நல்ல சகுனம் நோக்கிச் செல்லடி - சண்முகப்ரியா

மலைக்கள்ளன் திரைப்படத்தில் நடிகை திருமதி பி.பானுமதி ’சண்முகப்ரியா’ ராகத்தில் பாடி, ஆடிய ஒரு அருமையான பாடல் ’நல்ல சகுனம் நோக்கிச் செல்லடி!’ என்பதாகும்.

இப்பாடல் கவிமணி தேசிய விநாயகம் பிள்ளை அவர்கள் இயற்றியது. இப்பாடலை ஜி.என். பாலசுப்ரமணியன் போன்ற பெரும்பாடகர்களும் அருமையாகப் பாடியிருக்கிறார்கள்.

பல்லவி

நல்ல சகுனம் நோக்கிச் செல்லடி! - சென்று
நான்படும் பாடு அவர்க்கே சொல்லடி!

அநுபல்லவி

அல்லல் அகற்றி அன்பர்க்கு
ஆனந்தம் அருள் நேசர்,
தில்லைப் பதி நடேசர்
திருவுள்ளம் அறிய நீ! (நல்ல சகுனம்)

சரணம்

வண்ணமலர்க ளேதும்
வாசம் தருவதில்லை;
பண்ணில் இனிமையில்லை,
பாலிற் சுவையுமில்லை;
கண்ணில் உறக்கமில்லை,
கருத்தோர் நிலையிலில்லை;
எண்ணி அளப்பதேனோ?
எல்லாம் அறிவாயோடி?
புண்ணியம் உண்டடி,
பொற்கொடியே! உனக்கு (நல்ல சகுனம்)

“BLIND BOY”

You say what is that thing called light
Which I must never enjoy
What are the blessings of the sight
Oh Tell your Blind boy!

மேலேயுள்ள குருட்டுப் பையன் என்ற ஆங்கிலப் பாடலை கவிமணி பின்வருமாறு அழகிய நடையில் மொழி பெயர்த்துள்ளார்.

இப்பிறப்பில் ஒரு பொழுதும் எனக்கறிய முடியாது
இருக்கும் ஒளி என்பது என்ன? இருவிழியின் அடையும்
ஒப்பரிய நன்மைகள் இக்கண்கெட்ட சிறியேன்
உணரும் வண்ணம் உரைத்திடுவீர் உற்ற உறவினரே

என்று ஆங்கிலப் பாடலின் கருத்துகளைச் சற்றும் பிறழாது சுவை மிளிரத் தந்துள்ள கவி மணியின் கவிதைகள் சிறப்பானவை.

கவிமணியின் ‘ஆசியஜோதி’ எட்வின் ஆர்னால்டு எழுதிய Light of Asia என்பதன் தழுவலாகும். புத்தர்பிரான் சிந்தனைகளில் பெரிதும் ஈடுபாடு கொண்ட கவிமணி அவர்களின் ஆசியஜோதி அவரது படைப்புகளுள் சிறப்பான ஒன்றாகும். ரசிகமணி டி.கே.சி யின் இதயம் கவர்ந்த நூல் ஆசிய ஜோதி.

நமது பழந்தமிழ் நூல்களில் புத்தரைப் பற்றியும் பௌத்த சமயத்தைப் பற்றியும் பல குறிப்புகள் காணப்படுகின்றன. எனினும் அவற்றைக் கொண்டு நாம் புத்தர் பெருமானுடைய சரிதத்தை முற்றும் அறிந்து கொள்ள இயலாது. இக்குறையைக் கவிமணியவர்களின் ‘ஆசிய ஜோதி’ இப்பொழுது போக்கிவிட்டது என்பார் பேராசிரியர் வையாபுரிப் பிள்ளை.

தேசிக விநாயகத்தின் கவிப்பெருமை
தினமும் கேட்பது என் செவிப் பெருமை
ஆசிய ஜோதியெனும் புத்தர் போதம்
அழகு தமிழில் சொன்னான் அது போதும்.

என்று பாடி மகிழ்ந்தார் நாமக்கல் கவிஞர்.

எழுதியவர் : வ.க.கன்னியப்பன் (19-Feb-16, 8:26 pm)
சேர்த்தது : Dr.V.K.Kanniappan
பார்வை : 147

சிறந்த கட்டுரைகள்

மேலே