“ஒரு சொல் கொல்வதற்குப் போதுமானதெனில், நல்லதொரு கவிதை வாழ்வதற்குப் போதுமானது” - தமிழ் நதி

வாசிக்கத் தொடங்கியிராத பால்ய காலத்திலிருந்து இன்றுவரை புத்தகங்களுக்கு நடுவில்தான் எனதிருப்பு தொடர்கிறது. அப்பாவும் அண்ணாவும் அப்பாவின் சகோதரிகள் இருவரும் வாசிப்புப் பழக்கம் நிறைந்தவர்கள். ஆனால், அவர்களில் எவரும் கவிதைகளை விரும்பி வாசித்ததாக எனக்கு நினைவில்லை. யதார்த்தத்தில் நிகழ்வதற்கரிய சாகசங்கள், ‘புனிதமான’காதல்கள், கதாநாயகர்களின் (கதாநாயகிகள் கதைகளிலும் பலகீனர்களாக இருந்தார்கள்) அதிபிம்பங்கள் உலவும் நாவல்களையும் சிறுகதைகளையுமே அவர்கள் விரும்பி வாசித்தார்கள்.

கவிதைகள் அறிமுகமாவதற்கு நான் காதலில் விழும்வரை காத்திருக்கவேண்டியிருந்தது. விழுந்ததுதான் தாமதம், கவிதை எங்கிருந்தோ வந்து என்னோடு உறவாடத் தொடங்கிற்று. உருகி உருகி வாசித்து, அதனிலும் உருகி உருகி கவிதைகளை எழுதத்தொடங்கினேன். அக்கவிதைகளில் இரவிலும் பகலிலும் நிலவு காலித்திருந்தது; பட்டாம்பூச்சிகள் குறுக்கு மறுக்காகப் பறந்துகொண்டிருந்தன; எங்கெங்கும் பூக்கள் மலர்ந்து காற்றிலாடிக் கொண்டிருந்தன; மேகங்கள் தரையிலேயே வாசம் செய்தன; துயரமொரு நதியாய் பெருக்கெடுத்து கண்முன்னால் ஓடிக்கொண்டிருந்தது. கற்பனைக்கும் யதார்த்தத்திற்கும் இடையில் கிடந்த அதலபாதாளம் என் கண்களுக்குப் புலப்பட்டது புலம்பெயர் நாடொன்றில்(கனடாவில்) வாழத் தொடங்கியபோதுதான்.

நிலம், மொழி, காலநிலை, மனிதர்கள், சிக்கல்கள் என அனுபவங் கொள்ளவேண்டியிருந்த எல்லாமே புதியவை. மரங்கள் நிறைந்த வனத்திலிருந்து வழிதவறி, கட்டிடக் காடாகிய நகரத்திற்குள் நுழைந்துவிட்ட பறவையைப் போல திகைத்துப்போனேன். என்னதான் முயன்றும் புதிய நிலத்திற்குப் பழக மறுத்தது மனம். அந்த இருண்மையானது இப்போது நினைத்தாலும் மனச்சோர்வினுள் வீழ்த்திவிடக் கூடியளவு அடர்த்தியோடிருந்தது. குளிரும் தனிமையும் நடுக்குற வைத்த நிகழ்காலத்திலிருந்து, இறந்தகாலத்தின் இனிய ஞாபகங்களுள்ளும், எதிர்காலம் பற்றிய கனவுகளுள்ளும் மீண்டும் கவிதைகள் வழியாகத் தப்பியோடினேன். என்னை தற்கொலையிலிருந்தும் மனப்பிறழ்விலிருந்தும் கவிதைகளே காப்பாற்றின. நாளாக நாளாக கவிதைகளின் உருசி பிடிபட்டுவிட்டது. என்னைச் சுற்றியிருந்தவர்கள் புதிய நிலத்தின் சவால்களை எதிர்கொண்டு லௌகீக ரீதியாக மேற்சென்றார்கள். நானோ எனக்கான உலகொன்றை எழுத்தினால் பிரதியீடு செய்து அதில் நிரந்தரமாக வாழ முயற்சி செய்துகொண்டிருந்தேன்.

காட்சிரூபம், செவிவழி, பட்டறிவு இன்னபிறவற்றினூடாக உள்வாங்கப்பட்ட விசயங்களை அடிப்படையாகக் கொள்வதனோடு, அவற்றுக்கு அப்பாலும் இயங்கும் மனவோட்டத்தைப் பிணைத்து, அனுபவங்கள் அகவயப்பட்ட சித்திரங்களாக மாற்றப்படும்போது கவிதை பிறக்கிறது. எழுத்தெனப்படுவது சிலரைப் பொறுத்தளவில் உன்னதமான கற்பனையுலகைத் (utopia) தேடும் நெடும்பயணந்தான். அதாவது, முழுமையற்ற உலகின் குறைநிரப்பியாக எழுத்து தொழிற்படுகிறது. கவிதை அந்தக் குறைநிரப்புதலை அழகியலோடும் செறிவோடும் செய்கிறது.

ஒரு சொல் கொல்வதற்குப் போதுமானதெனில், நல்லதொரு கவிதை வாழ்வதற்குப் போதுமானது. ஒரு நல்ல கவிதை தன்னைப் படித்து முடிப்பவரை ‘இது போதும்… இது போதும்’என பொங்க வைக்கவேண்டும். இந்தப் புறவுலகின் அற்பத்தனங்களை, லௌகீக ஓட்டங்களைப் பார்த்து நகைக்கிற அளவு கலைசார் உன்மத்தத்தை ஊட்டக்கூடியதாக இருக்கவேண்டும். செழுமையும் வடிவ நேர்த்தியும், சொற்தேர்வும் உணர்வு வெளிப்பாடும் பாசாங்கின்மையும் கொண்டமைந்த கவிதைகளால் அத்தகு உன்மத்தத்தை ஊட்டவியலும். ஆனாலும், நிபந்தனைகளற்றதும் அப்படி ஏதும் இடப்பட்டால் அதை உடைத்துக்கொண்டு முன்னகர்வதும்கூட கலைசார் செயற்பாடே. அடிப்படையில் அஃது அதிகாரங்களை மறுத்தோடுவதாகும்.

‘இன்னதுதான் கவிதை’ என்று அதனை சட்டகங்களுள் அடக்கவியலாது. கோட்பாடுகளும் தத்துவங்களும் கவிதை குறித்து நுணுக்கமாக அலசி ஆராய்வதற்கு உதவக்கூடும். ஆனால், அத்தகைய கோட்பாடுகள் சுட்டும் வரையறைகள், படைப்பாக்கத்திற்கு முன்நிபந்தனைகளாக அமையும்போது அவை கவிதையின் ஆன்மாவையே கொன்றுவிடும் அபாயத்தையும் மறுப்பதற்கில்லை.

தமிழில், முன்னொருபோதும் இல்லாத அளவில் கவிதைகளின் பெருக்கத்தை இப்போது காணமுடிகிறது. மறுவளமாக, முன்னொருபோதும் இல்லாத அளவு கவிதைக்கான வாசகர்கள் குறைந்துபோய்விட்டார்கள். எண்ணுக்கணக்கற்ற தொகுப்புகள், அச்சு மற்றும் இணைய சஞ்சிகைகள், தனிப்பட்டவர்களின் வலைத்தளங்கள், சமூக வலைத்தளங்கள், ‘புளொக்’எனப்படும் வலைப்பூக்கள் என எங்கெங்கிலும் கொட்டிக் கிடக்கின்றன கவிதைகள். இவற்றுள் எதை வாசிப்பது எதை விடுவது என்ற திகைப்பு மேலிடுகிறது. இந்தக் குழப்பத்தின் இருளை அடர்த்துவது கவிதைகளின் பெருக்கம் மட்டுமன்று; தமிழைப் பீடித்திருக்கும் குழுவரசியல் நோயுங்கூட அந்தத் திகைப்பிற்குக் காரணமாகும்.

ஒரு கவிதையானது அதன் கவித்துவத்திற்காக மட்டும் கொண்டாடப்படாமல், அதை எழுதியவரைப் பற்றி ஏற்கெனவே கட்டமைக்கப்பட்டு வளர்க்கப்பட்டுவிட்ட இதர மனச்சித்திரங்களுக்காகவும் சேர்த்தே கொண்டாடப்படுவதென்பது துரதிர்ஷ்மானது. இத்தகு சூழலில் கவிதை தன் பலத்தில் நிற்கவில்லை. ஒரு பெயரின் ஒளிவட்டத்தில் அது பிரகாசிக்கிறது. அந்தப் பெயருக்குப் பதிலாக வேறொரு அறிமுகமற்ற பெயரைப் பிரதியீடு செய்து பார்த்தால், அக்கவிதை அனாதையாகி இருளில் கிடப்பதைக் காண்போம். வாசகரை- சுயமாகத் தீர்மானிக்க நமது குழு, அமைப்பு, பதிப்பக, நட்பு வட்ட இரசிக சிகாமணிகள் விடுவதில்லை. இதன் பொருள், மேற்குறித்தோரால் பரிந்துரைக்கப்பட்டவர்களின் கவிதைகள் தரமற்றவை என்பதன்று. ஒருவரால் எழுதப்படும் கவிதைகள் அனைத்தும் தரமாக இருக்கும் என எதிர்பார்ப்பதற்குமில்லை. ஒரு தொகுப்பில் ஐந்தாறு கவிதைகள் தேறினாலே அது வெற்றிபெற்ற தொகுப்புத்தான். ஆனால், சிலசமயம், கவிதை என்ற பெயரில் எழுதப்படும் துணுக்குகள்கூட, எழுதியவரின் பெயரின் நிமித்தம் அதிரடியான சிலாகிப்புகளைப் பெறும்போது, தகுதிக்கு மீறிக் கொண்டாடப்படும்போது அஃது வாசகரதும், சக எழுத்தாளரதும் சுயமான தேர்வினுள் அத்துமீறி நுழையும் நுண்ணரசியலைச் செய்வதை அவதானிக்க முடிகிறது. இன்னுஞ் சொல்லப்போனால், இந்தக் குழுவரசியலானது சமகால தமிழிலக்கியத்தை கற்பனா தளமொன்றிலே நிறுத்திவைத்திருக்கிறது. கறாரான, சமரசம் செய்துகொள்ளாத விமர்சகர்கள் அரிதாக இருப்பதனால் நேர்ந்த துர்ப்பாக்கியம் இது.

இந்நிலையில், படைப்பை முன்னிலைப்படுத்துவதா? படைப்பாளியை முன்னிலைப்படுத்துவதா? என்ற விவாதம் எழுந்தேயாகவேண்டியுள்ளது.

மேற்குறித்த விசனங்களுக்கு அப்பால் சிலர் அற்புதமான கவிதைகளை எழுதுகிறார்கள். அப்படி எழுதும் கவிஞர்களின், எழுத்தாளர்களின் பெயர்களைப் பட்டியலிடுவது போன்ற ஆபத்தான வேலை வேறேதும் இல்லை. ‘அன்னந் தண்ணி’இல்லாமல் இணையத்தில் விழுந்து புரண்டு குடுமிப்பிடிச் சண்டை போடுவதற்குத் தயாராக இருந்தால் மட்டுமே இந்த ‘பட்டியல்’ விவகாரத்தினுள் நுழையலாம். ஆக, இலக்கியம் குறித்த மிகுபிரக்ஞையும், சொற்செட்டும், உணர்ச்சியை மேவாது உள்நின்று இயங்கும் அறிவார்த்தமும் மிக்க படைப்புகளைத் தந்தவர் என்றவகையில் பிரமிளே எனது ஆதர்சம்.

இலக்கியமானது நாடுகளின் எல்லைகளையும், இன-மொழி-மத வேறுபாடுகளையும் கடந்து உலகளாவிய மக்களின் உணர்ச்சிகளைப் பிரதிபலிப்பதாக அமையும்போது அஃது மானுடத்தின் பொது உரையாடலாக பரிணமிக்கிறது. அவ்வகையில், மஹ்மூத் தார்வீஷ், பாப்லோ நெருதா இருவரும் எனக்கு மிக நெருக்கமான உணர்வினைத் தருகிறார்கள். பாலஸ்தீனத்தையும் சிலியையும் குறிக்கும் வரிகளில் என்னால் ஈழத்தைப் பொருத்திப் பார்க்கக் கூடியதாக இருக்கிறது. எல்லாவற்றிலும் அரசியல் கலந்திருக்கிறது என்றபோதிலும், நேரடியான அரசியல்தன்மை வாய்ந்த கவிதைகளை விரும்பிப் படிக்கிற அளவுக்கு இதர கவிதைகளைப் படிக்க முடிவதில்லை. அதற்கு, பேரினவாதத்தால் குரூரமாக கொன்று குவிக்கப்பட்டுக்கொண்டிருக்கிற, பிராந்திய வல்லரசினால் காலகாலமாக வஞ்சிக்கப்பட்டுக்கொண்டிருக்கிற, நவகாலனித்துவ நாடுகளால் தொடர்ந்து ஏமாற்றப்பட்டுக்கொண்டிருக்கிற இனத்தைச் சேர்ந்தவள் என்பதொரு காரணமாக இருக்கக்கூடும்.

“குறித்துக்கொள் நான் ஒரு அரேபியன்” என்ற வரியானது, “குறித்துக்கொள் நான் ஒரு ஈழத்தவள்”
என்றே எனது மூளைக்குள் பதிவாகிறது.

எங்கள் நிலத்திலிருந்தும் எங்கள் கடலிலிருந்தும்
வெளியே போங்கள்
எங்கள் கோதுமைகளை விட்டு எங்கள் உப்பை விட்டு
வெளியே போங்கள்
எங்கள் காயங்களை விட்டு
எங்கள் எல்லாவற்றையும் விட்டு
வெளியே போங்கள்
நினைவுகளின் நியதியையொப்பி
வெளியே போய்விடுங்கள்.

என்ற, மஹ்மூத் தார்வீஷின் வரிகள் ஆக்கிரமிக்கப்பட்ட அனைத்து மக்களுக்குமானவை.

மரணமடைந்த எமது தோழர்களின் சார்பாக
நான் தண்டனை கோருகிறேன்
சுற்றிலும் நடந்த கொடுமைகளை மறந்துவிட்டு
அவர்களோடு நான் கைகுலுக்க விரும்பவில்லை
இரத்தக் கறைபடிந்த அவர்களின் கைகளை
நான் தொட விரும்பவில்லை
நான் தண்டனை கோருகிறேன்
தூரதேசங்களுக்கு அவர்கள்
தூதர்களாய் அனுப்பப்படுவதை
நான் விரும்பவில்லை
அல்லது
நடந்த கொடுமைகளை
உள்வீட்டுக்குள் பொத்திவைத்து
காற்றோடு அவைகள்
கரைந்துபோக விட்டுவிட நான் விரும்பவில்லை
இந்தத் திறந்தவெளிக் காற்று மண்டலத்தில்
அவர்கள் விசாரிக்கப்படுதலைக் காண
நான் விரும்புகிறேன்
இந்தத் திறந்தவெளிச் சதுக்கங்களில்
அவர்களுக்குத் தண்டனை விதிக்கப்படுவதைக் காண
நான் விரும்புகிறேன்

என்ற பாப்லோ நெருதாவின் வரிகளும் அட்சரம் பிசகாமல் எங்களுக்காக எழுதப்பட்டவை போலவே தோன்றுகின்றன. இலங்கை அரசால் இனப்படுகொலை செய்யப்பட்ட, காணாமலடிக்கப்பட்ட, சித்திரவதைக்குட்படுத்தப்பட்ட, வன்புணர்வுக்காளாக்கி கொல்லப்பட்ட, சிறைகளில் வாடுகிற எங்கள் சனங்களுக்கான நீதியைக் கோரி, கோபத்தோடும் துயரத்தோடும் அனைத்துலகத்திடம் நாங்கள் வாதிடுகிற குரலை மேற்குறித்த வரிகள் அப்படியே எதிரொலிக்கின்றன. இத்தகைய கவிதைகளே, எழுதுகோலினால் போராடுவது எங்ஙனம் என்பதை எங்களுக்குச் சொல்லித் தருகின்றன. எழுத்தெனப்படுவது தூலமான போராட்டமில்லை தான். அதனால் பயனொன்றுமில்லை என நகைப்பவரும் இருக்கக்கூடும். எங்களளவில், குறைந்தபட்சம் வெளிப்பாட்டுக் கருவியாகவோ, ஆற்றுப்படுத்துவதாகவோ, கூட்டுணர்வின் குரலாகவோ கவிதை இருந்துவிட்டுப் போகட்டுமே!

அக புறவுலகின் தாக்கங்களே என்னையும் கவிதையை நோக்கிச் செலுத்துகின்றன. வாழ்வு, சலனமற்ற நதியென நகரும்வரை சிக்கலில்லை. மழையும் புயலும் வந்து வெள்ளம் பெருக்கெடுக்கையில் அதே நதி தடம் மீறிப் பாய்கிறது. நதிபோல் இலக்கியம் எழுந்தமானத்திற்குப் பாயமுடியாது. ஆனால், அது தொடர்ந்து சலனத்திற்கு ஆட்படுகிறது. ஈழத்தில் இனப்படுகொலை நடந்தபோது கவிஞர்கள் பலர் அவ்விதம் மனச் சமநிலை குலைந்து எழுத முற்பட்டார்கள். குரூரமான அபத்தச் சூழலை எவ்வண்ணம் கடந்துசெல்வதெனத் தெரியாமல் தடுமாறினார்கள். எனக்கும் அது நேர்ந்தது. சூழலைக் கழித்து எழுத்தினை மதிப்பிடவியலாது என்பதை நினைவிற்கொள்ளவேண்டும். பெரும்பாலான அரசியற் கவிதைகளின் நேரடியான, எளிமையான தன்மைகளால் அவை கவிதையென்ற கட்டுக்குள் வரவில்லையெனச் சொல்வாருமுளர். பாப்லோ நெருதாவின் கவிதைகள் புரிந்துகொள்வதற்கு எளிமையானவைதாம். அவை சிலியின் ஆன்மாவைத் தட்டியெழுப்பவில்லையா? அழுக்கான சாக்குத் துணியை மட்டுமே ஆடையாக இடுப்பில் சுற்றிய, காலணி அணியாத சந்தைத் தொழிலாளர்கள் மத்தியில் நெருதா தன் கவிதைகளை வாசித்து முடிந்ததும், “இந்த அளவுக்கு வேறெதுவும் எங்களை நெகிழவைத்ததில்லை” என்று, நெருதாவின் கைகளைப் பிடித்துக்கொண்டு கண்கள் பனிக்க ஒரு தொழிலாளியை சொல்லத் தூண்டியது கவிதைதானே?

மேட்டிமைக் குடிகளின் மேசைகளை அலங்கரிக்கும் பூச்சாடியாக கவிதை இருக்கவேண்டிய அவசியமில்லை. எளிய மக்களை, அரசுகளும், அரசுகளைத் தாங்கிப்பிடிக்கும் பெருநிதிய நிறுவனங்களும் கூறுபோட்டுத் தின்றுகொண்டிருக்கும் இந்நாட்களில் அரசியல் கவிதைகளின் தேவை பெரிதும் உணரப்படுகிறது.

அண்மையில், துருக்கி கடற்கரையோரமாக செத்துக் கிடந்த சிரியக் குழந்தை அய்லானுடைய சின்னஞ்சிறிய உயிரற்ற உடல் என்னையும் கவிதை எழுதத் தூண்டியது. ஆனால், அதை எழுதுவது ஒரு குற்றமாகப்பட்டது. வளர்ந்தவர்களுள் ஒருத்தியான நான் ஏதோவொரு வகையில் மறைமுகமான குற்றவாளியாக உணர்ந்தேன். அக்குழந்தையின் முகத்தில், உலகெங்கிலும் கொல்லப்படும் குழந்தைகளை நான் பார்த்தேன். அத்தகு சந்தர்ப்பங்களில் மனச்சாட்சியின் உறுத்தலுக்கு அஞ்சி எழுதாமல் விட்டுவிடுகிறேன். எழுதுவது மட்டுமல்லாமல், எழுதாமலிருப்பதுங்கூட சில நேரங்களில் எழுத்து சார் செயற்பாடுகளுள் ஒன்றாகிறது. அதிர்ச்சி மதிப்பீடுகளுக்காக சிலர் புனைபவற்றைக் காண்கிறபோதும் இந்தப் பின்னடிப்பு நேர்கிறது. உயிரினங்களின் (குறிப்பாக மனிதகுலத்தின்) இருப்பையே கேள்விக்குள்ளாக்கும் போர் மற்றும் இயற்கை அழிவுகளின்போது, எழுத்தும்கூட வாழ்வதற்காக நாம் கற்பித்துக்கொண்டிருக்கிற பொய்யோ, பாவனையோ எனும் ஐயம் எழும்போதிலும் எழுதமுடிவதில்லை. இந்தப் பேதலிப்புகளையெல்லாம் கடந்துதான் எழுதவேண்டியிருக்கிறது.

ஒரு சொல் அல்லது வாக்கியம் மின்னலிட்டு மறைந்தவுடன் அதைக் கவிதையாக்க அமர்வதில்லை. அது இருக்கவிடாமல் இடைவிடாமல் தொந்தரவு செய்யும்போதே கவிதையாக உருமாறுகிறது. மனதிற்குள் வரிகள் வளர்ந்துகொண்டேயிருப்பதை சிலசமயங்களில் உணர்வதுகூட இல்லை. எழுத அமர்ந்ததும் யாராலோ ‘டிக்டேற்’செய்யப்படுவதுபோல சரசரவென எழுதிச்செல்வது ஒரு மாயம்போல நிகழ்கிறது. ஆனால், ஒரு சஞ்சிகைக்கோ பத்திரிகைக்கோ யாராவது கவிதை தரும்படியாகக் கேட்கும்போது, வலுக்கட்டாயமாக என்னைப் பிடித்து நான் மேசையின் முன் அமரவைக்கிறபோது அந்த மாயத்தின் நிழலையும் காணமுடிவதில்லை. அப்படியே முயன்று எழுதினாலும் அதன் உட்புறம் கோறையாக இருப்பதை என்னால் உணர்ந்து கொள்ளவியலும். எப்படிப் பார்த்தாலும் கவிதை தன்னை எட்டாத உயரத்தில் வைத்திருக்கிறது. ஒரு தேவதை மண்ணில் கால் பதித்ததும் மானுடத்தியாகிவிடுவதைப்போல, எழுத எண்ணியதற்கும், எழுத்தில் வந்ததற்கும் இடையிலான இடைவெளி எத்தனை முயன்றும் நிரவமுடியாததாயிருக்கிறது.

ஒரு பெண்ணாக ஒப்பீட்டளவில் என் பாடு பரவாயில்லை. இருந்தும், பாரபட்சமான குடும்ப அமைப்பிலிருந்து தம்மை விடுவித்துக்கொண்ட பெண்கள் அன்றேல் குடும்பத்தினுள்ளேயே எழுதும் வெளி கிடைக்கப்பெற்ற (அல்லது ‘அனுமதி’க்கப்பட்ட) பெண்கள் என்று பார்த்தாலுமே இந்த ‘பெண் வேலை’கள் அவர்களை விட்டு அகலுவதில்லை. ‘குழம்பினுள் ஒரு கவிதையை அழித்தேன்’ என்ற வரி யாரால் எழுதப்பட்டது என மறந்துபோயிற்று. ஆனால், அது உணர்ந்து எழுதப்பட்ட வரி. ஒப்பீட்டளவில் கவிதையோடு அதிகநேரம் இருப்பவர்களும் அதை குறை ஆயுளில் கொல்லக் கொடுப்பவர்களும் பெண்கள்தாம்.

இப்புறவுலகிலிருந்து விலகி (முற்றிலுமாக அல்ல) எழுத்தோடும் வாசிப்போடும் வாழ்கையில் நூறு பழிப்புகளை எதிர்கொள்ளலாம். பொருளியல்சார் அவமானங்களை நேரிடலாம். ஆயிரம் மனக்கொந்தளிப்புகள் உள்ளோடலாம். எழுதிய எழுத்தின் நிமித்தம் குரோதங்களையும் விரோதங்களையுங் கூட சம்பாதித்திருக்கலாம். ஆனால், எழுத்து தருகிற ஆறுதலை மனிதர்கள் தருவதில்லை. தூலமற்ற ஒன்றே என் போன்றவர்களைச் செலுத்திச் செல்கிறது. எதிர்காலம் குறித்து நம்பிக்கையூட்டுகிறது. வாழ்நாள் துணையாக இருப்பேனென தோளைத் தொட்டு உறுதி சொல்கிறது. யோசனையிலாழ்ந்தபடி நடந்துசெல்லுமொருவரின் பாதையைக் குறுக்கறுத்தோடும் குட்டி அணிலைப்போல, நெஞ்சினுள் கனிவூட்டி வாழ்வினை மலர்த்துவது எழுத்தே. அதற்கென் நன்றிகள்.

இதில் எடுத்தாளப்பட்ட கவிதைகளைத் தமிழாக்கம் செய்தவர்: யமுனா ராஜேந்திரன்.

எழுதியவர் : மீள் (20-Jan-16, 11:51 pm)
சேர்த்தது : செல்வமணி
பார்வை : 377

மேலே