ஆலமரம்

ஆலமரம்
----------------
தாளையடி சபாரத்தினம்
-----------------
அவளுடைய மூதாதைகள் 'அவளுக்கு' என்று வைத்து விட்டுப் போனது அந்த ஆலமரம் ஒன்றைத்தான். அந்த உடைந்த சட்டி, விளிம்பில்லாத பானை, அடுப்பாக உபயோகிக்கும் மூன்று கற்கள், தென்னம்பாளை – யாவும் அவளாகத் தேடிக்கொண்டவை. அவள் அறிந்தமட்டில் அவளுக்கு இன பந்துகள் யாருமிருப்பதாகத் தெரியவில்லை. எலும்பினாலும், தோலினாலும் மாத்திரமே ஆக்கப்பட்டது போன்ற ஒரு நாய்தான் அவளுடைய பந்து: உயிருக்குயிரான காவலாளியுங்கூட....

காலையில் எழுந்தவுடன் தென்னப்பாளையினால் அம்மரத்தைச் சுற்றி நன்றாகச் சுத்தம் செய்வாள். அருகே இருக்கும் நீரோடைக்குச் சென்று பானையில் நீர்கொண்டு வந்து தான் கூட்டிய இடங்கட்குத் தெளிப்பாள். பின் பழைய சோறு ஏதாவது இருந்தால் தானுமுண்டு தன் நாய்க்கும் கொடுப்பாள். பொழுது நன்றாகப் புலர்ந்ததும், அந்த உடைந்த சட்டியைக் கையிலெடுத்துக் கொண்டு பிச்சைக்குப் புறப்படுவாள். போகும்போது தன் நாயை வாத்சலயத்தோடு தடவிவிட்டுச் செல்வாள். அதுவும் தன் வாலைக் குழைத்து இருதயபூர்வமான நன்றியைக் கண்கள் மூலம் தெரிவிக்கும்.

தெருத் தெருவாக அலைவாள் - மூலை முடுக்கெல்லாம் போவாள் - யாராவது இரங்கி ஏதாவது உணவு கொடுத்தால், அதைப் பத்திரமாக உண்ணாமல் வைத்துக் கொள்வாள். 'ஏன் சாப்பிடாமல் கொண்டு போகிறாய்?' என்று கேட்டால் 'நடக்கமுடியாத ஒரு கிழவனுக்குக் கொண்டு போகிறேன்' என்று கூறுவாள். அவள் வரவை ஆவலோடு எதிர்பார்த்துக்கொண்டு ஏங்கியிருக்கும் அந்த நாயின் அருமை அவளுக்கல்லவோ தெரியும். ஆலமரத்தடியில் மறைத்து வைக்கப்பட்டிருக்கும் கந்தல்களையும் மற்றப் பொருட்களையும் பாதுகாத்துக் கொண்டிருக்கும் காவலாளி அல்லவா அது.

சுமார் இரண்டு மூன்று மணிக்குத் தன் இருப்பிடம் நோக்கி விரைந்து செல்வாள். அவளுக்கு முன்னால் அவளுடைய உள்ளம் பறந்துகொண்டிருக்கும். தூரத்தில் வரும் பொழுதே கரிய முகில் கூட்டத்தைப்போல ஆலமிலைகளின் கூட்டம் காட்சியளிக்கும். அவளுடைய உருவங் கண்ணிற்பட்டதும் தாயைக் கண்டவுடன் துள்ளிக்குதித்தோடும் பசுக் கன்றைப்போல் அந்த நாய் ஓடிச்சென்று அவளைத் சுற்றி சுற்றி வாலைக் குழைக்கும். அவளும் அன்போடு அதைத் தடவிக் கொடுப்பாள்.

ஆலமரத்தின் கிழே உட்கார்ந்ததும் அவளுடைய களைப்பெல்லாம் மாயமாய் மறைந்துவிடும். கொண்டு வந்ததை நாயோடு பகிர்ந்து உண்பாள். சிறிது நேரம் சென்றபின் பக்கத்திலுள்ள நீரோடைக்குச் சென்று குளிப்பாள். சுமார் ஆறு, ஏழு மணியளவில் அரிசி இருந்தாற்சோறாக்குவாள். இதற்கிடையில் அவளுடைய நண்பர்கள் - காகங்கள், குயில்கள் முதலியன – கா, கூ என்று ஆரவாரித்துத் தாங்கள் வந்திருப்பதை அவளுக்குத் தெரிவிப்பார்கள். எல்லோருமுறங்கியபின் அவளும் அந்த வேரில் தன் தலையைச் சாய்ப்பாள். அந்த ஆலம்வேர்தான் அவளுடைய தலையனை. அவளுடைய குருட்டுத் தாத்தா உறங்கியதும் அதே வேரில் தலைவைத்துத்தான். சீமேந்தால் மெழுகப்பட்ட கவரைப்போல அந்தவேர் அழுத்தமாக இருந்தது.

அன்றும் அவள் அதே வேரில் தான் தலைவைத்துக் கொண்டு நிம்மதியாகத் தூங்கினாள். அந்தநாயும் அவளின் காலடியில் தூங்கிக் கொண்டிருந்தது. திடீரென்று ஒரு பயங்கரமான கனவு கண்டு துடித்து எழுந்தாள். வாய் என்னவோ கூறி உளறியது. மரத்தைச்சுற்றி ஒருமுறை வந்தாள். அப்பொழுதும் அவளுக்குத் திருப்தி உண்டாகவில்லை. நன்றாக ஒருமுறை அண்ணாந்து பார்த்தாள். மரம் மரமாகத்தானிருந்தது. அது முறிந்து வீழ்ந்து விடவில்லை. கண்டது வெறும் கனவாக இருந்தாலும் அவளுடைய உள்ளத்தில் சகிக்கமுடியாத வேதனை குடி கொண்டது. பொங்கி வரும் கண்ணீரை அடக்கினாள்: ஆனால் அடக்கமுடியவில்லை. அருகே கவலை தேங்கிய முகத்தோடு நின்ற நாயை அருகிழுத்து அணைத்துக்கொண்டாள். அதுவும் தன்னுடைய நாவால் அவளுடைய கரத்தை நக்கியது. இரவுமுழுவதும் தூங்காமல் விழித்துக் கொண்டிருந்தாள்.

பொழுது புலாந்ததும் வழக்கம்போல் சட்டியைக் கையில் எடுத்துக்;கொண்டு புறப்பட்டாள். அவளுடைய மனம் சஞ்சலப்பட்டது. தான் கண்ட பயங்கரமான கனவை ஒருமுறை நினைத்துப் பார்த்தாள். ஒருவேளை உண்மையில் அப்படி நடந்தால்..... நினைக்கவே அவளுடல் நடுங்கியது. கால்கள் செல்ல மறுத்தன. எத்தனை நாட்களுக்குப் போகமலிருக்க முடியும்? ஒருநாள் பிச்சைக்குச் செல்லாவிட்டால் அவளுடைய கதி என்ன? அவளையே நம்பிக் கொண்டிருக்கும் நாயின் கதிதான் என்ன? மனக்கலக்கத்தோடு புறப்பட்டாள். மரத்திலிருந்து இரண்டு மூன்று பனித்துளிகள் அவள்மேல் வீழ்ந்தன. பரிதாபத்தோடு அண்ணாந்து பார்த்தாள். மறுபடியும் பனித்துளிகள் வீழ்ந்தன. அவள் அதைக் கேவலம் பனித்துளிகளாக நினைக்கவில்லை. 'நிராதரவாக என்னை விட்டுப் போகிறாயா' என்று அந்த ஆலமரங்கதறிப் பெருக்குங் கண்ணீர்தான் அத்துளிகள் என்று நினைத்தாள். அவள் கண்களும் நீரைச் சொரிந்தன.

அவள் பிச்சைக்குச் சென்றுவிட்டாள். ஆனால் மனம் மட்டும் நிம்மதியாயில்லை. வழக்கத்திற்கு விரோதமாகப் பன்னிரண்டு மணிக்கே இருப்பிடத்தை நோக்கி நடந்தாள். எல்லோருங் கூட்டங் கூட்டமாக நின்று எதையோபற்றி ஆனந்தத்தோடு பேசிக்கொண்டு நின்றார்கள். அதை என்னவென்றறிய அவளுக்குமாசைதான், ஆனால் அவர்களிடம் சென்று அறியக்கூடிய தகுதி அவளுக்கு இல்லை. அவ்வழியால் வந்த ஒரு சிறுமியிடம் விசாரித்தபொழுது, 'எங்கள் கிராமத்திற்கு றெயில் பாதைபோடப்போகிறார்களாம். இன்னுமிரண்டு, மாசத்துள் றெயில் ஓட ஆரம்பித்துவிடும் என்று அப்பா சொன்னார்' என்றாள் சிறுமி.

றெயில் வந்தாலென்ன?, ஆகாயக்கப்பல் வந்தாலென்ன? பிச்சைக்காரியாகிய அவளுக்கு இரண்டுஞ்சரிதானே? இருப்பிடத்தை நோக்கி அவள் விரைவாக நடந்தாள்.

'இதென்னடா சனியன்! வேலைசெய்ய விடமாட்டேனென்கிறதே' என்றானொருவன். ஆங்கில உடையில் நின்ற எஞ்சினியரின் கைத்துப்பாக்கி 'டுமீல்' என்ற சத்தத்தோடு வெடித்தது. இவ்வளவு நேரமும் மரத்தைச் சுற்றிச்சுற்றித் தன் எஜமானியின் பொருட்களுக்காகப் போராடிய அந்த நாய் மண்ணிற் சாய்ந்தது.

சுமார் கால் மைல் தூரத்தில் வரும்பொழுதே தென்படும் ஆலமரம் இன்று வெகு சமீபத்தில் வந்ததும் அவள் கண்ணுக்குப் புலப்படவில்லை. ஆலமரம் இருந்த இடம் ஒரே வெளியாக இருந்தது. இரவு கண்டகனவு அவள் ஞாபகத்திற்கு வந்தது. கையிலிருந்த சட்டி 'தடா'லென்று வீழ்ந்தது. மரத்தடியை நோக்கி ஓடினாள். அவளுடைய சாமான்கள் ஒரு பக்கத்தில் எறியப்பட்டுக் கிடந்தது. இன்னொரு பக்கத்தில் அவளுடைய நாய் உயிரற்றுக் கிடந்தது. மறுபக்கம் திரும்பினாள். மாறி மாறி விழும் கோடாரிக்கொத்தைத் தாங்க மாட்டாமல் தவிக்கும் மரத்திலிருந்து உதிரம் பெருகுவது போலிருந்தது அதிலிருந்து வடிந்த பால், 'ஐயோ' என்றலறிக்கொண்டு ஓடிப்போய் வீழ்ந்தாள். திடீரென்று ஒரு கோடாரிக் கொத்து அவளுடைய தலையில் வீழ்ந்தது. எல்லோருந் திகைத்துப்போய் நின்றார்கள். வெண்ணிறரத்தமும் செவ்விரத்தமும் கலந்து அடிமரத்தைக் கழுவிக்கொண்டன.

எழுதியவர் : படித்தேன் பகிர்ந்தேன் (26-Dec-15, 8:27 am)
Tanglish : alamaram
பார்வை : 575

மேலே