வாழ்க்கைப் பயணம் - அனுபவச்சாரல்கள் - 29

வாழ்க்கையில் எதிர்பாராத அதிர்ச்சியும் ​ஆனந்தமும் , இன்பமும் திருப்பமும் ,ஏற்படுவது இயற்கை. இதனை நாம் உணர்ந்து செயல்பட்டால் , விளைவுகளும் நமக்கு பனித்துளியாகவே தெரியும் . ஒருவித அச்சத்துடன் வாழ்ந்தால் எதுவும் நமக்கு இமயமாகவே தெரியும் . திடமான , தெளிவான மனதுடன் இருந்தால் அனைத்துமே நமக்கு இம்மியளவுதான் .

​நான் பள்ளி காலத்திலும் , கல்லூரி வாழ்க்கையிலும் குட்டு வாங்கியதும் உண்டு .....பாராட்டுப் பெற்றதும் உண்டு. ​
அதிலும் ஒருசில வாழ்க்கையில் சுவடுகளாக இன்னும் நெஞ்சில் நிலைத்தும் உள்ளது. அனுபவங்களே நமக்கு பாடமாக அமைகிறது . இதில் மாற்றுக் கருத்து இருக்காது என்று நம்புகிறேன் .


​பிறப்பும் இறப்பும் இயற்கை நிகழ்வுகள் ...பிறந்தவர் எவரும் ஒருநாள் இறப்பர் என்பது இயற்கை நியதி . ஆனாலும் ஒருவர் பிறக்கும்போது மகிழும், வரவேற்கும் நாம் ​...இறப்பு நேர்ந்தால் துக்கம் தாங்காமல் கதறி அழுகிறோம் ...இகவும் வேதனைப்படுகிறோம் ...சிலகாலம் . பின்பு நாமும் மனதால் தேறி , நம்மை நாமே மாற்றிக்கொள்கிறோம் . அதுவும் இயற்கைதான் . ஆனால் பலர் இறப்பைப் பற்றி பேசுவது தவறு என்றும் , அது எவருக்கும் நேரக்கூடாது என்று கூறிடுவர் . நான் காலையில் ஹிந்து பேப்பர் வந்ததும் முதலில் தலைப்பை பார்த்துவிட்டு , உடனே அன்றைய இறப்பு செய்திகளை காண்பேன் . எனக்கு சிறு வயதில் இருந்தே இது பழக்கமாகிவிட்டது . ஏனெனில் முதல் காரணம் யார் யார் என்பதை அறிந்திடவும் ....அதில் எனக்குத் தெரிந்த நண்பர்கள் உறவினர்கள் எவரேனும் உள்ளார்களா என்பதை அறிந்திடவே ...அன்றி வேறில்லை . நமக்கு தகவல் வராமல் இருக்கலாம் ...இதை பார்த்து தெரிந்து நாம் அதற்கு செல்வதை பற்றி முடிவு எடுக்கத்தான் , தவிர வேறில்லை. ஆனால் சிலர் நான் செய்வதையும் , சொல்வதையும் ஏற்றுக்கொள்ள மாட்டார்கள் ... அது அவரவர் தனிப்பட்ட கொள்கை , எண்ணம் . நான் குறை கூறவில்லை .

நான் வங்கி வேலை நிமித்தமாக அரபு நாடுகளுக்கு எங்கள் உயர் அதிகாரிகளுடன் பயணம் செய்திருந்தபோது , அங்கிருந்த ஒரு நண்பர் ஒருவர் , என்னிடம் தனியாக கூறினார் . அதாவது நான் விரும்பினால் , அங்குள்ள ஒரு பெரிய கம்பெனியில் , நல்ல வேலை வாங்கித் தருவதாக . நான் அவரிடம் திட்டவட்டமாக மறுத்தேன் ...முதல் காரணம் நான் இங்கு வந்திருப்பதே வங்கியின் மூலமாகத்தான் ...அவர்கள் செலவழிக்கும் பணத்தில்தான் ....வங்கிக்காகத்தான் என்றும் , மேலும் நான் எனக்கு வெளிநாட்டில் வேலை செய்திட விருப்பமே இல்லை என்றும் கூறினேன் . அவர் மிகவும் ஆச்சரியப்பட்டார் . என் விசுவாசத்தைக் கண்டு வியந்து பாராட்டினார் . அதுமட்டுமல்ல என்னைப் பொருத்தவரை வங்கியில் அனைத்து மட்டத்திலும் என் மேல் அன்பு காட்டினார்கள் , நன்கு பழகினார்கள் . என் மீது ஒரு நம்பிக்கையும் மதிப்பும் வைத்திருந்தார்கள் என்பதை நான் நன்றியுடன் நினைவு கூர்ந்திட விரும்புகிறேன் . அதை இங்கு பதிவிடுவதில் எனக்கு மிக்க மகிழ்ச்சியே. நான் என்றுமே அகத்தில் ஒன்று புறத்தில் ஒன்றாக பழகியதும் இல்லை எண்ணியதும் இல்லை . இதை என்னுடன் மிக நெருக்கமாக பழகியவர்கள் நன்கு அறிவர் .

ஆனால் மிகவும் வருத்தம் தரக்கூடிய விஷயம் தற்போது என்னவென்றால் , அன்று என்னுடன் பணி புரிந்தவர்களில் நான்கில் ஒரு பங்கு நண்பர்கள் கூட தொடர்பில் இல்லை . சந்திக்கும் வாய்ப்பும் இல்லை. அதற்கு இன்னொரு காரணம் , நானும் எங்கும் செல்வதும் இல்லை . எந்த ஒரு நிகழ்ச்சியில் கலந்து கொள்வதும் இல்லை. மற்றவர்களுக்கும் என் மீது அந்த வருத்தம் இருந்திட வாய்ப்பும் இருக்கிறது .

மீண்டும் சந்திக்கிறேன் ....



பழனி குமார்
​ ​ ​05.02.2016​

எழுதியவர் : பழனி குமார் (5-Feb-16, 2:54 pm)
பார்வை : 1064

மேலே