தெருவிளக்கு

தெரு விளக்கு..
இருளைக் கூட்டிப் பெருக்கி,.
அருள் கூட்டிடும்…
புகழ் விளக்கு!

சுடர் சூரியன்
விட்டுச்சென்ற
வேலையை
செய்வதில்
இதற்கு
அதிகம் பழக்கம்.

தூய தொண்டிற்கு
இதுதான்
பொருள் விளக்கம்!

ஊரின்..
இருள் போக்கிடும்
இருளைப்
பகலாக்கிடும்!

தன் கீழ் அமர்ந்த
சிறுவனை
படிக்க வைக்கும்
திருடனை..?
ஊராரிடம்
பிடித்துக் கொடுக்கும்.

விளக்கில்லா சாலை-
அது
இருள் என்ற
யானையைப் பார்த்த
குருடர்களாய்
நம்மை ஆக்கி விடும்.


மதுவிலக்கு இல்லாத நாடு
எப்படி மதுவுக்கு அடிமையாகி விடுமோ....
அப்படி
தெருவிளக்கு எரியாத ஊர்
இருளுக்கு அடிமையாகிப் போகும்


இரவில் உறங்கும் மனிதரை
கண்ட தெரு விளக்கு
தானும் உறங்க நினைக்க…
பலனோ.....
கண்ணயர்ந்து… கண்ணயர்ந்து
கண்விழிக்கும்
கடமை மறந்த தெரு விளக்குகள்
ஆங்காங்கே நிற்கும்.


விளக்கெரியாத வீடு..
அது சுவர் எது
கதவு எது என்பது தெரியாத காடு.
விளக்கில்லாத தெருக்கள்
அவை போகாத ஊருக்கு வழி சொல்லும் ஆட்கள்.
விளக்கில்லாத ஊர்
அது இருளை மட்டும் வெளிச்சம் போட்டுக் காட்டும்
மக்களை வாட்டும்.

மனிதரில் …
தியாகவிளக்காய்
ஒளிர்ந்த…
பலரும்
தெருவிளக்கில் ..
கற்று தெளிந்தவரே

புற இருள் விலக்கும்
தெய்வப் பண்பில்…
கோவிலில் ஏற்றப்படும்
தூய திருவிளக்கை
ஒத்ததே
தெருவிளக்கு!.

எழுதியவர் : பரதகவி (20-Mar-16, 12:07 pm)
பார்வை : 423

மேலே