விஞ்ஞானம் ஏற்றுக் கொள்ளும் மெஞ்ஞானம்

மெஞ்ஞானக் கருத்துக்களை விஞ்ஞானம் ஏற்றுக்கொள்வது உண்மைதான். அன்றைக்கு ஆன்மிகத்தில் கூறிய கருத்துக்கள் தான் இன்றைக்கு விஞ்ஞான ரீதியாக கடைப்பிடிக்கப்படுகின்றது.

உச்சி முதல் உள்ளங்கால் வரை நாம் உபயோகப்படுத்தும் ஒவ்வொரு பொருட்களிலும் ஆன்மிகமும், விஞ்ஞானமும் கலந்து இருக்கின்றது. அந்த விதத்தில் தான் நம் முன்னோர்கள் சடங்கு சம்பிரதாயங்களை அமைத்திருக்கிறார்கள்.

மெஞ்ஞானத்தில் பல மேலான கருத்துக்கள் பொதிந்திருக்கின்றன. அவற்றை விஞ்ஞான வாயிலாகத்தான் மக்கள் பின்பற்றுகிறார்கள். பொதுவாக அன்றைக்கு கோவில்களில் வந்த பிரகாரங்கள் இன்றைக்கு மருத்துவர்கள் கூறும் நடைபயிற்சியாக மாறியுள்ளது. அந்தக் காலத்தில் பிரகாரங்கள் 5, 7, 9 என்றெல்லாம் சுற்றச் சொல்வார்கள். காரணம் உழைப்பு குறைவாக உள்ளவர்கள், இவ்வாறு சுற்றி வருவதால் பஞ்ச இந்திரியங்களும் வேலை செய்யும் என்பதால் இப்படி சொல்லி வைத்தனர்.

ஆனால் இன்றைக்கு சர்க்கரை நீர், கொழுப்பு, ரத்த அழுத்தம் என்றெல்லாம் எண்ணற்ற வியாதிகள் இருந்து வருகின்றன. அவை அனைத்திற்கும் மொத்த வடிகாலாக நடைபயிற்சி அமைந்துள்ளது. இன்று நாம் சாலைகளில் நடப்பதை அன்று ஆலயங்களில் பிரகாரமாக சுற்றிவந்து புண்ணியத்தை எளிதாகப் பெற வழிஅமைத்துக் கொண்டனர்.

மெஞ்ஞானம் சொல்லும் கருத்தை நாம் கடைப்பிடித்தால் உடலும், உள்ளமும் சிறப்பாக இருக்கும். 'பட்டினி கிடந்தால் பலன் கிடைக்கும்' என்று சொன்னால் யாரும் எடுத்துக் கொள்ள மாட்டார்கள். ஆன்மிக ரீதியாக விரதம் இருந்தால் வியக்கும் பலன் கிடைக்கும் என்று சொன்னால் ஏற்றுக் கொள்வர். அல்லது மருத்துவம் மூலம் வாரம் ஒரு நேரமாவது உண்ணாமல் இருந்தால் உடலுக்கு நல்லது என்று சொன்னால் தான் ஏற்றுக் கொள்வர்.

உடல் நலத்திற்கு உறுதுணையாக அமையும் துளசியைச் சாப்பிடுங்கள் என்று சொன்னால் சாப்பிடுவார்களா? அது ஒரு தெய்வீக மூலிகை அதை உட்கொண்டால் கபம், சளி போன்ற தொந்தரவுகள் எல்லாம் நீங்கும் என்று முன்னோர்கள் பெருமாள் கோவிலுக்குச் செல்லும் பொழுது துளசியைத் தீர்த்தத்தில் கலந்து கொடுத்தால் வருபவர்கள் உட்கொள்வர் என்று கண்டறிந்தனர்.

பொதுவாக கோலம் போடுவது முதல் அம்மி, ஆட்டுக் கல்லில் அரைப்பது வரை அத்தனையும் நாம் உடல் நலத்தோடு வாழக் கண்டறிந்த உண்மைகள் தான். அந்தக் காலத்தில் உள்ள பெரியவர்களுக்கு உள்ள தெம்பும், தைரியமும் இந்தக் காலத்து இளைஞர்களுக்கு கூட கிடையாது.

ஆலயம் என்றால் கோவில். ஆன்மாக்கள் லயிக்கும் இடம் என்பது பொருள் 'கோ' என்றால் அரசன், தலைவன், இறைவன் என்று பொருள். 'இல்' என்றால் தங்குமிடம் என்று பொருள். அதாவது 'கோவில்' என்பது இறைவன் தங்கி அருள் வழங்கும் இடமாகும்.

இதைப்போல இன்னும் எத்தனையோ கருத்துக்களை இந்த மெஞ்ஞானத்தில் கூறியிருக்கிறார்கள். இறைவனுக்கு தேங்காய் உடைத்தால் ஆணவம் குறைந்து அன்பு பெருகும். தீபம் காட்டுவதால் பாவம் போகும் என்று சொன்னார்கள். அஞ்ஞான இருள் அகன்று ஒளிமயமான வாழ்க்கை ஏற்படுத்திக் கொள்ள நாம் தீபத்தைப் பார்க்கின்றோம். அதிலும் கூட ஒரு தத்துவத்தை ஆன்மிகம் போதிக்கின்றது.

ஜோதியில் கற்பூரம் சேரும்போது சாம்பல் ஆகாமல் கரைவது போல ஆன்மாவும் இறை ஜோதியோடு கரைந்து ஒன்று பட வேண்டும் என்ற தத்துவத்தை தீபத்தின் மூலமாக எடுத்துரைத்தனர்.

மேலும் எத்தனையோ மலர்கள் இருந்தாலும் அர்ச்சனையில் கதம்பத்தை வைக்கின்றோம். எதற்காக என்று சிந்தித்தால் கதம்பத்தில் எப்படி எல்லா மலர்களும் இணைந்திருக்கின்றனவோ, அதைப்போல எல்லா விதமான மனிதர்களும் இறைவன் முன் சமமானவர்கள் தான். ஏழை, பணக்காரன், உயர்ந்தவன், தாழ்ந்தவன், சாதாரண மனிதன், சக்கரவர்த்தி என்றெல்லாம் பாகுபாடு பார்க்காமல் சன்னிதியில் நின்று மனமுருகி வழிபடுபவர்களுக்கெல்லாம் சகல பாக்கியங்களும் இறைவன் கொடுப்பான் என்பதை உணர்த்தவே கதம்ப மாலையை இறைவனுக்கு அணிவிக்கிறோம்.

வீட்டிற்கு முன் போடும் கோலங்களில் கூட அன்னதான தத்துவத்தைச் சொல்லியிருக்கிறார்கள். எறும்பு முதலான ஜீவ ராசிகளிடமும் நாம் கருணை காட்ட வேண்டும். நாம் போடுகிற அரிசி மாவு கோலத்தில் அரிசித் துணுக்குகளை அவை சாப்பிட்டு உயிர்வாழ வேண்டும் என்ற தத்துவத்தை முன்னோர்கள் சொல்லி வைத்திருக்கிறார்கள்.

இதைப்போல இன்னும் ஏராளமான அர்த்தங்கள் இந்த மெஞ்ஞானத்தில் பொதிந்திருப்பதால் தான் விண்ணை முட்டும் அளவிற்கு உயர்ந்திருக்கின்ற விஞ்ஞானம் அதை ஏற்றுக் கொள்கிறது. எனவே மெஞ்ஞானம் விஞ்ஞானத்திற்கு உட்பட்டது.

எழுதியவர் : பகிர்வு:செல்வமணி (19-Dec-15, 9:02 pm)
பார்வை : 733

மேலே