மனைவியெனும் மாயத் தத்துவம் - பூர்ணம் விசுவநாதன் தினமணி கதிர் 1311967

ஆபிஸிலிருந்து வீடு திரும்பிய போது, நன்றாகத்தான் இருந்தேன். அதாவது ‘நன்றாகத் தான் இருந்தேன், என்று நான் நினைத்துக் கொண்டிருந்தேன். நன்றாக இல்லை என்பது பிறகல்லவா தெரியப் போகிறது?

கதவைத் திறந்து என்னை வரவேற்ற மனைவி, என்னை ஏதோ மாதிரி பார்த்தாள். ஓயாமல் உழைக்கும் ‘டைப்’ ஆனதால், அவள் தான் களைத்த நிலையில் என்னை எதிர்க் கொண்டழைத்தாள்! நான் சரியாகத் தானிருந்தேன். ஆனால், நான் கதவைத் தாண்டி, அவளையும் தாண்டி உள்ளே சென்ற போது, சட்டென்று, எங்கே, திரும்புங்க’ என அவள் சொல்லவே, திரும்பினேன். ‘ஏன் இப்படி இருக்கிறீர்கள்? இங்கே வாருங்கள்’ என்றாள். வந்தேன். ஒன்றும் புரியாமல், ‘நிமிருங்கள்’ என்றாள். நிமிர்ந்தேன். ‘ஐயையோ, கண்களிரண்டும் ஏதோ மாதிரியிருக்கிறதே’ என்றாள். என் குழப்பம் அதிகமானதால், நானே கண்களை ஏதோ மாதிரி வைத்துக் கொண்டு நின்றேன்! இந்த மாதிரி சந்தர்ப்பங்களில் என்ன பேச வேண்டும் என்பது பாடமில்லாததால், பேசவும் நாக்கு வரவில்லை. இது என் மனைவியின் கலவரத்தை அதிகமாக்கியிருக்க வேண்டும். ஏனென்றால், அவள் முன்னை விட உயர்ந்த ஸ்தாயியில், ‘எங்கே பார்க்கலாம்’ என்று கூறி, என் நெற்றியில் கை வைத்துப் பார்த்தாள். மறுவிநாடி ‘ஆ’வென்று அவள் போட்ட நெருங் கூச்சலில் நான் பதறிப் போய்க் கீழே விழப் பார்த்தேன்.



‘நெற்றி மழுவாய்க் கொதிக்கிறதே’ என்று அவள் பரிதாபமாகக் கத்திக் கொண்டு, என்னை கைத்தாங்கலாக உள்ளே இட்டுச் சென்றபோதுதான் எனக்கு அவளுடைய பதற்றத்தின் காரணம் புரிந்தது. எனக்கு ஜூரம் வந்துவிட்டது என்பது தெரிந்தவுடனேயே கால் தள்ளாட ஆரம்பித்தது! நான் படுத்த படுக்கையாகிவிட்டேன்.

நான் வீடு திரும்பியபோது இருட்டும் சமயமாகியிருந்தது. என் ஜூர வேகத்தைக் கண்டுபிடித்து என் மனைவி என்னைப் படுக்கையில் வலுக்கட்டாயமாக வீழ்த்திய போது, மணி ஏழுக்கு மேலிருக்கும். அதனால் தான் டாக்டரைக் கூப்பிடுவதற்காக அவள் புறப்பட்ட போது நான் தடுத்துவிட்டேன். ‘காலையில் எப்படியிருக்கிறது என்பதைப் பார்த்துக் கொண்டு அழைத்து வரலாம்; இப்போது கட்டாயப்படுத்தானே’ என்று நான் கொஞ்சம் அதட்டலாகச் சொன்னேன்.

உங்களுக்கெல்லாம் எப்படியோ தெரியாது; எனக்கு ஜூரமென்றால் கொள்ளைப் பசியாய் இருக்கும். இது அவளுக்கே தெரியும். இருந்தாலும், ஜூரத்தின்போது எது நாக்குக்கு வேண்டியிருக்கிறதோ, அதைக் கொடுக்கக் கூடாது என்று சட்டமிருப்பதால், என் பசிக்குக் கஞ்சிதான் கிடைத்தது! குடித்துத் தொலைத்தேன். மனைவி மிகமிக ஜாக்கிரதையாகத் தெளிவுக் கஞ்சியாகவே கொடுத்து என்னை வாட்டிவிட்டாள். ஒன்றிரண்டு பருக்கைக்காக நாக்கு வலியெடுத்ததுதான் மிச்சம். நாலைந்து டம்ளர் வெறும் தண்ணீர் குடித்தது போன்ற வெற்றுப் பொருமலுடன் படுத்துக் கொண்டேன்.

வீட்டரசி ஓர் அபூர்வப் பிறவி. கணவனுக்குச் சற்றே உடம்பு சரியில்லாவிட்டாற் கூட அவளுடைய உற்சாகமெல்லாம் பறந்தோடிவிடும். எனக்காக என்னென்னவோ தயாரித்து வைத்திருந்தவள், எனக்கு ஜூரம் வந்துவிட்டதால், தானும் சரியாகச் சாப்பிடாமல், ஏதோ கொறித்துவிட்டுத் திரும்பினாள். ஏனென்று கேட்டேன். ‘ஒன்றும் வேண்டியிருக்கவில்லை’ என்று அவள் சொன்னபோது எனக்கு நெஞ்சு தழுதழுத்தது. கண்ணீரை அடக்கிக் கொண்டேன்.

ஜூரமும் இருக்காது, ஒன்றும் இருக்காது. வீடு நிறைய விருந்து இருக்கும். அந்தச் சமயத்திலெல்லாம் எதுவும் வாய்க்கு வேண்டியிருக்காது. ஏதாவது ஒரு சாக்குச் சொல்லி சரியாகவே சாப்பிட மாட்டேன். இப்போது ஜூரத்தில் படுத்துத் தூங்க ஆரம்பித்துவிட்டேனல்லவா? கனவு மாளிகை பூராவும் விருந்து மண்டபம்தான். கண்ணுக்கெட்டிய தூரம் வரை சாப்பாட்டு இலை போட்டிருக்கிறது. மாளிகையின் சுவர்களிலெல்லாம்கூட இலை போட்டு வகைவகையாகப் பரிமாறியிருக்கிறார்கள். பாவிப் பயல்கள்! காணாததைக் கண்டுவிட்டால் என்ன உறிஞ்சு உறிஞ்சுகிறார்கள்!

என் காலி வயிற்றைக் கேலி செய்யும் பரதேசிகள்; அவர்கள் உறிஞ்சும் சத்தமே என் கனவைக் கலைத்து, என்னை எழுப்பியும் விட்டது. உச்சந்த் தலை முதல் உள்ளங்கால்வரை ஒரு தரம் சிலிர்த்துக் கொண்டு கண் விழித்தேன்.

அந்தச் சத்தம் விருந்தாளிகள் உறிஞ்சல் அல்ல, என் குறட்டைச் சத்தம் தான் என்னை எழுப்பி விட்டது என்பது தெரிந்தபோது, எனக்கு வெட்கமாயிருந்தது. விடிவிளக்கு எரிந்து கொண்டிருந்ததால் தலையைத் திருப்பி, கட்டிலுக்கருகே தரையில் என் மனைவியின் படுக்கையைப் பார்த்தேன் தூக்கி வாரிப்போட்டது.

அவள் அங்கே படுத்திருக்கவில்லை. உட்கார்ந்து என்னையே பரிவுடன் உற்றுப் பார்த்துக் கொண்டிருந்தாள். நான் தவறிப் போய், ‘அடடா, நீ தூங்காமலா இருக்கிறாய்?’ என்று கேட்டேன். அதற்கு அவள், ‘தூக்கமே வரவில்லை. உங்களுக்கு இப்படி திடீரென்று வந்துவிட்டதே என்று மனத்துக்கு சஞ்சலமாயிருக்கிறது’ என்று பதில் கொடுத்தாள். எனக்குச் சற்று கோபம் வந்தது. ‘இதென்ன அசட்டுத்தனம்? பேசாமல் படுத்துத் தூங்கு’ என்று கட்டளையிட்டுவிட்டு புரண்டு படுத்தேன்.

மறுநிமிடம் அவள் எழுந்து வந்து தன் தளர்ந்த வலக்கையால் நெற்றியில் தொட்டுப் பார்த்தாள். உடனே பதறிக் கையை எடுத்துவிட்டு, ‘ஐயேயோ ஜூரம் இப்பொழுது அதிகமாகிவிட்டது. ஒரேடியாகக் கொதிக்கிறதே’ என்று அரற்றினாள். ‘விடிந்தவுடன் முதற்காரியமாக டாக்டரை அழைத்து வந்தாக வேண்டும்’ என்று சொல்லிக் கொண்டே மறுபடி படுக்கையில் போய் உட்கார்ந்தாள். சரியான பித்துக்குளி.

நான் மீண்டும் கண்ணயர்ந்து சொர்ப்பனம் காண ஆரம்பித்தபோது விருந்து மண்டபம் எதையும் காணோம். இரண்டே இரண்டு பேர் மட்டும் என் எதிரே வந்து நின்று கொள்கிறார்கள். ஒருவனிடம் ஒரு பெரிய காகிதச் சுருள் இருக்கிறது. மற்றவன் அதைப் பிரித்துக் கொஞ்சம் கொஞ்சமாக இழுத்துக் கீழே விடுகிறான். அந்தக் காகிதச் சுருள் நிறைய எனக்குப் பிடித்த தின்பண்டங்கள், சமையல் வகைகள் முதலியவற்றின் பெயர்கள் கொட்டை எழுத்தில் எழுதப்பட்டிருக்கின்றன. எனக்கு இத்தனை பண்டங்கள் பிடிக்கும் என்பதே அந்தப் சொர்ப்பன லிஸ்டைப் பார்த்த பிறகுதான் தெரிந்தது! எனக்கு யாரோ விபூதியிட முயலுவதை உணர்ந்து விசித்துக் கொண்டேன். என் நெற்றியில் கை வைத்த டாக்டர், என்னைப் பரிசோதித்துக் கொண்டிருந்தார். அந்தச் சாப்பாடு லிஸ்ட் சொப்பனம் அரை வினாடிதான் நீடித்த மாதிரி ஒரு பிரமை! இருந்தாலும் பல மணிகளைக் கடந்துமறுநாள் காலைக்கு வந்துவிட்டோமே என்று நான் ஆச்சரியப்பட்டுக் கொண்டே டாக்டருக்கு நல்வரவு கூறினேன். டாக்டர் என்னுடைய மரியாதைக்குக் கூட மதிப்புக் கொடுக்காமலென்னையே வியப்புடன் பார்த்துக் கொண்டிருந்தார். அவர் கை மட்டும் என் நெற்றியில் இருந்தது. எனக்கு ஒன்றும் புரியவில்லை. நான் விழித்தேன். என் மனைவி கவலையுடன் என்னையும், டாக்டரையும் மாறி மாறிப்பார்த்தாள்! நான் அவளைப் பார்த்தேன். ஐயோ, அந்த ஓர் இரவில் எப்படி உருமாறிப் போய் விட்டாள்? வாடிச் சருகாகத் தோற்றமளித்தாள். எனக்கு வேதனையாயிருந்தது. இப்படி கணவனுக்காக கரைவதுதானா ஸ்திரீ தர்மம்?

டாக்டர் சட்டென்று கையை என் நெற்றியிலிருந்து அகற்றிவிட்டுப் பரபரப்புடன் தமது பையிலிருந்த ஒரு தெர்மாமீட்டரை எடுத்து என் நாக்குக்கடியில் வைத்தார். எனக்கு இருந்த பசியில் அதைக் கடித்துத் தின்னாமல் விட்டது ஆச்சரியம்தான். ஒரு முழு நிமிடத்துக்குப்பிறகு தெர்மாமீட்டரை என் வாய்ப் பிடியிலிருந்து விடுவித்த டாக்டர் உற்றுப் பார்த்தார். என் மனைவி அவளால் முடிந்ததைச் செய்தாள். அதாவது, டாக்டரையும் என்னையும் தெர்மாமீட்டரையும் மாறி மாறிப் பார்த்தாள். இந்த வேடிக்கையை நான் எத்தனை நேரம் பார்த்துக் கொண்டிருப்பது? ‘ஒரு பெரிய பீரங்கியைக் கொண்டு வந்து ஒரு பிரும்மாண்ட குண்டாக வெடித்து அந்தப் பயங்கர மெளனத்தைத் தூள் தூளாகச் சிதறடித்துவிடலாமா? என்று துடித்தேன்.



அந்தத் துடிப்பை முடிப்பதுபோல் டாக்டர் தெர்மாமீட்டரை என் மனைவியிடம் கொடுத்து, ‘நீங்களே பாருங்கள்’ என்று சொல்லிவிட்டு விலகினாற்போல் நின்றார். அவள் அதை வாங்கி, நன்கு அழுத்திப் பிடித்துக் கொண்டு உருட்டு உருட்டென்று உருட்டினாள்.

எனக்கு சிரிப்பு வந்தது. வீட்டில் தெர்மாமீட்டரே வைத்துக் கொள்ளாதவர்களுக்கு, அதில் பாதரச மட்டத்தைக் கண்டுபிடிக்கும் ஆற்றல் மட்டும் நினைத்தவுடன் வந்துவிடுமா? இருபத்தி நாலு மணி நேரமும் தெர்மா மீட்டரை வைத்துக் கொண்டு விளையாடும் டாக்டர்களுக்கே பாதரச மட்டம் லேசில் தட்டுப்படாது. அவருடைய திணறல் எனக்குப் புரிந்தது. அவள் அந்தக் கருவி மூலம் என் ஜூரத்தின் இயல்பைப் புரிந்து கொண்டிருப்பாள் என்ற எண்ணத்தில் டாக்டர், ‘இப்போது என்ன சொல்கிறீர்கள்?’ என்று கேட்டார். அவள், பாவம், என்னத்தைச் சொல்லுவாள்? அசட்டுச் சிரிப்புடன், தெர்மாமீட்டரின் பதரசக் குழியை அமுத்திப் பிடித்தவாறு டாக்டரைப் பார்த்தாள். ‘என்னம்மா, பேசாமல் நிற்கிறீர்கள்?’ ரீடிங் எவ்வளவு பார்த்தீர்களா?’ என்றார் டாக்டர்.

இந்தக் கட்டத்தில் என் மனைவிக்குப் பொறுமை போய்விட்டது என்று நினைக்கிறேன். ‘ஹ்ஹ்…அது எத்தனை டிகிரி என்பது சரியாகத் தெரியவில்லையே’ என்று ஒப்புக் கொண்டாள். அவளுடைய தைரியத்தை நான் மனத்துக்குள் வியந்து பாராட்ட ஆரம்பிப்பதற்குள் டாக்டர் அவரிடமிருந்து தெர்மாமீட்டரைப் பறித்துக் கொண்டு, அதன் மட்டத்தைத் தேடினார். அந்த மட்டம் தட்டுப்பட்டபோது அவர் ஓவென்றலறித் துள்ளிக் குதித்தார்! நானும் என் மனைவியும் அவருடைய டெம்பரேச்சரையே சந்தேகப்பட ஆரம்பித்தோம். அதற்குள் அவர் என் மனைவியிடம், ‘சற்றுமுன் நார்மலாயிருந்தது இப்போது எப்படி 105 டிகிரியாயிற்று?’ என்று கத்தினார்.

’ஆ! 105 டிகிரியா? என்று அவளும், நானும் கத்தினோம். இப்படி ஜூரம் ஏறினால் எனக்கு சொப்பனத்தில் கூட விருந்து தென்படுமா என்ற பீதி ஏற்படவே, மறுபடி ஒரு தடவை வாய்விட்டு ‘ஆ! 105 டிகிரியா?’ என்று கூச்சலிட்டேன்.

டாக்டர் என்னையும், மனைவியையும் ஆளுக்கு மூன்று தடவை என்ற கணக்கில் மாறி மாறிப் பார்த்தார். அப்புறம் என்னை மட்டும் பார்த்தார். நான் கட்டிலில் ஒருக்களித்துப் படுத்தவாறு, அவரையே பார்த்தேன்.

(எனக்கும் பார்க்கத் தெரியாதா?) திடீரென்று அவர், ‘ஓய், இறங்கும்’ என்று அதட்டினார். நான் ஒருக்களித்த நிலையிலேயே தலையை மட்டும் திருப்பி எனக்குப் பின்னால் பார்த்தேன். அவர் யாரைச் சொல்கிறார் என்று தெரிந்து கொள்ள. ‘உம்மைத் தான், இறங்கும் கட்டிலிலிருந்து’ என்று அவர் ஒரு கத்தல் போட்டார். அவருடைய கூரிய பார்வையை ஆராய்ந்தேன். அது என்னோடு நின்றுவிட்ட பார்வை என்பது அப்போதுதான் தெரிந்தது. எனக்குப் பின்னால் தான் யாருமில்லையே! அப்படியென்றால், என்னையா இறங்கச் சொன்னார்?’

என் மனைவியின் கூச்சலையும் பொருட்படுத்தாமல் ஒரே துள்ளலில் கட்டிலிலிருந்து குதித்தேன். படுக்கையைத் தட்டி, பெட்ஷீட்டைச் சரி செய்யச் சொன்னார். ஒரு நொடியில் செய்தேன். மறுநிமிடம் டாக்டர் என் மனைவியிடம் பரிவுடன் சொன்ன வார்த்தைகள் என்னைத் துடிதுடிக்க வைத்தன! ‘நன்றாயிருக்கிறதம்மா, நீங்கள் இவ்வளவு ஜூரத்தை வளர்த்து விட்டுக் கொண்டு, அவருக்கு உடம்பு கொதிப்பதாக நினைத்துக் கொண்டு, அவரை நோயாளியாக்கிப் படுக்கப் போட்டு விட்டீர்களே! ஜூர வேகத்தில் சுருண்டு விழுவதற்குள் படுத்துக் கொண்டு விடுங்கள்.’

கசங்கிய துணிபோல் கட்டிலில் படுத்துக் கிடந்த என் மனைவியைப் பார்த்தவாறு உட்கார்ந்திருந்தேன். அவளுடைய மெலிந்த கை என் கைகளுக்குள் புதைபட்டிருந்தது. எனக்குப் பேச்சு வரவில்லை. திடீரென்று கொதிக்கும் வெந்நீர் என் கண்களிலிருந்து கண்ணீர் கொட்டியது. அவள் பதற்றத்துடன் ‘ஐயோ, ஏன் அழுகிறீர்கள்?’ என்று கேட்டாள். நான் அழுகைக்கு நடுவே சொன்னேன். ‘அழாமல் என்ன செய்வேன்? மனைவி என்ற ஒப்பற்ற தத்துவத்தை நினைத்து அழுகிறேன். கடவுள் என்னும் தத்துவத்துக்கும் மேலான இந்தத் தத்துவத்தை நினைக்கும்போது ஆனந்தப்பெருக்கால் அழத்தானே வேண்டும்?’

‘உங்கள் உடம்புக்கு ஒன்றுமில்லை. அது தான் எனக்கு வேண்டியது என்று கூறியவாறு அவள் என் கைகளை இறுகப்பிடித்து அழுத்தினாள். அவள் முகத்தில் ஓர் அபூர்வ மலர்ச்சி படர்ந்தது.

(தினமணி கதிர் 13.1.1967 இதழில் வெளிவந்த சிறுகதை)

எழுதியவர் : பகிர்வு:செல்வமணி (26-Dec-15, 9:59 pm)
சேர்த்தது : செல்வமணி
பார்வை : 353

மேலே