முதல் மதிப்பெண் எடுக்க வேண்டாம், மகளே 1 of 2

மாற்றுக் கல்விக்கான விதை
- நா.முத்துநிலவன் (கடிதஇலக்கியம்)
.

என் அன்பு மகளுக்கு, உன் அப்பா எழுதுவது. நானும் உன் அம்மாவும் இங்கு நலம். அங்கு உன்னோடு விடுதியிலிருக்கும் உன் தோழியரும், உன் வகுப்பு நண்பர்களும், உன் மதிப்பிற்குரிய பேராசிரியர்களும் நலமாக இருப்பீர்கள் என்று நம்புகிறேன்.

அலைபேசியில் பேசுவது போதாதென்று இது என்ன திடீரென்று கடிதம்? என்று உனக்கு வியப்பாக இருக்கலாம். பொறியியல் கல்லூரியில் இரண்டாமாண்டு படித்துக்கொண்டிருக்கும் நீ முன்பை விடவும் – அதாவது நீ பள்ளியில் படித்த காலத்தைவிடவும் - தற்போதுதான் நம் உலகத்தைப் படித்துக்கொள்வதில் கொஞ்சம் முன்னேறியிருப்பாய் என்று நினைக்கிறேன்.

கல்லூரிப் படிப்பு என்பது வேலைக்குப் போவதற்கான நேர்வழி என்பது ஒரு பகுதிதான். அதைவிட, வகுப்பிலும், விடுதியிலும் இருக்கும்போது, மற்றவர்களோடு எப்படிப் பழகுவது, நல்லது கெட்டது எது? என்று தெரிந்து கொள்வதுதான் உண்மையான பயன்தரும் கல்வி. சொந்த அனுபவம் மற்றும் நண்பர்கள் ஆசிரியர்கள் வழியாகப் பாதியும், ஊடகம் மற்றும் செய்தித்தாள்களின் வழியாகவே மீதியும், கற்றுக்கொள்வதுதான் உண்மையான கல்விஅறிவு!

அப்பாவும் அம்மாவும் கற்றுத்தர முடியாத பலப்பல விஷயங்களைப் பள்ளிக்கூடமும், கல்லூரியும் கற்றுத்தரும் என்பதற்காகத்தான் பிள்ளைகளைப் பெற்றோர் பள்ளி, கல்லூரிகளுக்குப் படிக்க அனுப்புகிறார்கள்.

ஆனால் உன்போலும் பதின்பருவ (teen-age) பிள்ளைகள் பெரும்பாலான நேரத்தை செல்பேசி, கணினி, தொலைக்காட்சியுடனே செலவிடுகிறீர்கள். ஒருவகையில் அதுவும் படிப்புத்தான் என்றாலும், என்ன கற்றுக்கொள்கிறோம் என்பது முக்கியம். நீ எனது செல்பேசியில் திருக்குறளையும் பாரதியார் கவிதைகளையும் பதிவிறக்கம் செய்து விரும்பிய போதெல்லாம் விரும்பிய பக்கத்தை எப்படிப் படிக்கலாம் என்றும் சொல்லித்தந்ததை நான் என் நண்பர்களிட மெல்லாம் காட்டிக்காட்டி மகிழ்கிறேன். அவர்கள் வியப்புடன் “இது எப்படிங்க? என்செல்பேசியிலும் வச்சுத் தாங்களேன்?“ என்று சொல்லும் போது “இது என்மகள் வச்சுத் தந்தது, எனக்குத் தெரியலையே! அடுத்த முறை விடுமுறைக்கு வரும்போது என்மக கிட்ட கத்துக்கிட்டு உங்களுக்கும் சொல்லித் தர்ரேன்”என்று பெருமையாகச் சொல்லிக் கொண்டிருக்கிறேன்.

இப்படி மின்-நூல்களைப் படிப்பது, மின்-இதழ்களைப் படிப்பது என்பன போலும் பயன்பாடுகள் ஒருபக்கமிருக்க, வேறு திசைகளில் நேரவிரயத்துடன், நம்மைப் புரட்டிப் போட்டுவிடும் ஆபத்தும் அவற்றில் அதிகம் எனும் எச்சரிக்கை மிகவும் தேவை. அதுவும் முகநூலில் கிடைக்கக் கூடிய மகிழ்ச்சியை விட, முகம்தெரியாத அல்லது முகத்தை மாற்றிக் கொண்ட யாரோ ஒருவரிடம் ஏமாந்துவிடக் கூடிய ஆபத்தும் உள்ளது என்பதை எந்தநேரத்திலும் மறந்து விடக் கூடாது மகளே! உன்மேல் எனக்கு நம்பிக்கை இருக்கிறது. நீ கவனமாகத்தான் இருப்பாய்! இருக்க வேண்டும்.

இன்றைய பதின்பருவப் பிள்ளைகள் பலர், பன்முகத் திறமைசாலிகளாக இருப்பதை, சில பத்திரிகைச் செய்திகள் தொலைக்காட்சிகளில் பார்த்து வியந்து மகிழ்ந்துமிருக்கிறேன்.

புதிய தலைமுறை தொலைக்காட்சியில் வரும் ஆயுதம் செய்வோம், நேர்படப்பேசு முதலான பல நிகழ்ச்சிகள், விஜய் தொலைக்காட்சியில் வரும் நீயாநானா விவாதங்கள், சூப்பர்சிங்கர், கலைஞர் மற்றும் சன் தொலைக்காட்சிகளில் வரும் சில நிகழ்ச்சிகளில் நான் பார்த்து மகிழ்ந்த இந்தத் தலைமுறை பிள்ளைகள் மேல் எனக்கு மிகுந்த நம்பிக்கை இருக்கிறது.

அப்போதெல்லாம், இவர்கள், நமது சங்கப்புலவர்கள், திருவள்ளுவர், கம்பர், பாரதி, பட்டுக்கோட்டை முதலான நம் முன்னோரிடமிருந்து மட்டுமல்ல, மார்க்ஸ், அம்பேத்கர், ஈ.வெ.ரா.பெரியார், நியுட்டன், கலிலியோ, ஷேக்ஸ்பியர், கியூரி முதலான பெரும் மேதைகளிடமிருந்தும் பெற வேண்டிய சாரங்களை எமது தலைமுறையைக் காட்டிலும் இவர்கள் சரியாகவே உள்வாங்கியிருக்கிறார்கள் என்றும் நினைந்து மகிழந்து பெருமைப்பட்டுக்கொள்வேன் போ!

இதுபோல் நல்லநிகழ்ச்சிகளை பார்த்து ரசிக்காமல், குறும்பு செய்து திட்டும் குட்டும் வாங்காமல், நல்ல விஷயங்களை எல்லாருமாய்ப் பேசி சிரித்து மகிழாமல், வெளியில் போய் விளையாடி மகிழாமல், வீட்டுக்குள் உட்கார்ந்து “ஓடிவிளையாடு பாப்பா” என்று மனப்பாடம் செய்து, மதிப்பெண் வாங்குதை எப்படிச் சாதனை என்று சொல்ல முடியும்? அவர்கள் குழந்தைப் பருவத்தையே படிப்புக்காகத் தியாகம் செய்து என்ன ஆகப்போகிறது? என்று கேட்க விரும்புகிறேன்.

முதல் மதிப்பெண் வாங்கும் எந்த மாணவரும் விளையாட்டு, ஓவிய, இசை முதலான பலப்பல வகுப்புகளையே அறிந்திருக்க மாட்டார்கள் என்பதும் உண்மைதானே? பல பள்ளிகளில் முக்கியமாக “மாநில முதலிடம், இரண்டாமிடம், மற்றும் 450க்கு மேல் 800 பேர்” என்று விளம்பரம் செய்து கல்லாக்கட்டும் தனியார்பள்ளிகளில் 10ஆம் வகுப்புக்கு அரசாங்கப் பாடத்திட்டத்தில் இருக்கும் ஓவியம், விளையாட்டு, சுற்றுச்சூழல் கல்வி வகுப்புகளே நடத்தப்படுவதில்லை!
.
ஒரே புத்தகத்தை இரண்டுவருடம் உருப்போடுவதும், அதைப் புள்ளி பிசகாமல் “வாந்தி எடுத்து” எழுதிக் காட்டுவதுமாய்க் கிறுக்குப் பிடிக்காமல் பார்த்துக்கொள்வது வேண்டுமானால் சாதனைதான்.

பன்முகத் திறமையை வளர்த்துக்கொண்டு, எந்தத் திறமை ஒளிந்திருக்கிறது என்பதைக் கண்டுபிடிக்கும் பருவம்தான் பள்ளிப்பருவம், முடியாவிடில் கல்லூரிப் பருவத்திலாவது முடியவேண்டும். அவ்வளவுதான்.

பிடித்த துறையில் தேர்ச்சி பெற்றபின் அதை வாழ்க்கையில் தொடர்வது முக்கியமா?

முதல்மதிப்பெண்ணோடு மறந்துவிடுவது முக்கியமா? நீயே யோசித்துப் பார். இதனால்தான் மகளே, எனது உரைவீச்சு மற்றும் பட்டிமன்றப் பேச்சுகளின ஆரம்பத்தில் எந்த இடத்திலும் நான், “என் எதிரே மலர்ந்த முகங்களோடு அமர்ந்திருக்கும், இன்றைய மாணவர்களான- எதிர்கால இந்தியாவின் நம்பிக்கை நட்சத்திரங்களான, எதிர்கால சட்டமன்ற உறுப்பினர்களே! நாடாளுமன்ற உறுப்பினர்களே! மத்திய-மாநில அமைச்சர் பெருமக்களே! பாரத நாட்டின் பிரதமர்களே! குடியரசுத்தலைவர்களே! கவி பாரதிகளே! காரல்மார்க்ஸ்களே! அண்ணல் அம்பேத்கார்களே! தந்தை பெரியார்களே! கல்பனா சாவ்லாக்களே, அன்னை தெரஸாக்களே!” என்று சொல்லும்போது கூட்டமே ஆரவாரித்து கைத்தட்டலால் அரங்கமே அதிர்ந்து போகும்.

இது பேச ஆரம்பிக்கும்போதே, பார்வையாளர்களைக் கவர நான் செய்யும் உத்திதான் எனினும், அதில் இருக்கும் இன்றைய இளைஞர்களைப் பற்றிய எனது எதிர்பார்ப்பும் பொய்யல்லவே?

எழுதியவர் : பகிர்வு:செல்வமணி (7-Jan-16, 12:13 am)
சேர்த்தது : செல்வமணி
பார்வை : 323

மேலே