மாவிற்கும் அப்பாவிற்கும் இந்நேரம் விசாந்தினி பற்றி தெரிந்திருக்கும்... நிச்சயம் அவர்கள் தப்பாகப் புரிந்துகொண்டிருக்க மாட்டார்கள் என்று ஆழ்மனம் உணர்த்தியது... அம்மா இனி அவளுக்கும் அம்மா... விசாந்தினியும் இதைப் புரிந்துகொள்வாள்... கடமைகளும் பொறுப்புகளும் கற்று வளர்ந்தவள் தானே விசாந்தினி.

அலுவலகத்தில் காவலர் சிவா விஜியின் வீட்டிலிருந்து கொண்டு வந்திருந்த நாட்குறிப்பையும் விசாந்தினி காணாமற்போன தினம் விசாந்தினி வீட்டிலிருந்து கொண்டுவந்திருந்த நாட்குறிப்பையும் மற்றும் புடவையையும் மேசை மீது அடுக்கி வைத்து பார்த்துக் கொண்டே சிந்தனையில் விஜி விசாந்தினி காதல் உண்மையானதாகத் தானிருக்கும் என்று யோசித்துக் கொண்டிருந்த வேளை வழக்கறிஞர் லாரன்சுடன் இயக்கத் தலைவர் பரதனும் விஜியின் தந்தை பாலாவும் அலுவலகத்தின் உள்ளே நுழைந்தனர்." வாங்க என்ன எல்லோரும் ஒண்ணா வந்திருக்கீங்க..." என்றார் சிவா அனைவரையும் இருக்கையில் அமரச் செய்தார், உதவியாளரை அழைத்து மூவருக்கும் தேநீர் கொண்டுவர ஏற்பாடு செய்யச்சொன்னார். லாரன்ஸ் சிவாவின் மேசை மீதிருந்த நாட்குறிப்புகளைச் சுட்டி " இதற்காகத்தான்..." என்று புன்னகைத்தார், "அது சரி இது என்ன இன்னுமொரு நாட்குறிப்பும் அதனுடன் ஒரு புடவையும்" என்றார் லாரன்ஸ், "இது விசாந்தினி காணாமற்போன தினம் சுந்தரத்தோட வீட்டிலிருந்து தடயங்கள் தேடிப்பார்த்தபோது கிடைத்தது, நாட்குறிப்பு விசாந்தினியோடது புடவையும் தான்" என்ற சிவா அவைகளை லாரன்சிடம் கொடுத்தார்." இதை நீங்க முன்னாடியே எங்ககிட்ட தெரிவிச்சிருக்கலாமே" என்றார் லாரன்ஸ் பதிலேதும் பேசாமல் சிவா "நாட்குறிப்புகள் உங்களுக்கு உதவட்டும்" என்று மட்டும் சொன்னார். தொடர்ந்து "விஜிக்கு விசாந்தினி மீதான காதல் சொத்துக்காக இல்லைங்கறது மட்டும் விஜியோட நாட்குறிப்புக் கவிதைகள் தெளிவாச் சொல்லுது..." என்றார், தொடர்ந்து "எப்படின்னா... விசாந்தினியொட விஜிக்கு காதல் பிறந்தப்போ அது ஒரு ரயில் சந்திப்பு மட்டும் தான் மேலும் ஒருவரோடு ஒருவர் தெளிவாப் பெசிக்கக்கூட இல்லை..." "ம்..." என்றார் லாரன்ஸ், சற்று நேரத்தில் நால்வருக்கும் தேநீர் பரிமாறப்பட்டது. தனக்கான தேநீரினின்று ஆவி பறந்துகொண்டிருந்தது விசாந்தினியின் நாட்குறிப்பை புரட்டிக்கொண்டே தொடர்ந்தார் லாரன்ஸ், " சரி முதன் முதலா விஜியை என்ன காரணத்துக்காக உங்க துறை கைது செஞ்சாங்க?" வினவினார் லாரன்ஸ், "விஜிட்ட அந்த இயக்கம் பத்தின தகவல் இருக்குன்னு..." என்ற சிவா வாக்கியத்தை முடிப்பதற்குள் லாரன்ஸ் அந்த நாட்குறிப்புகளிளிருந்த்து ஏதோ ஆதாரம் கண்டவர்போல் "நன்றி சிவா, இந்த நாட்குறிப்புகளும் புடவையும் என்னிடம் இருக்கட்டும்" என்று கூறி அவற்றை எடுத்துக்கொண்டு சிவாவிடம் விடைபெற்றுக் கொண்டு "பாலா பரதன் வாங்க நாம வந்த வேலை முடிஞ்சுடுச்சு இனி அடுத்தகட்ட நடவடிக்கையை யோசிப்போம்" என்றவாறு மூவரும் காவல்நிலையப் படிகளில் இறங்கி தாம் வந்திருந்த மகிழுந்தை நோக்கி நடந்தனர். விலகிய மேகங்கள் பிரிந்து கரைந்து நீலவானத்தை நிர்மலமாக்கிகொண்டிருந்தது...

(தொடரும்...)

(கதையைத் தொடர விரும்புவோர்... தோழர் கவிஜியைத் தொடர்பு கொள்ளவும்...)

எழுதியவர் : மீ.மணிகண்டன் (14-Dec-15, 8:30 am)
பார்வை : 238

மேலே