ஆசான் பால்பாண்டியன் ஐயாவிற்கு ஒரு மடல்

கவித்தாய் பெற்றவரே! உம்மைப்
போற்ற நினைக்கையில் கவித்தாயே!
என் தலைமுடியை வருடிச் செல்கிறாள்..

தென்தமிழகமே! கொஞ்சம்
தலைசாய்ந்து கொள்! உந்தன் பெருமை இன்று
உதிரப்போகிறது மீண்டும் மலர்வதற்கு..

கண்டிப்போடும் நீயே! தாயாய்
அறிவுரையோடும் நீயே! ஆசானாய்
தோளோடும் நீயே! தோழனாய்
என் எழுத்தோடும் நீயே! கவிஞனாய்
வாழ்கிறாய்

கண்டிப்பாய் நீ கற்று தந்ததும்
கனிவாய் நீ விட்டு தந்ததும்
கண்ணோடு கரைகிறது கானல் நீராய் இன்று

சில நேரம் ஆசானாய்
பல நேரம் நண்பனாய்
நொடி பொழுதும் கனவாய்
நீ உரையாடிய அந்த நாட்கள்

பாலையில் சோலையாய் உம்மைக் கண்டேன்
எங்கள் இன்னல்கள் யாவும் கரைந்தது இன்று!
எங்கள் வழித்தடம் யாவும் புரிந்தது இன்று!

சுட்டெரிக்கும் கதிர் இல்லை நீவிர்.
எங்களை நல்வழி நடத்தும் முழுமதி நீரே!
மறவோம் உங்களை எங்கள் வாழ்நாளில்!

ஒற்றை வரியில் உம்மை போற்றுகிறேன் மெழுகாக
நீங்கள் உருகியதால் ஆனது எங்கள் வாழ்க்கை பகலாக,
செல்வோம் நீவிர் சொன்னபடி நல்வழி எளிதாக!

வெள்ளை மனம் கொண்ட கருப்பு சட்டைக்காரரே!
முழு உருவாய் உம்மை தினம் காண்கையில்
நாங்கள் காண்போம் இறைவனை உன் வடிவில்!

கணித ஆசை கொண்டவரே!
ஆங்கிலம் கற்று தேர்ந்தவரே!
செல்லி,பைரன் ஆன்மாவும்
உன் பெயரை யாசிக்க காரணம் என்னவோ!

வற்றியும் போகக்கூடும் கடல்நீர் ஒருநாள்,
என்றும் நினைவில் வற்றா நீராய் உம் நினைவுகள்,

கவலை என்ற ஒற்றை வார்த்த
அர்த்தமற்று போனது உங்கள் அகராதியில்

காலமும் ஒருநாள் கடந்து தான் போகும்
உங்கள் நினைவலைகளை நெஞ்சில்
சுமந்தப்படி

கார்மேகம் சுமக்கிறது
மழைத்துளியோடு உங்கள் நட்பை

விளக்கின் ஒளியால் இருள் அடங்கும்
கண் அசைவால் எங்கள் திமிர் அடங்கும்


கற்பிக்கும் சிறப்பை காண்கிறோம் உம்மிடம்,
கரைகள் அற்ற கடல் நீரே! மேகங்கள் தூவும் மழை நீரே!
இக்கணம் எங்கள் கண்களில் கண்ணீரே!


வாழ்த்த வயதில்லை
வணங்க தகுதியில்லை
பாராட்ட மொழியில்லை
உங்கள் புகழ்பாட யாரும் இங்கில்லை
உங்களை தவிர...

நன்றி: வ.க.கன்னியப்பன் ஐயா

எழுதியவர் : சிவா (30-Mar-16, 4:59 pm)
பார்வை : 497

மேலே