வாய்மை எனப்படுவது

“வாய்மை எனபடுவது யாதெனின் யாதொன்றும் தீமை இலாத சொலல். அப்படின்னா உண்மைங்கிறது என்னவென்றால் யாருக்கும் தீமை செய்யாத சொற்களை சொல்றது தான்.” என்று தனக்கு தெரிந்த அளவில் பேரனுக்கு குறள் பாடம் நடத்தினார் முத்துவேல். வீட்டின் உள்ளிருந்து முத்துவேலின் மனைவி அவரை அழைத்தாள்.
“ஏங்க, இந்த காபிய குடிச்சிட்டு பாடம் சொல்லி கொடுங்க.” என்றாள்.
முத்துவேலின் மனைவி அன்று அதிகாலையில் கூறியது முத்துவேலின் நினைவுக்கு வந்தது. கணேஷ்ராவின் வீட்டில் ஏதோ வேலையிருப்பதாக கூறியிருந்தாள். முத்துவேல் மனைவி தந்த காபியை குடித்துவிட்டு கிளம்ப எத்தனித்தார்.
“நீங்க அவர ஆபீசுல பாத்தா போதுமாம்.”
“சரி. நான் போய் பாக்குறேன்.”
சிறிய மகளின் பையனுக்கு ஸ்கூல் பீஸ் என்று அவள் கேட்ட ஐயாயிரம் ரூபாய் மனதில் நிழலாடியது. முத்துவேலுக்கு இரண்டு பெண்கள். பெண்களை கரையேற்றியாகிவிட்டது. ஆனால் அவர்கள் கரையேறினார்கள் என்று அவரால் அறுதியிட்டுக் கூற முடியாது. அதில் அவருக்கு சற்று குழப்பம்தான். பல இடங்களிலும் விசாரித்து தான் திருமணம் செய்து வைத்தார். ஆனால் மாப்பிள்ளைகள் அவ்வளவு சுறுசுறுப்பில்லை. முத்துவேலுக்கு அதில் மிகுந்த வருத்தம் உண்டு. மகள்கள் இருவரும் வாரம் இருமுறையாவது வீட்டிற்கு வந்து ஏதாவது உதவி கேட்பது வாடிக்கை.
மாநகராட்சி அலுவலகம் காலை அவசரத்தில் இருந்தது. அரசாங்க அலுவலகத்தின் அதிகாரத் தொனி படிந்த வராந்தாக்கள், சுவர்கள், அதிகாரசெருக்கேறிய மனித முகங்கள், அரசாளும் வர்க்கத்தின், அதிகாரத்தின், ஆதரவை எதிர்நோக்கும் எளிய மனிதர்களின் ஏக்கப்பார்வைகள் என அந்த அலுவலகம் அதிகாரமும் ஏக்கமும் கலந்த கலவையாக இருந்தது.
கணேஷ்ராவின் அறையின் வாசலை அடைந்த முத்துவேல் வாயிலில் இருந்த சிப்பந்தியை பார்த்து, “சார் வரச் சொன்னார்”, என்றார்.
“இருங்க. கேட்டு சொல்றேன்.” கணேஷ்ராவின் அறையில் நுழைந்தான் சிப்பந்தி உத்தரவு பெற.
“உள்ள போங்க சார்.”
“வணக்கம். சார் வரச் சொன்னீங்களாம்.”
“ஆமா. நம்ம வீட்டு பாத்ரூமில கொஞ்சம் வேல இருக்கு.” வேலையை விவரித்துவிட்டு கேட்டார், “எவ்வளவு ஆகும்?”
மனதில் கணக்கு போட்டுவிட்டு முத்துவேல் சொன்னார், “ஒரு முப்பதாயிரம் ஆகும் சார்.”
கணேஷ்ராவிற்கு என்ன தோன்றியதோ தெரியவில்லை, “நீ போகலாம். உங்களுக்கெல்லாம் திமிரு ஜாஸ்தி ஆயிடுச்சு. இந்தா பிடி நீ இவ்வளவு தூரம் வந்ததுக்கு காசு.” ஒரு நூறு ரூபாய் தாளை விசிறி எறிந்தார்.
முத்துவேலுக்கு ஒன்றும் புரியவில்லை. தான் கேட்டது சரியான கூலிதான். பின்னே ஏன் கணேஷ்ராவ் அப்படி கூச்சல் போடுகிறார் என்றும் முத்துவேலுக்கு பிடிபடவில்லை. தன் அனுபவத்தில் இப்படிப்பட்ட பெரும் பணக்காரர்கள் பலரை அவர் கண்டிருக்கிறார். முத்துவேல் பணத்தை தொடவில்லை.
“நீ பணத்தை எடுத்துக்கோ. கிளம்பு.” அதிகாரத்தின் எதிரொலி.
“நான் வர்றேன். பணம் வேண்டாங்க.” முத்துவேல் திரும்பி நடந்தார்.
சாயங்காலம் அலைபேசி அழைத்தது. கணேஷ்ராவ்தான்.
“சார் சொல்லுங்க.”
“ஆமா. நம்ம பாத்ரூம் வேலைய எப்ப முடிக்குறே?”
“நீங்க ஒண்ணும் சொல்லலையே சார்!”
“நான் தான் ஆரம்பிக்க சொல்லிட்டேனே..”
“சார், காலம்பற வந்தப்ப நீங்க வேற மூடுல இருந்தீங்க. இத பத்தி நீங்க ஒண்ணும் சொல்லல.”
“அப்படியா சரி. நீ எவ்வளவு சொன்ன?”
“முப்பதாயிரம் சார்.”
“சரி. பண்ணிடு. ஆனா, ஒரு விஷயம்..” என்று இழுத்தார்.
“சொல்லுங்க சார்.”
“சொல்றேன். என் சம்சாரம் கேட்டா பதினெட்டு தான் ஆச்சுன்னு சொல்லணும். தெரியுதா? நான் உனக்கு முழுக்க செட்டில் பண்ணிடுறேன். ஓகேயா?”, என்றார் கணேஷ்ராவ்.
“சரி சார். அப்ப நான் வேலைய ஆரம்பிக்கிறேன்.”, என்றார் முத்துவேல்.
இவ்விடத்தில் கணேஷ்ராவின் சம்சாரம் பற்றி நீங்கள் அறிய வேண்டியது அவசியம். கணேஷ்ராவிற்கு பூர்வீகம் மகாராஷ்டிரம். இந்தப் பெருநகரில் அவருக்கு அனேக ஆஸ்திகள். அதனாலேயே அவருக்கு தன் மகளைக் கட்டிக் கொடுத்தார் கணேஷ்ராவின் மாமனார். கணேஷ்ராவிற்கு இரு மகள்கள். ஒரு மகளுக்கு திருமணமாகிவிட்டது. இளைய மகளுக்கு வரன் பார்த்துக்கொண்டிருகிறார் கணேஷ்ராவ். கணேஷ்ராவ் சம்சாரத்திற்கு எல்லாமே பணம் தான். வருமானம் என்றால் மகிழ்ச்சி, செலவு என்றால் கசப்பு அவளுக்கு. கணேஷ்ராவின் அலுவலகத்திலேயே அவள் பல ஒற்றர்களை நியமித்து இருந்தாள் கணவரின் மேல் வரும்படி நடவடிக்கைகளை பற்றி அறிந்து கொள்ள. ஒரு முறை சுனாமி நிவாரணத்திற்கு கணேஷ்ராவ் ஒரு பெரிய அளவிற்கு நிதி அளித்தது அறிந்து அவள் ஒரு பாட்டம் ஆடி தீர்த்து விட்டாள். அந்த சுனாமியில் இருந்து கணேஷ்ராவ் மீண்டது தனிக்கதை. அதிலிருந்து மனிதர் உஷாராகிவிட்டார். கணேஷ்ராவ் முத்துவேலை எச்சரித்ததற்கு இதுதான் காரணம்.
எடுத்த வேலையை சிறப்பாக முத்துவேல் முடித்து கொடுத்தார். கணேஷ்ராவ் கொடுத்த பணம் முப்பதாயிரம் பாக்கெட்டில் இருந்தது. காலையில் இருந்து இரு மகள்களும் அலைபேசியில் அழைத்தவாறே இருந்தனர். தந்தை பணம் ஏதாவது கொண்டு வருவார் என்று எதிர்பார்த்து வீட்டில் டேரா போட்டிருந்தனர். முத்துவேலுக்கு இது வாடிக்கை தான். வீட்டில் நுழைந்தவரை எதிர்கொண்ட மனைவி கேட்டாள், “ஏங்க, எவ்வளவு கெடச்சிது?”
முத்துவேலுக்கு கணேஷ்ராவின் ஞாபகம் வந்தது. அமைதியாக மனைவியை நோக்கினார். முத்துவேலின் மனைவியும் கணேஷ்ராவின் சம்சாரமும் கோயிலில் அடிக்கடி சந்தித்துக்கொள்வது அவருக்கு தெரியும். நிதானமாக கூறினார். “பெரிய வேலை ஒண்ணுமில்லை. பதினெட்டாயிரம் ரூபா தான். சாமானுக்கே பத்தாயிரம் ஆயிடுச்சு. இந்தா எட்டாயிரம். பேரன் பீசுக்கு இதிலிருந்து கொடு.”
முத்துவேலுக்கு அன்று பேரனுக்கு சொல்லித் தந்த குறள் நினைவுக்கு வந்தது. “வாய்மை எனப்படுவது..”. மனதிற்குள் சிரித்துக்கொண்டார்.

எழுதியவர் : கல்யாண் (28-Feb-16, 7:45 pm)
சேர்த்தது : kalyans
பார்வை : 758

மேலே