ஏன் மாற்றம் செய்திருக்கக் கூடாது - மறுபதிவு

கவிஞர் கண்ணதாசன் எழுதிய பாடல்:

சின்னஞ் சிறுவயதில் தேர்ந்த உணர்வினுக்கே
என்னபொருள் என்றேநான் இன்றுணர்ந்தேன் - அந்நாளில்
முத்தென்று சொல்லுதிர்த்த மோகக் கவிதையெழில்
சித்திரத்தாள் பாராமல் சென்றாள்!

வெண்பா விதிப்படி சென்று என்றே முடிக்க வேண்டும். சென்று என முடிக்கப்படின் பொருள் முற்றுப் பெறாது என்பதால் சென்றாள் என முடிக்கப்பட்டமை காண்க என்று விளக்கம் தரப்படுகிறது.

நேரசையில் முடிந்தால் நாள்
நிரையசையில் முடிந்தால் மலர்
நேர் நேர் அசையில் முடிந்தால் காசு
நிரை நேர் அசையில் முடிந்தால் பிறப்பு என்றும் நான் நினைத்துக் கொண்டிருக்கிறேன்.

சென்/று (நேர் நேர்) என்று முடிந்தாலும், சென்/றாள் (நேர் நேர்) என்று முடிந்தாலும் கா/சு (நேர் நேர்) என்றுதானே வர வேண்டும். இது சரிதானா? என்றால் அதுதான் இல்லை.

நேரசை நிரையசைக் குரிய வாய்பாடாகிய நாள் மலர் என்னும் அசைகளோடு ‘குசுடுதுபுறு’ என்னும் வல்லின உகரம் சேர்ந்துவந்தால் நாள்- காசாகவும், மலர்- பிறப்பாகவும் மாறும்.

பழந்தமிழ்ப் புலவர்கள் காசு என்னும் நேரசையுகரத்தை நேர்பு என்றும், பிறப்பு என்னும் நிரையசையுகரத்தை நிரைபு என்றும் கொண்டனர்.

’சின்னஞ் சிறுவயதில் தேர்ந்த உணர்வினுக்கே
என்னபொருள் என்றேநான் இன்றுணர்ந்தேன் – அந்நாளில்
முத்தென்று சொல்லுதிர்த்த மோகக் கவிதையெழில்
சித்திரத்தாள் பாராமல் சென்றாள்’. --இது கவிதை;

இலக்கணத்துக்கு ஒத்துப்போகும்படிக்கு கடைசி அடி,

’சித்திரத்தாள் சென்றாள்பா ராது’

என்று மாற்றி அமைக்கப்பட்டிருக்கலாம் எனவும் நண்பர் காளியப்பன் எசேக்கியல் விளக்கம் அளிக்கிறார்.

எல்லாச் சீரும் இலக்கணப்படி அமைய, கடைசிச் சீரும் வெண்பா இலக்கணப்படி காசு என்று வல்லின உகரம் சேர்ந்து வருவதைக் காணலாம்’ என்கிறார். இதுவும் நன்றாகத்தான் இருக்கிறது, இலக்கணப் பிழையும் சரி செய்யப்பட்டிருக்கிறது.

பன்மொழிப்புலவர் கா.அப்பாத்துரையாரும் இலக்கணப் பிழையச் சுட்டிக் காட்டியிருக்கிறார். கவிதையின் அழகுக்காக விட்டுவிட்டேன் என்று கண்ணதாசனும் பதிலளித்திருக்கிறார்.

கவிதையின் அழகுக்காக விட்டுவிடுவது அவர் உரிமை. ஆனால், இது வெண்பா ஆகாது; வெண்டுறை எனப்படும்.

அன்றே ஏன் கவிஞர் கண்ணதாசன் மறு பரிசீலனை செய்து மனப்பூர்வமாக தகுந்த மாற்றம் செய்திருக்கக் கூடாது?

எழுதியவர் : வ.க.கன்னியப்பன் (11-Feb-16, 10:15 pm)
சேர்த்தது : Dr.V.K.Kanniappan
பார்வை : 154

சிறந்த கட்டுரைகள்

மேலே