தோழியின் ஊடல் - இலக்கியம்

தோழியின் ஊடல்
இலக்கியம்


தமிழில் அன்பின் இணையரிடம் ஏற்படும் சிறு பிணக்கு
ஊடல் எனப்படும். அன்பினருக்குள் ஏற்படும்
இந்த ஊடல் மேலும் அன்பினை மிகுவிக்கக்கூடியது.
சங்ககால களவு வாழ்க்கையில் தலைவன்-தலைவி இருவரும்
சந்திப்பதற்குக் குறியிட்ட இடத்துக்கு காதலி வரத் தவறிய
போது காதலன் ஊடுவான்.

கற்பு வாழ்க்கையில் தலைவனின் பரத்தை ஒழுக்கத்தைக்
கண்டிக்கும் விதமாகத் தலைவி ஊடுவாள். தலைவியின்
ஊடலைத் தீர்க்கத் தலைவன் தூது விடுவான். பாங்கன்
தூதாகச் செல்வான். தலைவி ஊடல் நீங்கத் தூது விட்டதாகக்
குறிப்புகள் இல்லை.

இவ்வகை ஊடலை உணர்த்தும் பல பாடல்கள் சங்க அக
இலக்கியங்களில் உள்ளன.

களவு, கற்பு எனும் இரு அக வாழ்க்கை நிலையிலும் தலைவன் –
தலைவி இருவருக்குள் ஏற்படும் ஊடலைத் தோழி பக்குவமாக
எடுத்துரைத்து ஊடல் நீக்குவாள்.

தோழியின் ஊடல் நீக்கமானது களவு வாழ்க்கையில் காதலைத்
தொடரச் செய்யும், கற்பு வாழ்க்கையில் இல்லறத்தைச் சிறக்கச்
செய்யும்.

தலைவன், தலைவிக்குள் ஏற்படும் ஊடலை நீக்கும் தோழிக்கே
ஊடல் ஏற்பட்டதை வெளிப்படுத்தும் கபிலர் பாடிய ஒரு பாடல்
நற்றிணையில் உள்ளது. தலைவனுக்குக் குறைநேர்ந்தபோது
தலைவியிடம் பக்குவமாக எடுத்துச் சொல்லி, தலைவன்
நிலையை உணரச் செய்யலாம் என்று தோழி எண்ணுகிறாள்.

தலைவி, தோழியின் சொல்லைக் கேட்டும் மனநிலையில்
இல்லாது அவள் சொல்வதை கண்டும் காணாததுபோல்
இருக்கிறாள். தாம் சொல்லும் கருத்தைக் கேட்கும் நிலையில்
இல்லாத தலைவியை நோக்கிப் பலவாறு கூறிவிட்டு ஊடுகிறாள்
தோழி.


“”மாயோன் அன்ன மால் வரைக் கவாஅன்

வலியோன் அன்ன வயங்குவெள் அருவி

அம்மலை கிழவோன் நம்நயந்து என்றும்

வருந்தினன் என்பதோர் வாய்ச்சொல் தேறாய்

நீயும் கண்டு நும்மரோடும் எண்ணி

அறிவறிந்து அளவல் வேண்டும் மறுதரற்கு

அரிய வாழி தோழி பெரியோர்

நாடி நட்பின் அல்லது

நட்டு நாடார்தம் ஒட்டியோர் திறத்தே” (நற்-32)

“மாயோனைப் போன்ற கரிய பெரிய மலைப்பக்கம்;
கண்ணனுக்கு முன்னவனாகிய பலதேவன் போன்று
வெண்மையான அருவிகள்; அத்தகு மலைக்குரிய தலைவன்
நாள்தோறும் நம் தினைப் புனத்தின் அருகில் வந்து நம்மை
விரும்பி வருந்தி நிற்கிறான் என்று நான் கூறும்
உண்மையான உரையை நீ ஏற்றுத் தெளிந்து கொள்ளவில்லை.
அவன் கூற்றும் மறுத்தற்குரியது இல்லை.

நான் சொல்வதைக் கேட்கவில்லையென்றாலும் உன்னிடத்து
அன்பு கொண்ட தோழியரிடம் கேட்டாவது ஆராய்ந்து இது
தக்கது, இது தகாதது என்பதை அறிந்து கொள்வாயாக.
அறிவுமிக்க சான்றோர் தம்மொடு நட்புக் கொள்ள
விரும்பியவர்களின் குணங்களை முதலில் ஆராய்ந்து பார்த்த
பின்னரே நட்புக்கொள்வர்.

நட்பு கொண்ட பின்னர் ஆராய்ந்து பார்க்க மாட்டார். நீ அவ்வாறு
தலைவனோடு நட்புக் கொள்ளவில்லை. முதலில் நட்புக் கொண்டு
விட்டு இப்போது வெறுத்தல் தகாது என்பதை அறிக” என்று
தோழி தலைவியிடம் ஊடல் கொண்டுவிட்டுச் செல்கிறாள்.

சங்க இலக்கியங்களில் தோழி, தலைவியோடு ஊடல் கொள்வதாக
இந்த ஒரு பாடல் மட்டுமே உள்ளதாகத் தெரிகிறது.
தோழி ஊடல் கொள்ளும் வகையிலமைந்த இப்பாடல்,
467(எண்ணித் துணிக), 791 (நாடாது நட்டலிற்) ஆகிய இரு
குறட்பாக்களை நினைவுகொள்ளச் செய்கிறது.

————————————
-முனைவர் இரா. வெங்கடேசன்
நன்றி- தினமணி

எழுதியவர் : படித்தேன் பகிர்ந்தேன் (25-Dec-15, 9:48 am)
பார்வை : 429

மேலே