மீடியா தன்னை சுயபரிசோதனை செய்து கொள்ள வேண்டிய நேரம் இது

முன்னாள் முதல்வர் ஜானகி எம்ஜிஆர் ராமாவரம் தோட்டத்தில் சடலமாகக் கிடக்கிறார். அஞ்சலி செலுத்த வந்த முன்னாள் அமைச்சர் திருநாவுக்கரசர், அழுதபடி மலர் மாலை வைத்துவிட்டு வெளியில் வர, அப்போதுதான் காமிரா வாங்கியிருந்த ஒரு நாளிதழ் புகைப்படக்காரர், 'சார் சார்.. அந்த மாலையை எடுத்து இன்னொரு வாட்டி போடுற மாதிரி போஸ் கொடுங்க சார்... ' என்று கேட்க, எப்படி ரியாக்ட் பண்ணுவதென்றே தெரியாமல் கடுப்புடன் காரை நோக்கிப் போனார் திருநாவுக்கரசர்.

தா. பாண்டியன் ஒரு தொலைகாட்சி நிகழ்ச்சிக்கு வந்திருக்கிறார். அவரை பேட்டி எடுக்க வந்த பெண் நிருபர் 'உங்க பேர் என்ன சார்' என்று கேட்ட பேட்டியை ஆரம்பித்திருக்கிறார். தன்னை யார் என்றே தெரியாத நிருபருக்கு பேட்டி கொடுக்க வேண்டுமா என்று கோபத்தில் எழுந்த வந்து விட்டாராம் தா.பா.

அது ஒரு எப்எம் ரேடியோ நிகழ்ச்சி. அமரர் எம்எஸ்வியை ஒரு பெண் பேட்டி காண்கிறார். "எம்எஸ்வி சார்... உங்க பேரு, உங்க பேக்ரவுண்ட் பத்தி நீங்களே சொல்லுங்களேன்," என்று கூற... "என்னப் பத்தி நான் என்ன சொல்றது... என்னை யாருன்னு கூட உனக்குத் தெரியாதாம்மா?" என்று வேதனையுடன் திருப்பிக் கேட்கிறார்.

இதே போல் மனோரமா மரணமடைந்த போது அவருக்கு மலர் வளையம் வைக்கக்கூட விஐபிகளை போக விடாமல் அவர்கள் தலையில் கேமாரவை இடித்து தள்ளினர். இன்னொரு விஐபி மாலை வைத்து விட்டு திரும்பினார் "சார்... வயர் கட் ஆகி விட்டது. மறுபடியும் மாலையை வைங்க," என்று அதட்டல் போட்டதும்... எல்லை மீறலின் உச்சம்.

அப்படியென்றால் இந்த கேள்வியை கேட்கவே கூடாது என்று அர்த்தமல்ல. இந்த இடத்தில் கேட்கக்கூடாது என்பது பக்குவப்பட்ட பத்திரிகையாளருக்கு தெரியும். தனியே இசைஞானியிடம் பேட்டிக்கு நேரம் வாங்கிகொண்டு போய் கேட்க வேண்டும்.

இங்கு கேட்பது சாவு வீட்டில் சாப்பாடு கேட்டு சண்டை போடுவது போன்ற மோசமான செயல். மைக்கை நீட்டுவது மட்டும் பத்திரிகையாளரின் வேலை அல்ல. உதவிக்கு கையும் நீட்ட வேண்டும் இதை புதிதாக வந்து மீடியாக்களில் பணியாற்றுபவர்கள் புரிந்து கொள்ள வேண்டும்!

அந்தக் கேள்வியை அந்த நிருபர் கேட்ட முறையும், அதற்கு இளையராஜா எதிர்வினையாற்றிய பிறகு, அந்த நிருபர் காட்டிய எகத்தாளமும்... நிச்சயம் இது பத்திரிகை தர்மமன்று. கல்லூரியின் குட்டிச் சுவற்றில் அமர்ந்தபடி போகிற வருகிற பெண்களை வம்புக்கிழுக்கும் பொறுக்கித்தனத்துக்கு சற்றும் சளைத்ததல்ல!

மழை வெள்ளம் மக்களின் வாழ்க்கையையே புரட்டிப் போட்டிருக்கிறது. மாநிலத்துக்கே மறுசீரமைப்பு தேவைப்படுகிறது. இந்த நேரத்தில் ஒரு முகமாக நின்று அரசுக்கு அழுத்தம் கொடுத்து மக்களின் வாழ்க்கைத் தரத்தை மேம்படுத்த வேண்டிய பொறுப்பில் உள்ள மீடியாக்காரர்கள், வெற்றுப் பரபரப்புக்காக கண்டபடி கேட்பது, தங்கள் தான்தோன்றித்தனத்தையே ஒரு செய்தியாக்கி குளிர்காய்வது போன்றவை உண்மையிலேயே அநாகரீம்தான். ஆளாளுக்கு அறிக்கை விட்டுக் கொண்டிருக்காமல், மீடியா தன்னை சுயபரிசோதனை செய்து கொள்ள வேண்டிய நேரம் இது!

- Rajesh Kannan

எழுதியவர் : பகிர்வு:செல்வமணி (7-Jan-16, 12:33 am)
சேர்த்தது : செல்வமணி
பார்வை : 221

மேலே