திருப்பூவணம் பதிகம் 3

"வெந்துயர் உறுபிணி வினைகள் தீர்வதோர்
புந்தியர் தொழுதெழு பூவ ணத்துறை
அந்திவெண் பிறையினோ டாறு சூடிய
நந்தியை அடிதொழ நன்மை யாகுமே" 3

பதவுரை:

புந்தியர் - தாங்கள் செய்வனவற்றைச் சிவார்ப்பணமாகச் செய்து, தங்கட்கு வருவனவற்றைச் சிவனருளெனக் கொள்பவர்.
அந்தி வெண்பிறையினோடு ஆறு சூடிய, நந்தி - மாலைக் காலத்தில் உதிக்கும் வெண் பிறையோடு கங்கையைச் சூடிய நந்தி.
நந்தி - சிவனுக்கொரு பெயர்

பொருளுரை:

கொடுந் துன்பம் தரக்கூடிய கடுமையான நோயும், அதற்குக் காரணமான வினைகளும் சிவனருளாலேயே தீரும் என்பதை மனதில் இருத்தி, அவனைத் தொழுது போற்றி, சிவார்ப்பணமாகச் செய்து, தங்கட்கு வருவனவற்றைச் சிவனருளெனக் கொள்பவர் வசிக்கும் இடம் திருப்பூவணம் என்னும் திருத்தலம்.

மாலைக்காலத்தில் உதிக்கும் வெண்பிறை நிலவோடு கங்கை ஆற்றையும் தலையில் சூடிய, இத்தலத்தில் அருள் பாலிக்கின்ற சிவபெருமானின் திருவடிகளைத் தொழுபவர்க்கு எல்லா நலன்களும் உண்டாகும்.

எழுதியவர் : வ.க.கன்னியப்பன் (8-Feb-16, 8:03 pm)
சேர்த்தது : Dr.V.K.Kanniappan
பார்வை : 70

மேலே