என் வாழ்க்கைப் பயணம் - அனுபவச் சாரல்கள் 26

( மேலே உள்ள படத்தில் நான் இல்லை ...ஆனால் 50 வருடங்களுக்கு முன் எடுக்கப்பட்டது )

​நாளொரு மேடை , பொழுதொரு நடிப்பு ​, நேரத்திற்கேற்ற பேச்சு ...இறுதிவரை பேரம் ...மாறிடும் கட்சிகள்... .அரங்கேறும் காட்சிகள் .......இதுதான் இன்றுவரை நாம் காணும் அரசியல் நாடகங்கள் ., ஆட்சிக் கட்டிலில் அமர்வதற்கு தான் எத்துனை நிகழ்வுகள் ....ஏமாறப் போகிறோம் என்று அறிந்தும் ஏமாறிடும் வாக்காளர்கள் .....இவை அனைத்தும் நடப்பதால் யாருக்கு லாபம் ...?? இதுவே தொடர்ந்தால் நாட்டின் நிலை என்ன ..... அடுத்த தலைமுறையின் வாழ்வும் எப்படி இருக்கும் ..? ? யார்தான் கவலை கொள்கின்றனர் .....எங்கும் எதிலும் எவரிடமும் சுயநலமே கொடிகட்டி பறக்கிறது ....இதற்கு விடிவுத்தான் எப்போது ...தீர்விற்கு வழிதான் என்ன ...?? சிந்திக்கத் தவறுகின்றனர் நிந்திக்கும் உள்ளங்களும் ..!!

தேர்தல் நெருங்கும் நேரம் என்பதால் இது போன்ற எண்ணங்கள் என் மனதில் அலை மோதுகின்றன ....ஏழைகள் மற்றும் நடுத்தர மக்களும் அதே நிலையில் இருப்பதால் ...பாட்டாளியும் உழைப்பாளியும் தினக்கூலியும் இன்னும் அதே நிலையில் இருப்பதால் ...என்னுள் இப்படித்தான் கேள்விகள் பிறக்கின்றன ....மனித வர்க்கம் ஒரே நிலையில் வர வேண்டும் ...சமத்துவ சமுதாயம் மலர வேண்டும் ..சாதிமதங்கள் மறைய வேண்டும் ...எல்லோரும் எல்லாம் பெற வேண்டும் என்ற நினைப்புதான் என்றும் என் ஆழ்மனதில் தேங்கி கிடப்பதால் என்னவோ இவ்வாறு சிந்திக்கத் தோன்றுகிறது .

வாழ்க்கைப் பயணம் என்று எழுத தொடங்கிய நான் பாதை மாறி செல்வது போல தெரிந்தாலும் ..நோக்கமும் சிந்தனையும் நான் பெற்ற அனுபவங்களின் அடிப்படையில் , கண்ட காட்சிகளின் ஆதாரங்களால் , என் எழுதுகோலும் சமூகத்தை பற்றித்தான் கவலை கொள்வதாலும் ..மீண்டும் மீண்டும் இதெல்லாம் எழுத வேண்டிய கட்டாயமாகிறது . சூழ்நிலைகளும் அவ்வாறே ......


கடந்த வாரம் நாங்கள் படித்த புரசைவாக்கம் எம் சிடி எம் பள்ளியில் , 50 வருடங்களுக்கு முன்னர் எஸ் எஸ் எல் சி படித்து முடித்து வெளியே சென்ற மாணவர்கள் சுமார் 120 பேர் ஒன்று கூடினார்கள் . இதில் பாதிக்கு மேல் சென்னையில் இருந்தாலும் முகவரி கண்டுபிடிப்பது மிகவும் சிரமமாக இருந்தது . 20 பேர் அயல்நாட்டிலும் , மீதமுள்ளவர்கள் மற்ற மாவட்டங்கள் , மாநிலங்களில் இருந்தார்கள். ஆனாலும் சிறுதுளி பெருவெள்ளம் என்பதைப்போல , 4 பேர்தான் முதலில் இணைந்து இந்த அரிய முயற்சியை மேற்கொண்டு , சுமார் 4 மாதங்களாக உழைத்து சுமார் 150 பேரின் முகவரிகளை , அலைபேசி எண்களை கண்டுபிடித்து இந்த நிகழ்ச்சி வெற்றி பெற உதவினார்கள் . பலருக்கு முகமே அடையாளம் தெரியாத அளவிற்கு மாறி இருந்தது ....வயோதிகம் காரணமாக ....வளர்ச்சி காரணாமாக , சூழ்நிலை காரணமாக ......ஆனாலும் 26.12.2015 ஆண்டு கூடிய சுமார் 120 மாணவர்கள் ( அன்றைய ) ஒவ்வொருவர் முகத்திலும் அளவிடா முடியாத மகிழ்ச்சி ....பரஸ்பர குசலம் விசாரிப்பு ...பழைய ஆசிர்யகளை கவுரவித்தல் ....உரையாடல்கள் ....பழைய நினைவுகள் பகிர்தல் ...போன்றவை முடிந்து இறுதியில் பல்சுவை விருந்து ......மீண்டும் கூட்டம் ...இப்படி கழிந்த அந்த பொன்னான நாளை கூடிய எவரும் நிச்சயம் மறந்திட முடியாது ....

நேற்று நடந்ததையே இன்று மறக்கும் இந்த உலகத்தில் 50 வருடங்களுக்கு முன்னர் ஊன்றிய நட்பு வித்துக்கள் வேருன்றி விருட்சமாகி இன்று பல கிளைகளுடன் ....மீண்டும் அதே நட்புணர்வுடன் கூடி மகிழ்வது என்பது சாதாரண காரியமல்ல . அன்று கூடிய அனைவரும் அதே உணர்வுடன் , நட்புடன் , பாசத்துடன் தங்களுக்குள் நினைவுகளை பரிமாறி கொண்டதும் , கட்டித் தழுவிகொண்டதும் சிலிர்க்க வைத்த காட்சிகள் . இதுதான் நட்பெனும் உறவு. வந்திருந்த சில ஆசிரியர்களையும் , மறைந்தவர்களின் வாரிசுகளை மாணவர்கள் கவுரவித்து மகிழ்ந்ததும் நெகிழ வைத்தது .

இதில் மேலும் ஒரு சிறப்பு , படத்தில் உள்ள தலைமை ஆசிரியர் மறைந்த மாபெரும் மனிதர் திரு நரசிம்மன் அவர்களின் மகள் திருமதி ஜெயலக்ஷ்மி அவர்கள்தான் அன்று சிறப்பு விருந்தினராக கலந்து கொண்டு நிறைவுரை ஆற்றினார் .

மறக்கத்தான் முடியுமா வாழ்ந்து மறைந்த மாமனிதர்களையும் , மலரும் நினைவுகளையும் என்றுமே நம் வாழ்வில்......

பொற்கால வாழ்வு அது ....

நாளை புத்தாண்டு 2016 பிறக்க உள்ளது ....அனைவரின் வாழ்வும் வளம் பெறட்டும் ...நலமும் மகிழ்ச்சியும் பொங்கி வழியட்டும் .....வாழ்த்துக்கள் அனைவருக்கும் .

மீண்டும் சந்திக்கிறேன் ....


பழனி குமார்
31.12.2015

எழுதியவர் : பழனி குமார் (31-Dec-15, 3:11 pm)
பார்வை : 434

சிறந்த கட்டுரைகள்

மேலே