தமிழக இருப்புப்பாதை முன்னேற்ற முன்னணி- 1

அன்பார்ந்த அனைவருக்கும் வணக்கம்…
இன்று இங்கு துவங்கப்பட்டுள்ள புதிய பக்கமானது முழுமையான பொதுநல நோக்கம் கொண்டது. இந்தியாவின் வளர்ச்சியில் ரயில்வேதுறைக்கு மிகப்பெரியதொரு பங்கு உள்ளது என்பதை யாவரும் நன்கறிவர். இத்தகைய ரெயில்வே துறையின் மூலம் நாம் பிறந்த தமிழகமானது மிகவும் பின்தங்கிய நிலையிலேயே உள்ளது.
தேவையான தடங்களில் இரட்டை ரெயில்பாதையின்மை, ரெயில்போக்குவரத்து தாராளமின்மை, அதுமட்டுமன்றி ஏற்கனவே இருந்தபாதைகள் தற்போது செயல்படாமல் போனமை ஆகிய காரணங்களால் மாநிலத்தின் வளர்ச்சி மிகவும் பின் தங்கிய நிலையிலேயே உள்ளது. இது போக்கப்பட வேண்டும்…
அனைத்து வழித்தடங்களும் மாநிலத்தின் அனைத்து பகுதிகளுடனும் ரெயில்வே பாதையின் மூலம் இணைக்கப்படவேண்டும். இதற்கு உரிய வழிகளை ஆராய்வதும், அவற்றை மத்திய மாநில அரசுகளிடம் வலியுறுத்தி திட்டங்களை முன்னெடுத்துச்செல்ல ஆவன செய்வதே இதன் நோக்கம்.
போர்கால நடவடிக்கையாய்… முன்னாள் பாரதப்பிரதமர் மதிப்பிற்குரிய அடல்பிஹாரி வாஜ்பாய் அவர்களால் “தங்கநாற்கரம் ” நெடுஞ்சாலைகள் நிறைவேற்றப்பட்டு தேசம் வளர்ச்சி பெற்றது. அதேபோன்றதொரு மறுமலர்ச்சி தமிழகத்தின் இருப்புப்பாதை முன்னே ற்றம் கண்டு முன்னணிக்கு வர பாடுபடுவதே இதன் கொள்கை.
மாபெரும் திட்டங்களை உள்ளடக்கிய இதன் செயல்பாடுகள் வெற்றிகாண வேண்டுமெனில் இது ஒரு மக்கள் இயக்கமாக முன்னெடுத்துச்செல்லப்பட வேண்டும். இதற்கு ஆதரவு திரட்டுவதே நமது தலையாயப்பணி.
தற்போது நம் கையிருப்பு இரு மிகப்பெரிய திட்டங்கள். இதுநாள்வரை இந்தியாவிலிருந்த ஆங்கிலேய அரசாங்கம் முதல் சுதந்திர இந்தியாவின் எந்த ஒரு அரசாங்கங்களும் கையிலெடுக்காத திட்டங்கள். இந்தத் திட்டங்கள் சாலை விபத்துகளை குறைக்கும். மாநிலத்தில் ரெயில்பாதையைக் கண்டறியாத பகுதிகள் ரெயில் வசதிகளைப்பெறும். கிராமப்புறங்கள் எளிதில் நகர்புறங்களுடன் இணைக்கப்படும். எரிபொருள் சிக்கனம் கைகூடும். தொழில்வளர்ச்சி பெருகுவதால் நகர்புறகுடியேற்றம் குறைக்கப்படும். இன்னும் ஏராளமான பயன்கள் கிடைக்கப்பெறுவோம்.
திட்டம் 1 : இதன் மையம் “மேலூர்”. மதுரைக்கு மிக அருகில் உள்ள இவ்வூர் இன்றுவரை இரயில் என்றால் என்னவென்றே அறியாதது. இதனை வைத்தே திட்டவடிவமைப்பு.
இதன்படி,
அ. மேலூர்- திருவாதவூர்-திருமோகூர்- வழியாக மதுரை விமான நிலையத்தை இணைத்து அங்கிருந்து மதுரை சந்திப்பை இணைப்பு. (இது மட்டுமன்றி அருப்புக்கோட்டையை இணைப்பது)
ஆ. மேலூர்- கூடல் நகர்- வழியாக மதுரை சந்திப்பு.
இ. மேலூர்- திண்டுக்கல் (மதுரை அல்லாத மாற்றுப்பாதை ஒன்று)
ஈ. மேலூர்- கொட்டாம்பட்டி- துவரங்குறிச்சி- விராலிமலை- திருச்சி. (இதனால் கரூருக்கான இணைப்பு சாத்தியமாகிறது)
உ. மேலூர்- திருப்பத்தூர்- பிள்ளையார்பட்டி- வழியாக காரைக்குடியை இணைத்தல்.
ஊ. மேலூர்- திருப்பத்தூர்- திருமயம் இணைப்பு
எ. மேலூர்- திருமயம்- புதுக்கோட்டையை இணைத்து கந்தர்வக்கோட்டை- வல்லம் வழியாக பூதலூரை இணைத்து தஞ்சையை இணைத்தல்.
ஏ. மேலூர்- சிவகங்கை
மேலே குறிப்பிட்டுள்ள ஊர்களில் மேலூர், கொட்டாம்பட்டி, துவரங்குறிச்சி, விராலிமலை, திருப்பத்தூர், பிள்ளையார்பட்டி, கந்தர்வக்கோட்டை, வல்லம் ஆகிய ஊர்களில் ரயில்பாதை என்பதே இதுநாள்வரை கிடையாது. இந்த திட்டத்தினை தனித்தனியாகப் பாராமல் ஒரே காலகட்டத்தில்- ஒரே செயல்பாடாக செய்தால் அபிரிதமான வளர்ச்சி மிகும்.
இதன்மூலம் கரூர், திருச்சி, தஞ்சை, திண்டுக்கல், சிவகங்கை, புதுக்கோட்டை, விருதுநகர் ஆகிய ஏழு மாவட்டங்கள் மதுரை மாவட்டத்துடன் இணையும்.
இந்த ஊர்களுக்கிடையில் ரெயில் போக்குவரத்து அமைவதால் கல்லூரி செல்வோர், பணிக்குச் சென்றுவர சிரமம் இருப்பதால் சொந்த வீட்டை விடுத்து வெளியூரில் தங்கி பணிபுரிவோர், விவசாயம் மற்றும் பிற வர்த்தகம் புரிவோர் ஆகியோர் பயனடைவர். சரக்குப்போக்குவரத்திற்கு மாற்று வழியும், சென்னை- கன்னியாகுமரி மார்க்கத்திற்கு இன்னொரு தடமாகவும் விளங்கும்.
வெறும் இலாப நோக்கத்தை மட்டும் கருத்தில் கொள்ளாமல் குறைந்தபட்சம் ஏழு முதல் ஒன்பது வரை எனும் எண்ணிக்கையில் பெட்டிகளை இணைத்து முன்பதிவு செய்யத்தேவையில்லாத “ பாசஞ்சர் ” மற்றும் ” ஃபாஸ்ட் பாஸஞ்சர் ” ரெயில்களை தங்குதடையின்றி இயக்கினாலே போதுமானது.
இது சாத்தியப்படக்கூடியதே. மனமிருந்தால் மார்க்கமுண்டு: பணம் புரட்டினால் இருப்புப்பாதையுண்டு. இத்திட்டத்திற்கான செலவு இந்தியப்பொருளாதாரத்தில் ஒரு சிறுதொகைதான். ஒருங்கிணைந்த செயல்பாடு மிக அவசியம்.
திட்டம் 2:
தமிழகத்தில் மிகப்பரிதாபத்திற்குரிய ஒரு ஊர் பெரம்பலூர். இது ஒரு மாவட்டமாக மலர்ந்திருக்கிறது. ஆயினும் ரெயில் வாசனை அறியாத வறிய நிலையில் உள்ளது. இங்கிருந்து ரெயிலைப்பிடிக்க பல கி.மீட்டர் தூரத்திலிருக்கும் ஸ்ரீரங்கம், அல்லது அரியலூர் , அல்லது ஆத்தூர் ஆகிய தூரத்திலிருக்கும் ஊர்களுக்குச் செல்ல வேண்டும். முழுமையாக சாலைப் போக்குவரத்தினை மட்டுமே நம்பியுள்ளது. ஆம்னி பஸ்களின் அட்டகாசத்தில் வறியவர் முதல் வசதி படைத்தோர் வரை அனைவரும் பிழியப்படுகின்றனர்.
1. பெரம்பலூரானது அரியலூருடன் இணைக்கப்படும் பட்சத்தில் சென்னை- திருச்சி- மதுரை- கன்னியாகுமரி ஆகிய பகுதிகளுடன் நேரடியாக இணைக்கப்படும்.
2. பெரம்பலூர் துறையூர் வழியாக கரூருடன் தொடர்பு ஏற்படும்.
3. பெரம்பலூர் ஆத்தூருடன் இணைக்கப்படலாம். இதனால் சேலம், கோவை, பெங்களூருக்கு செல்ல எளிதாக இருக்கும்.
4. பெரம்பலூர் நாமக்கல்லுடன் இணைக்கப்பட்டால் தொழில்வளம் மேலும் பெருகும்.
இது மட்டுமல்ல… எண்ணற்ற இதுபோன்று திட்டங்களை காலதாமதமின்றி தொடர்ந்து நிறைவேற்றுவதன் மூலம், (அதாவது இருப்புப்பாதைகளின் மூலம்) நம் மாநிலத்தை இணைப்பதன் மூலம் அனைத்து துறைகளிலும் மிகப்பெரிய மறுமலர்ச்சி ஏற்படும் என்பது திண்ணம்.
இது நடைமுறைக்கு ஒத்துவருமா?
பொருளாதார ரீதியாக சாத்தியமாகுமா? என்று யோசிக்கத்தேவையில்லை.
ஐரோப்பிய நாடுகளின் செயற்கைக் கோள்களைக்கூட தற்போது இந்தியத் தயாரிப்பில் உருவான ராக்கெட்டுகள் மூலம் விண்வெளியில் செலுத்தும் வல்லமை நம்மிடம் உள்ளது. தொடர்ந்து அதனை நிரூபித்தும் வருகிறோம்.
தொழில்நுட்பக்கல்வி பயின்ற, பயின்றுசெய்தி வரும் தமிழகத்தின் ஏராளமான இளைய தலைமுறை காத்திருக்கிறது.
முதலில் ஒருங்கிணைப்பு, விழிப்புணர்வு, விவேகமான மாறுபட்ட செயல்பாடுகள் ஆகியவையே தற்போதைய தேவை.
சாதி, மத, இன, வட்டார பேதங்களுக்கு அப்பாற்பட்டு அனைவரும் “தமிழக இருப்புப்பாதை முன்னேற்ற முன்னணி” இயக்கத்தில் இணைய தங்களை ஈடுபடுத்திக்கொள்ளுங்கள்.
ஆக்கப்பூர்வ ஆலோசனைகளை தெரிவியுங்கள். பணிகளில் பங்கெடுத்துக்கொள்ளுங்கள்.
இருப்புப்பாதைகளின் இணைப்பு ஒரு கொள்கை முழக்கம் மட்டுமல்ல…
அதுவே நமது எதிர்காலத்தலைமுறையின் வாழ்க்கை வளம்…
லைக் செய்வோம் ….
ஷேர் செய்வோம்…
நட்புவட்டங்களை அதிகப்படுத்துவோம்...
வெற்றிதனை வசப்படுத்துவோம்….

எழுதியவர் : (7-Feb-16, 4:58 pm)
சேர்த்தது : m. palanivasan
பார்வை : 121

சிறந்த கட்டுரைகள்

மேலே