மாமனார் தீபாவளி - நராமச்சந்திரன்

ஆத்மநாதனின் சரீரம் ஒரு இடத்திலும் கொள்ளாதபடி தவித்தது. குட்டி போட்ட பூனை போல் உள்ளுக்கும் வாசலுக்குமாக நடை போட்டுக் கொண்டிருந்தார். நாழிகை ஆக ஆக ரயிலடியிலிருந்து வண்டி ஒன்றும் வராத காரணத்தால் அவர் மன வேதனை விநாடிக்கு விநாடி அதிகமாகிக் கொண்டிருந்தது.

நேற்று முன் தினமே அவருக்கு கடிதம் வந்துவிட்டது. கடிதத்தில் அவர் சம்பந்தி தலை தீபாவளியை முன்னிட்டுத் தானும் தன்பிள்ளை பெண் சகிதம் தீபாவளிக்கு முன் தினமே ஊர் வந்து சேருவதாக எழுதியிருந்தார். ரயில் சரியான நேரத்தில் வந்து சேர்ந்திருக்கும் பட்சத்தில் இத்தனை நேரத்திற்குள் அவர்கள் வீடு வந்து சேர்ந்திருக்கலாம். ஒருவேளை ரயில் மணிப்படி வரவில்லையா?

ஆத்மநாதனுக்கு என்ன செய்வது என்றே புரியவில்லை. ஒருவேளை ரயில் தவறியிருந்தால், மறுபடியும் காலையில்தானே வண்டி என்பதை நினைக்கும்போது தான் தலை தீபாவளியை ஒட்டிச் செய்த முன் ஏற்பாடுகள் எல்லாம் அவர் மனக்கண் முன் தோன்றிப் பரிகசிப்பது போல் இருந்தன. ஆனால் அவர் சம்பந்தி மார்க்க பந்துவா ரயிலைத் தவற விடுகிறவர்? நாலு நாழி முன்னதாகவே ஸ்டேஷனுக்கு வந்து ரயிலில் தகுந்த இடம் பார்த்து உட்கார்ந்து கொண்டிருக்க மாட்டாரா?

’பின் என்ன காரணமாக இருக்கலாம்? என்று யோசனை செய்த போது ஆத்மநாதனுக்குத் தான் மாப்பிள்ளைக்குத் தலை தீபாவளியை முன்னிட்டுச் செய்து வைத்திருந்த சீர் வரிசைகள் எல்லாம் ஞாபகத்திற்கு வந்தன. மார்க்கபந்துவைக் கண்டாலே ஆத்மநாதனுக்கு சிம்ம சொப்பன. மனுஷன் கண்களைக் காட்டியே எல்லாக் காரியங்களையும் சாதித்துக் கொண்டு போகிறவர். அப்படி இருக்கும் போது அவர் வாய் திறந்து விட்டால் கேட்க வேண்டுமா? கல்யாணத்தின் போதே அவருடைய போக்கு நன்றாகப் புரிந்து விட்டிருந்தபடியால் தலை தீபாவளியின் போது எந்தவிதத் தகராறுகளையும் வைத்துக் கொள்ளக் கூடாதென்று ஆத்மநாதன் விரும்பிச் செய்யப் போகும் வரிசைகளையெல்லாம் முன் கூட்டியே கடிதம் மூலமாக மார்க்கபந்துவுக்குத் தெரிவித்திருந்தார்.

பதில் வரும் வரை ஆத்மநாதனுக்கு உதைப்புத்தான். ஆனால் மார்க்கபந்துவிடமிருந்து பதிலே இல்லை. அதற்குப் பதிலாகத் தலை தீபாவளிக்கு முன்னதாக வந்து சேருகிறோம் என்று அவரிடமிருந்து கடிதம் வந்திருந்தது. ஆத்மநாதனும் தன் சீர்வகைகளைப் பிள்ளை வீட்டார்கள் ஒத்துக் கொண்டு விட்டார்கள் என்ற நம்பிக்கையில் இருந்தார்.

**

’ஜல் ஜல்’ என்று இரட்டை மாட்டு வண்டி ஆத்மநாதன் வீட்டு வாசலில் வந்து நின்றது. ஆத்மநாதனுக்கு தன் தேகமே பஞ்சாய்ப் போய்விட்டது போன்ற பிரமை இல்லாவிட்டால் அப்படி அவர் பறந்திருக்க மாட்டார்.

‘எண்டீ மங்களம், ஹாரத்தி எடுத்துண்டு வந்தாயா? அவாள் எல்லாரும் வந்தாச்சு’ என்று சத்தம் போட்டார். அவர் குரலுக்கு மைக்கே தேவை இல்லை. புழக்கடைப் பக்கம் இருந்த அவர் மனைவிக்கு இவர் போட்ட சத்தம் காதில் விழுந்துவிட்டது. அவசர அவசரமாகக் கரைத்து வைத்திருந்த ஹாரத்தியை எடுத்துக் கொண்டு வந்தாள். அதற்குள் பொறுமை இழந்த ஆத்மநாதன், மறுபடியும் பலக்கத் தன் மனைவியைக் கூப்பிட்டார்.

வண்டியிருந்து மார்க்கபந்து கீழே இறங்கினார். அவருக்குப் பிறகு இறங்கப்போகும் மாப்பிள்ளையை ஆவலுடன் கவனித்துக் கொண்டிருந்தார்கள் ஆத்மாநாதனும் அவருடைய மனைவியும். ஆனால் மாப்பிள்ளை இறங்கவில்லை. அதற்குப் பதிலாக இரண்டு செருப்புகள் ‘பொத் பொத்’ என்று வண்டியிலிருந்து கீழே விழுந்தன. பெண் கோமதி வண்டியிலிருந்து இறங்கி அவைகளைத் தன் பாதங்களில் அணிந்து கொண்டாள்.

‘ஒருவேளை பிள்ளையாண்டான் கடைசியில் இறங்குவானோ’ என்ற சந்தேகத்திற்கு இடம் வைக்காமல் வண்டி வீட்டின் முன் புறத்திலிருந்து நகர்ந்தது.

ஆத்மநாதனின் முகத்தில் ஈயாடவில்லை. தலை தீபாவளிக்கு மாப்பிள்ளை வராமல் அவன் தந்தையும் தங்கையும் மட்டும் வரும் அதிசயத்தைப் பார்த்தபோது சிரிப்பதா அழுவதா என்று அவருக்குத் தெரியவில்லை.

அவர் மனைவிக்கோ மனச் சஞ்சலம் அதிகமாகி விட்டது. அவளுக்கு பழங்காலச் சம்பிரதாயங்கள் அதிகமாகத் தெரியாது. சொல்லிக் கொடுக்கவும் கிழங்கட்டைகள் வீட்டில் இல்லை. கையில் வைத்திருந்த ஹாரத்தியை என்ன செய்வதென்று அவளுக்குப் புரியவில்லை.

ஒரு வேளை தலை தீபாவளிக்கு சம்பந்தி வந்தால் அவருக்கு கூட ஹாரத்தி சுத்தவேண்டுமா என்னமோ என்ற யோசனையில் ஆழ்ந்துவிட்டாள்.

அதற்குள் மார்க்கப்பந்துவும் அவர் பெண்ணும் வாசற்படி ஏறி உள்ளே வந்துவிட்டார்கள்.

‘என்ன ஆத்மநாத ஐயர்வாள் செளக்கியமா?’ என்று மார்க்கபந்து கேட்ட பிறகுதான் ஆத்மநாதனுக்குச் சுய நினைவு வந்தது. தன் முன் நடப்பது எல்லாம் தத்ரூபம் என்று விளங்கிற்று.

’ஹி…ஹி…செளக்கியம் தான். என்று இழுத்தார். மாப்பிள்ளை வரவில்லையே; எப்படி கேட்பது என்று அவருக்குத் தெரியவில்லை. மென்று விழுங்கிக் கொண்டிருந்தார்.

அதற்குள் மார்க்கபந்து சட்டையைக் கழற்றிவிட்டு விசுப் பலகை மேல் உட்கார்ந்து கொண்டார். ‘கம கம’வென்று காப்பி வந்துவிட்டது.

‘ஏன் ஸ்ரீதரன் வரவில்லையா? ஒருகால் அடுத்த வண்டியிலே வராரோ?’ என்று பேச்சை ஆரம்பித்தார் ஆத்மநாதன். அவர் மனைவி கதவோரத்தில் நின்று கொண்டு மார்க்கபந்துவின் வாயைப் பார்த்துக் கொண்டிருந்தாள்.

கேட்ட கேள்விக்குப் பதில் அளிக்காமல் மார்க்கபந்து ‘இங்கு நல்ல பொடியா கிடைக்குமா? ஒரு அரையணாவுக்கு வாங்கிண்டு வந்தா தேவலை’ என்று ஆத்மநாதனிடம் காவிப் பொடி டப்பியை நீட்டினார்.

‘பொடிக்கென்ன? வேண்டியது, மங்களம் நம்ப சுண்டுவை அனுப்பிச்சு பட்டணம்பொடி வாங்கிண்டு வரச் சொல்லு’.

‘நீங்க என்ன கேட்டேள்?’ என்று பேச்சை ஆரம்பித்தார் மார்க்கபந்து.

‘மாப்பிள்ளை ஏன் உங்க கூட வரலைன்னு கேட்டேன்.’

‘ஸ்ரீதரனா? இன்னும் வரலையா? காலை ரயிலிலேயே, வந்திருக்கணுமே. இங்கே வல்லையா? அவனும் அவன் சிநேகிதனுமா எங்களுக்கு முன்னாடியே கிளம்பிட்டார்களே.’

ஆத்மநாதனுக்கு கவலை வந்துவிட்டது. எடுக்கும் போதே இடக்காக இருக்கிறதே என்பதை நினைக்கும்போது மனசு புண்பட்டது. ‘காலை வண்டியிலே வந்தாரா? இங்கே வரவே இல்லையே. வண்டிக்குக் கூட ஆள் அனுப்பிச்சிருந்தேன்.’

மார்க்கபந்துவின் ஆள் காட்டி விரல் ‘குபுக்’கென்று மூக்கின்மேல் தாவிற்று. பிறகு அது மூக்கை நன்றாகத் தடவிக் கொடுத்துவிட்டு நெற்றிப் பக்கம் ஓடிற்று. பிறகுதான் பேச ஆரம்பித்தார்.

‘என்ன சொன்னார்? வருவதாகத்தானே சொன்னார்?’ என்று பரபரப்புடன் கேட்டார் ஆத்மநாதன்.

‘வரதாகத்தான் சொன்னான். ஆனால் சந்தேகமாகச் சொன்னான். நீங்க சீர் செய்யறதைப் பத்தி இப்படி லெட்டர் எழுதினதாலேதான் அனர்த்தம் வந்தது.’

‘ஏன் என்ன வந்துடுத்து!’

‘உங்க சீர் வரிசையெல்லாம் எனக்கும் என் பெண்ணுக்கும் பிடிக்கறதேயொழிய அவனுக்கு ஒண்ணுமே பிடிக்கல்லே! பூ இவ்வளவுதானா என்று சப்புக்கொட்டிவிட்டான். அதிலேருந்து உங்களைக் கண்டாலே ஒரே அலட்சியம். இந்தக்காலத்துப் பிள்ளைகளுக்குப் பெரியவா சின்னவான்னு என்ன தெரியறது?’

‘சீர்லே என்ன குறைச்சல்? நன்னாத்தானே செய்யப்போறேன்’

’அதை அவன் தெரிஞ்சிண்டாத் தானே? மட்டிப் பயல். நான் கூடச் சொன்னேன். மாமனார் சீர் செய்துதான் உனக்கு ஆகணுமான்னு, கேட்டாத்தானே, ‘மரியாதை, மட்டு, கெளரவம் இதெல்லாம் எதுக்கு இருக்குன்னு கேக்கறான்.’

’மரியாதை தப்பி ஒன்ணும் நான் நடந்துக்கலையே.’

‘அது சரி நீங்கள் செய்து வைத்திருக்கிற சீரெல்லாம் கொண்டாங்கோ பார்க்கலாம்’ என்றார் மார்க்கபந்து கடைசியாக.

ஆத்மநாதன் உள்ளே ஓடினார். ஐந்து நிமிடங்களுக்குள் கூடத்திற்கு சீர்வரிசைகள் ஜாடாவும் வந்துவிட்டன. மார்க்கபந்துவும் அவர் பெண்ணும் மலர மலர அவைகளைப் பார்த்துக் கொண்டிருந்தார்கள்.

‘இதுதான் மாப்பிள்ளைக்கு வேஷ்டி’ என்று மயில்கண் பத்தாறை நீட்டினார் ஆத்மநாதன்.

மார்க்கபந்து ‘சூள்’ கொட்டிவிட்டார். ‘இதுதான் அவன் கோவிச்சுண்டான். அவன் சொல்றதில் நியாயம் இருக்குன்னு இப்போதான் எனக்குப்படுகிறது.

ஆத்மநாதன் வாயைத் திறக்கவில்லை.

மார்க்கபந்து பேச ஆரம்பித்தார். ‘எதுக்கு பத்தாறு. இந்தக் காலத்தில் யார் பஞ்சக் கச்சம் கட்டிக் கொள்கிறார்கள். அதற்குப் பதிலாக இரண்டு எட்டாக எடுத்திருந்தால் இரண்டு வேஷ்டிகளாவது ஆகும். இந்தப் பார்டர் கூடப் பிரயோசனமில்லை. ’ஸ்வஸ்திக்’ கரையாம் அதுதான் வேணுமாம், இந்தப் பத்தாறை எடுத்து அந்தண்டை வையுங்கோ. அப்புறம் அந்தப் புடைவைகூட பிரயோசனம் இல்லை. அவன் கண்டிப்பாகச் சொல்லி விட்டான். தங்கைன்னா அவனுக்கு அவ்வளவு உயிர். அதனாலே அவன் இஷ்டப்படியும் கொஞ்சம் போகணும். அவளையே இந்தப் புடவை புடிக்கிறதான்னு கேளுங்கோ’ என்று சொல்லிக் கொண்டே ‘கோமதி கோமதி’ என்று கூப்பிட்டார்.

கோமதியை அவர் கூப்பிட்டாரே ஒழிய அவள் என்னவோ அவர் பக்கத்தில் தான் உட்கார்ந்திருந்தாள்.

‘ஏம்மா இந்தப் புடவை உனக்குப் பிடிக்கிறதா? என் எதிரில் தலையாட்டிவிட்டுப் பிறகு கண்ணை கசக்கிண்டு நிக்காதே. அப்புறம் ஸ்ரீதரன் என்னைக் கோவிச்சுப்பான்’ என்று அரக்குக்கரை போடப்பட்ட பட்டுப் புடவையை அவளிடம் நீட்டினார் மார்க்கபந்து.

கோமதி பட்டுப் புடவையைக் கையில் எடுத்தாள். புடவைத் தலைப்பைப் பிரித்துப் பார்த்து தன் உடலோடு ஒட்டி வைத்துப் பார்த்துக் கொண்டிருந்தாள். ‘ஆத்மநாதனும் அவர் மனைவியும் கோமதியையே கவனித்துக் கொண்டிருந்தார்கள்.

கோமதிக்குப் புடவை விஷயத்தில் திருப்தி ஏற்படவில்லை. ஏனென்றால் புடவையைப் பார்த்த பிறகும் அவள் முகம் பழயபடிதான் இருந்தது. களை கட்டவில்லை.

‘மனசிலே இருக்கிறதை தைரியமாகச் சொல்லு. ஆத்மநாதய்யர் நம் மனுஷன்தான்’ என்று தூபம் போட்டுவிட்டார் மார்க்கபந்து.

ஆத்மநாதய்யர் மனசில் என்ன நினைத்துக் கொண்டாரோ, நம்மால் திட்டமாகச் சொல்லமுடியாது. ஆனால் அவர் மனைவி மனத்தில் இருந்ததைச் சுலபமாகச் சொல்லிவிடலாம். ‘நாசமாகப் போச்சு’ என்று ஒரு தடவையாவது மனங்குளிர அந்தப் பெண்னை வாழ்த்திவிட்டு தன்னுடைய விரல்களை நெறித்துக் கொண்டிருப்பாள்.

‘புடவை நன்னாத்தான் இருக்கு. ஆனால் இந்தக் ‘கலர்’ தான் எனக்குப் பிடிக்கலை. மூக்குப் பொடிக் கலருக்குப்பதில் மஞ்சளில் இருந்தால் நன்னா இருந்திருக்கும். பரவாயில்லை; இதுவே இருக்கட்டும்’ என்றாள் கோமதி. சுவாரஸ்யமாக ஏனோ இஷ்டமில்லாமல் அவள் பேசினாள்.

‘உனக்குத் திருப்தி இல்லைன்னா ஆத்மநாதன் வேறு எடுக்கக் காத்துண்டு இருக்கார். மஞ்சள் வர்ணத்திலேதானே வேணும். அய்யர்வாள் அதையும் கவனிச்சுச்கோங்கோ’ என்றார் அதிகாரத்துடனும் அதிகாரமில்லாத தொனியிலும் மார்க்கபந்து.

‘பட்டாஸ் கட்டு இவ்வளவு வேண்டியதில்லை. அதிகம். காசைக் கரியாக்கி இருக்கேள். கைக்கடியாரம் வாங்கி இருப்பது திருப்தியாக இல்லை. என்ன விலையோ?’

‘இருநூறு ரூபாய்’ என்று பளிச்சென சொன்னார் ஆத்மநாதன்.



‘இருநூறு ரூபாயா? நல்ல வஸ்துன்னா விலை அதிகமாகத்தான் இருக்கும். ஸ்ரீதரனுக்கு ஏற்கனவே கெடியாரம் இருக்கு. இந்த இருநூறு ரூபாயை ரூபாயாகக்கையில் கொடுத்துடுங்கோ’.

ஆத்மநாதனுக்குத் தூக்கி வாரிப்போட்டது. வயிற்றில் யாரோ புளியைக் கரைத்துக் குழம்பு வைப்பது போல் இருந்தது. கெடியாரத்தின் உண்மை விலை என்னவோ நூறு ரூபாய்தான். பெருமைக்கு என்று சொல்லப்போக அது இப்படிக் கஷ்டத்தில் முடிந்துவிட்டது.

‘அப்புறம் ஒண்ணே ஒண்ணு. இந்தப்பருப்புத் தேங்காய்ப் பிடிச்சிருக்கிறது எனக்கென்னவோ பிடிக்கலை. இந்தக் காலத்திலே இப்போ பருப்புத் தேங்காயை எகிப்து தேசத்து ‘பிரமிட்’ போல் பிடிக்கறா. அது போல பிடிச்சிஉடச் சொல்லுங்கள் உங்கள் சம்சாரத்திற்குத் தெரியவில்லை என்றால், எங்கள் கோமதி அதில் கெட்டிக்காரி.’

ஆத்மநாதன் மனைவி மங்களம் முகத்தைத் தன் தோள்பட்டையில் ஒரு இடி இடித்துக் கொண்டாள். தன் கணவன் பித்துக்குளி போல மார்க்கபந்து பேசுவதற்கெல்லாம் ‘பூம்பூம்’ மாடு மாதிரி தலையை ஆட்டிக்கொண்டு ஆமாம் பூசாரிப் போட்டுக் கொண்டிருப்பது அவளுக்குப் பிடிக்கவில்லை. ‘எதிர்த்து ஒரு பேச்சுப் பேசலை’ என்று பொருமிக் கொண்டாள்.

‘என்ன ஆத்மநாதன் வேஷ்டி புடவை மத்த காரியங்கள் எல்லாம் சாய்ங்காலத்துக்குள்ளே ஆயிடணும். பொழுதில்லை இப்பவே கும்பகோணத்துக்கு ஆள் அனுப்பிவிடுங்கள்.’

ஆத்மநாதனுக்கு எல்லாமே புரியாத புதிராக இருந்தது. தலைதீபாவளி மாப்பிள்ளைக்கா, அல்லது மாமனார் ஸ்தானத்தில் இருக்கும் மார்க்கபந்துவிற்கா? என்பது அவருக்கு விளங்கவில்லை. எனவே மெதுவாக, ‘அது சரி ஸ்ரீதரன் சமாசாரமே தெரியவில்லையே. எப்ப வரார். இப்போ எங்கே இருக்கிறார் ஆகிய தகவலே காணும். நீங்கள் என்னவோ முன்னாடியே அவர் கிளம்பி வந்துவிட்டதாகச் சொல்கிறேள்’ என்று கவலையோடு கேட்டார்.

’ஸ்ரீதரனை பத்தி நீங்க ஏன் கவலைப்படறேள். நான் சொன்ன சீர் தினுசுகள் எல்லாம் வந்துட்டா ஸ்ரீதரன் வந்தாப் போல தான்.’

‘சீருக்கென்ன? இப்பவே ஆள் அனுப்பிடறேன்.’

‘ஸ்ரீதரனுக்கு என்ன? நானும் ஆள் அனுப்பிச்சுடறேன்.’

‘உங்க வீட்டு சுண்டு எங்கே கூப்பிடுங்கோ.’

சுண்டு என்ற வாண்டுப் பயல் மார்க்கபந்துவின் முன் வந்து நின்றான்.

‘டேய் சுண்டு, ரயில் ஸ்டேஷனுக்கு இருக்கு பார். அதுக்கு பின்னாடி நம்ம ஸ்ரீதரன் மாமா நின்னுண்டு இருப்பான். அவன் கிட்டே சீர் வகை எல்லாம் சரியாக தீர்ந்து போச்சு. உன்னை உங்கப்பா கூட்டிண்டு வரச் சொன்னார்னு வண்டி ஒண்ணு பாத்து அழைத்துக் கொண்டு வா’ என்றார் மார்க்கபந்து.

ஆத்மநாதனும் மங்களமும் திகைத்துப் போய் நின்றார்கள்.

சுண்டு வாசல் பக்கம் ஓட்டம் எடுத்தான். ஆனால் அவன் வாசலைத் தாண்டுவதற்குள், ‘டேய் சுண்டு! ஓடாதே நான் இங்கே தான் இருக்கேன்’ என்று மாடியிலிருந்து ஒரு குரல் வந்தது.

ஏககாலத்தில் எல்லோரும் மாடிப் பக்கம் திரும்பிப் பார்த்தார்கள்.

ஸ்ரீதரன் மாடியிலிருந்து கீழே இறங்கி வந்து கொண்டிருந்தான். அவன் கீழே இறங்கிய மறு கணம் அவசர அவசரமாக அவன் மனைவி சுசீலா மாடியிலிருந்து கீழே சமயல் அறைப் பக்கம் ஓடினாள்.

பாவம்! அவளுக்கு அவ்வளவு வெட்கம்!

‘என்னடா ஸ்ரீதரா! எப்போ வந்தே ஸ்டேஷனிலிருந்து? வெயிட்டிங் ரூமில் இருன்னு சொன்னேனே’ என்றார் சற்றுக் கோபம் கலந்த குரலில் மார்க்கபந்து.

‘எத்தனை நேரம் அப்பா ஸ்டேஷனிலே இருக்கிறது?’ அலுப்பாக இருந்தது வந்துவிட்டேன்.’ என்றான் ஸ்ரீதரன்.

’அது சரி, மாடிக்கு எப்படி போனே?’

‘இந்த வழியாகத்தான் போனேன். நீங்களெல்லாரும் பேச்சு சுவாரயஸ்த்தில் என்னை கவனிக்கவே இல்லை.’ என்று சொல்லிச் சிரித்தான் ஸ்ரீதரன்.

‘ரொம்ப நீ அவசரப்பட்டுட்டே’ என்றார் மார்க்கபந்து.

‘அவசரம் என்ன? அதான் நீங்க சொல்றதுக்கு எல்லாம் அவர் சரி சரின்னு தலை ஆட்டிவிட்டாரே. உங்களுக்குத் திருப்திதானே?’ என்று சமாதானம் சொன்னான் ஸ்ரீதரன்.

தலை தீபாவளி சீர் தினுசுகளில் குறை சொன்னவர் மார்க்கபந்துதான் என்பது ஆத்மநாதனுக்கு அப்போதுதான் புரிந்தது.

‘உன் மாப்பிள்ளைக்குத் தலை தீபாவளி இல்லைடீ, மாமனாருக்குத் தான் என்று இடித்துக் காட்டினார் ஆத்மநாதய்யர் மனைவியிடம் – ரகஸ்யமாகத்தான்

(தினமணி கதிர் 19.10.1952 தீபாவளி இதழ்)

எழுதியவர் : மீள் (31-Dec-15, 11:31 pm)
பார்வை : 227

மேலே