கற்புடைய பெண்களுக்குரிய நால்வகை நற்பண்புகள்

பெண்களுக்கு உரியனவாய் அச்சம், நாணம், மடம், பயிர்ப்பு என நான்கு வகையான நற்பண்புகள் சொல்லப்படுகின்றன. இவை பேதை தொடங்கி பேரிளம்பெண் வரை உள்ள எல்லாப் பருவங்களிலும் பெண்களுக்கு உரியன.

தொல்காப்பியர் பெண்களுக்கு அவசியம் வேண்டிய குணங்களாக,

“அச்சமும் நாணும் மடனும் முந்துறுதல்
நிச்சமும் பெண்பாற் குரிய வென்ப” என்று உரைக்கிறார்.

அச்சம், நாணம், மடம் ஆகிய மூன்று குணங்கள் மட்டும் இங்கு சொல்லப்பட்டாலும், ‘முந்துறுதல்’ என்ற சொல் பயிர்ப்பு, பேதைமை, நிறை என்ற மூன்று குணங்களைக் குறிக்கிறது.

முன்பு காணாதவற்றைக் காணும்போது அவற்றை மனம் ஏற்றுக் கொள்ளாத பண்பு பயிர்ப்பாகும். கணவன் அல்லாத பிற ஆடவனின் உடல், உடை முதலியன தன் மீது படும்போது ஏற்படும் அருவருப்பே பயிர்ப்பு எனப்படும். செய்யத் தகுவதை அறியாத அறியாமையே பேதைமையாகும். மனதை அலைய விடாது நேர்வழி நிறுத்துவதே நிறை எனப்படும்.

பெண்களுக்கான நற்பண்புகளாக மேற்கூறிய ஆறு பண்புகள் கூறப்பட்டாலும், அச்சம், நாணம், மடம், பயிர்ப்பு என்ற நான்கு பண்புகளே இலக்கண, இலக்கியங்களில் பேசப்படுகின்றன. தனக்குரிய ஆண்மகன் மீது ஒரு பெண்ணுக்கு எழும் வேட்கையைக் கட்டுப்படுத்துவதாக இப்பண்புகள் அமைகின்றன.

பொருள் ஈட்ட பிரிந்து சென்ற தலைவன் விரைவில் திரும்பி வர வேண்டி தலைவி கடன் பூணல், கைந்நூல் யாத்தல், நிமித்தம் பார்த்தல், நற்சொல் கேட்டல் ஆகிய செயல்களை மேற்கொள்வதாக இலக்கியத்தில் சொல்லப்படுவதுண்டு. கடன் பூணல் என்பது கொற்றவையையும், முருகக் கடவுளையும் வழிபடுவதாகும். கைந்நூல் யாத்தல் என்பது விரதமிருந்து கையில் காப்புநூல் அணிவதாகும். நிமித்தம் பார்த்தல் என்பது சகுனம் பார்ப்பதும், நற்சொல் கேட்டல் என்பது விரிச்சியாகும்.

கற்புடைய பெண்கள் இந்த நான்கு செயல்களும் செய்தாலும், பயிர்ப்பு குணமுள்ள பெண்கள் இத்தகைய செயல்களால் தன் தலைவன் எப்போது திரும்புவான் என்பதை அறிய முற்படமாட்டார்கள். தலைவன் தன் மீது வைத்துள்ள அன்பும், ’தன் பணி முடிந்து இன்ன பருவத்தில் திரும்பி வருவேன்’ என்று கூறியபடி வந்து சேர்வான் என்றும் நம்பிக்கை வைத்திருப்பார்கள்.

பயிர்ப்பு குணமிக்க தலைவி, தலைவன் மீதே கவனத்தைச் செலுத்தி, தலைவன் மீண்டும் வரும் வரையில் பிரிவுத்துயரை ஏற்றுப் பொறுமையோடிருப்பார்.

ஆதாரம்:மதுரைத் தமிழ்ச் சங்க ‘செந்தமிழ்’ சூன் 2012 இதழின் வெ.சஞ்சீவராயன் அவர்களின் கட்டுரை ‘குறுந்தொகையில் பாடுபொருள்கள்’.

எழுதியவர் : வ.க.கன்னியப்பன் (8-Feb-16, 8:19 pm)
சேர்த்தது : Dr.V.K.Kanniappan
பார்வை : 910

சிறந்த கட்டுரைகள்

மேலே