கிணற்றடி

வீடு கட்டுவதற்கு முன்பு வெட்டிய கிணறு அது என்று பாட்டி சொன்னாள். தாத்தா அப்போது ரங்கூனில் இருந்தாராம். குடிசை வீடாய் இருந்த போது தரைக் கிணறாய் இருந்ததை மாற்றி சுற்றுச் சுவரெழுப்பி கயிறு போட்டு கையால்தான் தண்ணீர் இழுத்திருக்கிறாள் பாட்டி. ரங்கூனிலிருந்து வந்த தாத்தா பக்கத்தூர் செவ்வாய்க்கிழமை சந்தையில் உசைன் பாய் கடையில் வாங்கி வந்து மாட்டி இருக்கிறார் அந்த சகடையை. சாரக்கயிறை போட்டு தாத்தா தண்ணீர் இறைக்கும் லாவகமே தனியாம், வீடு கழுவ, பாத்திரங்கள் கழுவ, எப்போதும் வீட்டுப் பெண்களும் அவ்வப்போது ஆண்களும் கிணற்றடியில் குளிப்பார்களாம்...

பாட்டிக்கு பத்துப் பிள்ளைகள். பத்து பிள்ளைகளின் அத்தனை தேவைகளையும் தீர்த்து வைத்தது அந்தக் கொல்லைப்புறக் கிணறுதான். விடியற்காலையில் ஓட ஆரம்பிக்கும் சகடை பின்னிரவு வரை ஓடித் தீர்த்து விட்டு ஒரு சில மணி நேரம் மட்டுமே கொஞ்சம் ஓய்ந்து கிடக்குமாம். பிரம்ம முகூர்த்தத்தில் மனிதர்கள் விழிக்கும் முன்பு சகடை விழித்துக் கொண்டு காத்திருக்குமாம்...

காலை நாலு மணிக்கு கர்ர்ர்க்ரர்க்க்க்ர்ரகரவென்று அந்த கிராமத்து வீடுகளின் எல்லா வீட்டுக் கிணறுகளிலும் சகடைகள் உருள ஆரம்பித்து விடுமாம்.

நான் வளர்ந்த பின்பு கிணற்றுக்கு மோட்டர் போட்டு வீட்டுக்குள் பைப் இழுத்த போது சகடையை கழட்டி ஒரு மூலையில் என் கடைசி மாமன் வீசிய போது...

அதை ஒரு கைக்குழந்தையைப் போல எடுத்து தன் கண்டாங்கிச் சேலைக்குள் பொத்தி எடுத்துச் சென்றாள் பாட்டி...! கொல்லைக் கடவிலிருந்த பெரும்புளியமரத்தூரினடியில் உட்கார்ந்து சகடையை வெறித்துப் பார்த்துக் கொண்டிருந்த அவளை யாரும் கவனிக்கவில்லை என்னைப் போலவே...

நேற்று பரணைச் சுத்தம் செய்து கொண்டிருந்த போது உருண்டு விழுந்த தரையில் ஓடிய சகடையைப் பார்த்த போதுதான் படக்கென்று நினைப்பு வந்தது....

இப்போதெல்லாம் எங்கே கேட்கிறது சகடைச் சத்தம்...?

மோட்டார் பொருத்திய கிணற்றடி பக்கம் யாருமே செல்வதில்லை இப்போதெல்லாம்....

ஆனால்...

முன்பெல்லாம் வீடு தோறும் கிணறு இருந்தது, ஊர் ஊருக்கு ஒரு பொதுக் கிணறும் இருந்தது... அங்கெல்லாம் இடைவிடாமல் இந்த சகடைச் சப்தத்தோடு சேர்த்து எல்லோருடைய வாழ்க்கைகளும் உருண்டோடிக் கொண்டிருந்தது தானே?


தேவா சுப்பையா...

எழுதியவர் : தேவா சுப்பையா... (24-Feb-16, 11:03 am)
பார்வை : 365

மேலே