KSராஜா - இலங்கை வானொலி அறிவிப்பாளர்

"வீட்டுக்கு வீடு
வானொலிப் பெட்டிக்கருகே
ஆவலுடன் குழுமியிருக்கும் பெருமக்கள் அனைவருக்கும் உங்கள் அறிவிப்பாளன் K.S.ராஜாவின் அன்பு வணக்கம்!"

1970, 80களில் காற்றின் அலைகளில் தவழ்ந்து வந்த இலங்கை வானொலி வர்த்தக சேவைகளில் இந்த வாசகத்திற்கு இருந்த மதிப்பே தனி!

'இலங்கை' என்ற வட்டத்தினை உடைத்து, தென்னிந்தியாவிலும் அன்றைய நாட்களில் வானொலிகளை நோக்கி மக்களை ஒன்று கூட வைத்தவர்கள்..... இலங்கை வானொலியின் அறிவிப்பாளர்கள் கே.எஸ்.ராஜாவும், பி.எச்.அப்துல் ஹமீத்தும்!

எடுத்துக்கொண்ட விஷயத்தை, சில சொல்லாடல்கள் மூலம் மனதில் நிலைத்து நிற்பதாக, பொட்டில் அடித்தாற்போல் நேயர்களின் மனதில் பதியவைக்கும் இலாவகம் கொண்டவர்கள்!

இலங்கையின் யாழ்ப்பாணம் காரை நகரில் நடுத்தர வகுப்புத் தமிழ் குடும்பத்தில் பிறந்தார் K.S ராஜா.
இயற்பெயர் ஸ்ரீஸ்கந்த ராஜா.

அப்பா டாக்டர், அம்மா ஆசிரியை! சிறு வயதில் இருந்தே உச்சரிப்பு சரியாக இருக்க வேண்டும் என்று அம்மா தான் பழக்கப்படுத்தினாராம். அக்காக்கள் நால்வரும் டாக்டர் கள்!

கம்பீரக் குரல், மின்னல் வேகம், வார்த்தைக்கு வார்த்தை விளங்கிக் கொள்ளும்படியான தெளிவான உச்சரிப்பு...... வார இறுதி நாட்களை வானொலிக்கருகே கட்டிப் போட்ட வித்தகர் K.S.ராஜா!

"அறிவிப்பு என்பது தாலாட்டுப்பாடுவது போன்றதல்ல, தூங்கி விழுபவர்களையும் உற்சாகம் கொள்ளச் செய்வது" என்று தனது குரலால் அனைவருக்கும் சக்தி பாணத்தை காது வழியாக ஊட்டியவர் கே.எஸ்.ராஜா!

'நீயா?' பட விளம்பரத்தில் ஸ்ரீப்பிரியா கதறிக் கேட்கும்,
”என்னை விட்டுட்டு போகாதீங்க ராஜா....” --- இதை நிகழ்ச்சியின் இறுதியில் வைத்து, "போகவில்லை நேயர்களே.... மீண்டும் அடுத்த ஞாயிற்றுகிழமை இதே நிகழ்ச்சியில் சந்திப்போம்!" என விடைபெற்றுச் செல்வது K.S ராஜாவின் தனி அடையாளம்!!

யாழ் முற்றவெளி அரங்கில் K.J. ஜேசுதாசின் இசை நிகழ்வு! பாடகி சுஜாதாவும் வருகை தந்திருந்தார். மேடை அறிவிப்பாளர் K.S ராஜா! தமிழும் ஆங்கிலமும் கலந்து, 'இசைச் சிகரமும் - அறிவிப்பு சிகரமும்' இணைந்த அந்த மேடை நிகழ்வு இன்றளவும் யாழ் முற்றவெளியையும் அது தாண்டிய கடற்பரப்பையும் வருடிச் செல்லும்!

1983 இலங்கை, ஜூலை கலவரம்..... இந்தியா வந்த K.S.ராஜா, அப்போது இங்கு இயங்கி வந்த ஈழ இயக்கங்களுள் ஒன்றான 'ஈழ மக்கள் புரட்சிகர விடுதலை முன்னணி'யில் இணைந்து செயற்பட்டார்.

1987 ஆம் ஆண்டில் 'இலங்கை - இந்திய ஒப்பந்த'த்தைத் தொடர்ந்து இலங்கை திரும்பிய இவர் இலங்கை வானொலியில் தமது வழக்கமான பணிகளுக்கு திரும்பினார்!

இந்நிலையில், 1989ஆம் ஆண்டு கொழும்பில் இவர் இனந்தெரியாதோரால் கடத்தப்பட்டு கொலை செய்யப்பட்டார். இவரது உடல் கொழும்பு கடற்கரையில் கண்டெடுக்கப்பட்டது. இவரது 'நினைவு சமாதி' கொழும்பு பொரல்லை மயானத்தில் உள்ளது.

K.S.ராஜா, தூய தமிழில் உரையாடும் வேகத்துக்கு ஈடு கொடுக்க இது வரை தமிழினத்தில் யாரும் பிறந்ததுமில்லை, பிறக்கப் போவதுமில்லை!

கோடான கோடி தமிழ் வானொலி நேயர்களின் மனதில் இன்றும் அவரது நினைவுகளும், அவரது மதுரக்குரலும் ஒலித்துக்கொண்டே இருக்கின்றது!

---ஆருத்ரா, ஜனா, Vimal On März, wikipedia.

************************************************************************************

சென்னைக்குச் சுற்றுலா சென்று திரும்பிய
எங்கள் ஊர் ரசிக முகங்களிடம்........

"எம்.ஜி.ஆர்., சிவாஜியைப் பார்த்தீர்களா?" என்று
என் விசில் வயதுகளில் நான் விசாரித்ததுண்டு.

பத்து வருடங்கள் கழித்து நான் இந்தியாவுக்கு வந்திருந்தபோது....... இந்திய நண்பர்கள் என்னிடம் கேட்ட கேள்விகளில் எனக்கு இமய வியப்பைக் கொடுத்தது எது தெரியுமா?

"நீங்கள் கே.எஸ். ராஜாவைப் பார்த்திருக்கிறீர்களா?
அவர் எப்படி இருப்பார்?"

'நான் ஏன் பிறந்தேன்' படத்தில்
கே.ஆர்.விஜயாவிடம் எம்.ஜி.ஆர் பேசுவதாக வரும்....,

"அழறவங்களை சிரிக்க வைக்கிறதும், சிரிக்கிறவங்களை சிந்திக்க வைக்கறதும் தான் என்னோட லட்சியம்!"
என்ற வசனத்தை மட்டும் தனியே பிரித்தெடுத்து........

"மக்கள் திலகம் எம்.ஜி.ஆர். அவர்களே! உங்கள் இலட்சியம் என்ன?" என்று நீங்கள் பேசிவிட்டு, அந்த இடத்தில் கொண்டு வந்து லிங்க் கொடுப்பீர்களே...... அடடா!

இது போன்ற ரேடியோ கிராபிக்ஸை எல்லாம்
இன்றும் கூட என் செவிகள் அசை மீட்டு ரசிப்பதுண்டு.

ஒரு எம்.ஜி.ஆர்....!
ஒரு கண்ணதாசன்...!
ஒரு சிவாஜி...!
ஒரு டி.எம். சௌந்தரராஜன்...!
ஒரு கே.எஸ்.ராஜா...!

----- யாழ் சுதாகர்.

************************************************************************************

K.S..ராஜா பற்றி ஆனந்த விகடனில்...... (1986)

மதுரை, காந்தி மியூஸிய திறந்தவெளி அரங்கு திணறியது. எங்கெங்கும் ஆரவாரத்துடன் ரசிகர்கள் கூட்டம்!

இலங்கை வானொலியின் அலை வரிசைகளில் ஆதிக்கம் செய்த அபிமான அறிவிப்பாளர் கே.எஸ்.ராஜாவின் குரலைச் சமீபகாலமாகக் கேட்க முடியாமல் தவித்த வானொலி நேயர்களுக்கு, ஈழப் போராட்ட நிதிக்கு அவர் இங்கு நேரடியாக நிகழ்ச்சிகளைத் தரப்போகிறார் என்ற செய்தி எதிர்பாராத இன்ப அதிர்ச்சி!

அவர் கம்பீரக் குரலை நேரில் கேட்கவும் அவரைப் பார்க்கவும் ஆர்வத்துடன் பரபரத்தனர்!

'பராக்' சொல்வதுபோல் முதலில் ஒருவர், "வருகிறார்... வருகிறார்... கே.எஸ்.ராஜா’ என அறிவிக்க, மற்றொருவர் வந்து மைக் பிடிக்க, இவரும் கே.எஸ்.ராஜா வருவதை அறிவிக்கிறாரோ என நாம் எதிர்பார்த்து இருந்தோம்........

மைக்கைப் பிடித்தவுடன், ''வீட்டுக்கு வீடு வானொலிப் பெட்டிக்கு அருகில்......'' என அதே மிடுக்கான குரல் ஒலிக்க, ராஜாவின் குரலை நேரில் கேட்ட மகிழ்ச்சியில் கரகோஷம் விண்ணைப் பிளந்தது!

சற்றே குள்ளமாக, தொப்பி வைத்துக்கொண்டு, நாம் சற்றும் எதிர்பார்க்காதபடி வித்தியாசமான ராஜாவாக இருந்தார்.

தேனிசை மழையின் ஆரம்பத்தில் ஒரு மாணவி, கே.எஸ்.ராஜாவிடமே பர்சனாலிடி பற்றிக் கேட்டுவிட... அவர்,

''நீங்கள் எப்படி எதிர்பார்த்தீர்கள்?'' என்றவுடன்,

''கொஞ்சம் ஹைட்டா, வெயிட்டா அமிதாப் பச்சன் ஸ்டைலில் இருப்பீர்கள் என்று எதிர்பார்த்தேன்'' என்றார் அந்த மாணவி.

''அமிதாப்புக்கு என்னைப் போன்று அழகான தமிழ்க் குரல் கிடையாதே!'' என்றார் கே.எஸ்.ராஜா. அரங்கமே சிரிப்பில் அதிர்ந்தது!

அதிகாலை 3 மணி வரை பார்வையாளர்களைத் தனது பேச்சிலும் கிண்டலிலும் மகிழ்ச்சிக் கடலில் ஆழ்த்தினார்!

மறுநாள் யானைக்கல்லில் உள்ள ஹோட்டல் பிரசிடென்ட்டில் கே.எஸ்.ராஜாவைச் சந்தித்தோம்......

''சிலோன் யுனிவர்சிட்டியில் கொஞ்ச நாட்கள் புரொஃபஸராகப் பணியாற்றினேன். ரேடியோவில் அறிவிப்பாளர் கேட்டு விளம்பரம் வந்தது.

அறிவிப்பாளர் மயில்வாகனம் அவர்கள், எனது உச்சரிப்பினையும் குரல் வளத்தையும் கண்டுகொண்டு, என்னை அந்தப் பணிக்கு நியமித்தார்!

சாதாரண பொதுமக்களுக்கும் நிலையத்துக்கும் மிகுதியான உறவினை ஏற்படுத்தும் புதுமையான நிகழ்ச்சிகளை அறிமுகப்படுத்தினேன்.

மாணவ - மாணவியருக்காக நடத்தப்படும் 'பொது அறிவுக் களஞ்சியம்’ நிகழ்ச்சிக்கு, மக்களிடையே மிகுதியான வரவேற்பு. 1981-ல் இந்த நிகழ்ச்சியில் கேட்கப்பட்ட கேள்விகளே அரசுத் தேர்வுக்கு மிகுதியாக வந்திருந்தன!

தொலைபேசி மூலம் உரையாடும் 'உங்கள் விருப்ப நிகழ்ச்சி’க்கும் பொதுமக்களிடையே நல்ல வரவேற்பு!

ஆரம்பத்தில், 'வழக்கமான ஒலிப்பரப்பு முறைக்கு எதிராகச் செயல்படுகிறேன்' என்று சொல்லி, முழுமையாக இடையூறு செய்தார்கள்.

ஆனால், ரசிகர்களின் ஏராளமான கடிதங்கள், அதிகாரிகளின் மனத்தை மாற்றி, என்னையும் விருப்பம் போல் செயல்பட வைத்துவிட்டது!

நான் எழுச்சிப் பாடல்களாக ஒலிபரப்பினேன். உடன் இருப்பவர்களே காட்டிக்கொடுத்துவிட்டார்கள். பின் என்ன? இலங்கை வானொலியைவிட்டு இடைநிறுத்தம் செய்துவிட்டார்கள்!

ராணுவத்தினரிடம் சித்ரவதை. நான்கு மாதக்கஷ்டம். அதைத் தொடர்ந்து வட இலங்கை நோக்கிப் பயணமாகிவிட்டேன். யாழ்ப்பாணம் குடா நாடு முழுமையாகப் போராளிகளின் கட்டுப்பாட்டில் இருப்பதால், பிரச்னை எதுவும் இல்லை.

சாகும் வரையிலும் அறிவிப்பாளராகப் பணியாற்றவே விரும்புகிறேன். ஆனால், மறுபடியும் இலங்கை வானொலி நிலையம் சென்றால், என்னால் சுதந்திரமாகப் பணியாற்ற முடியாது இல்லையா?!"

- அந்தக் கம்பீரமான குரலில், ஓர் இனம் புரியாத சோகம் இழையோடியது!

---- பி.இளங்கோவன், ஆர்.தேன்மொழி
---- நன்றி: விகடன் பொக்கிஷம்.

எழுதியவர் : பகிர்வு:செல்வமணி (23-Jan-16, 1:06 am)
சேர்த்தது : செல்வமணி
பார்வை : 588

மேலே