மண்ணில் தமிழரின் மாண்பு

வந்தாரை வாழவைத்து வாழ்த்தும் பெருங்குணத்தால்
மந்தாரப் பூப்போல் மனம்மலர்ந்து – சிந்துகின்ற
பேரன்பு மாரி பெருமேகச் சூல்கொண்டு
பாரெங் குமுலவும் பண்பு

சொந்தபந்த சொத்து சுகமிழந்து சோர்வடைந்து
வந்தேறு மண்ணின் வசப்பட்டு – சிந்தை
நிலைகுழைந்தே நின்றிடினும் நில்லார் தமிழர்
கலைவளர்த்துக் காப்பர் மரபு.

கடல்தாண்டி வாழ்வின் கரைசேர தத்தம்
உடலுழைப்பைக் கொட்டி உதிர்ந்தும் – திடமாய்
அயல்நாட்டு மண்ணில் அயராத் தமிழர்
இயல்தமிழ் செய்வர் இசைந்து

விண்தாண்டிச் சென்றும் விலைமதிப் பில்லாநம்
பண்பாட்டைக் கட்டிப் பலமாகப் – பண்பாடி
கண்போலக் காக்கும் கரிசனமே காட்டுதன்றோ
மண்ணில் தமிழரின் மாண்பு

உலகத்தி லெங்கும் நிறைந்திருந்தும். மூளும்
கலகத்தி லாங்காங்கே மாண்டும் – பலமாக
மீண்டெழுந்து கொள்ளும் மறத்தமிழர் மண்ணாட்சி
மாண்பு வரலாறு பார்.

கல்லெல்லாம் அன்றே கலைச்சிற்பம் செய்ததனை
வெல்வதற்கு மண்மேலே வேறொருவர் – இல்லையெனச்
சொல்லவைத்த தெம்தமிழர் சுந்தரக்கை வண்ணமெலாம்
பல்லாண்டு கால பரிசு.

மொழிகளின் தாயாம் முதிர்ந்தத் தமிழை
மொழியென் றுயிரில் முடிந்து – எழிலாகக்
கண்ணின் மணியெனக் காக்கின்றப் பற்றன்றோ
மண்ணின் தமிழரின் மாண்பு .

ஒப்பற்ற தெங்கள் உலகப் பொதுமறை
தப்பற்ற தந்தத் திருக்குறள். –அப்தம்
பலதாண்டி ஆன்றோர் புகழ்சூட மண்ணில்
உலவுவதோ ஒப்பற்ற மாண்பு

தொல்காப் பியம்மற்றும் தொன்மை பொருந்திய
நல்காப் பியங்களும் தொன்றுதொட்டு – கல்வெட்டாய்
இன்றுவரைக் காத்திருக்கும் எந்தமிழர் தம்மாண்பு
ஒன்றல்ல நூறுண்டு காண்.

*மெய்யன் நடராஜ்

துபாய் தமிழர் சங்கம, நடாத்திக்கொண்டிருக்கும் உலகளாவிய கவிதைப்போட்டியில் இரண்டாம் சுற்றில் தேர்வாகி மூன்றாவதும் இறுதியுமான சுற்றுக்குள் நுழைவதற்கு வழிவகுத்தக் கவிதை.

எழுதியவர் : மெய்யன் நடராஜ் (இலங்கை) (20-Dec-15, 1:56 am)
பார்வை : 255

மேலே