நடமாடும் நதிகள் -56 -நிறைவுப்பகுதி

மீன்கார மாரி
பரிசல்கார காளி
ஒட்டக லோனு வேணுமா.?
*****************

“ஐந்தாண்டுக்கு முன்
ஆற்றில் போயிட்டாள் அம்மா”
“ஆறுனா என்னப்பா..?”
********************

எருமையை
வரைந்து முடித்தேன்
கொம்பால் முட்டுகிறது.
*****************

நிழலைக் கூட
அழிக்க முடியவில்லை
கொதிக்கிறான் சூரியன்
*************************

சுவரெங்கும்
பச்சை இலைகள்
உயிரற்ற சிரிப்பு
***********************

மலை பிளந்தவனுக்கு
விடுதலைக் கிரீடம்
மயங்குது நீதி
*********************

கழுத்தில் கத்தி
முழக்கம் எழவில்லை
தேசத்துரோகி
********************

பல்கலைக் கழகம்
ஒரேயொரு பாடம்
பாரத் மாதாகி ஜே
**************************

இன்னுமுனக்கு
உயிர் இருக்கிறது
கூடு அணிசேர்
***********************

மிக்க மகிழ்ச்சி
கவிதை தொலைந்தபின்
விதைகளை நடுவது.!
***************************


வணக்கம் தோழர்களே..!

தேர்தல் திருவிழா போன்றவொரு பிரம்மாண்டத்துடன்,சுமார் 55 நாட்களாக தொய்வின்றி நடந்து முடிந்திருக்கிறது இந்த நடமாடும் நதிகள்..!

ரசனையையும் இலக்கிய இன்பத்தையும் கவிதைகள் தோறும் விதவிதமாய் அள்ளி நாளும் வழங்கிய தோழர்களின் கவிதைகள், கருத்துக்களாலும் மதிப்பீடுகளினாலும் பெற்ற வெற்றியைப் பார்த்தபோது,நாம் ஓட்டளித்த கட்சியே ஆட்சியில் அமர்ந்துவிட்ட மகிழ்ச்சி கிட்டியது.

ஒரு சில தோழர்கள் ஹைக்குவின் இலக்கணத்தை மீறாமல் கவிதையின் செறிவும் குறையாமல் அளித்திருந்த கவிதைகளைப் பார்த்தபோது அவர்களின் மீது இதுவரை நான் வைத்திருந்த மதிப்பீடும் மரியாதையும் இன்னும் சற்று உயர்ந்து போனது.

அதேசமயம் முடிந்தவரை ஹைக்குவின் இலக்கணங்களையொட்டியே பயணித்திருந்த பலகவிதைகள்,தான் கொண்டிருந்த அழகுணர்ச்சி, பொருட்செறிவு, வாக்கிய அமைப்பு போன்ற அம்சங்களால் மனதை வெகுவாகக் கட்டிப் போட்டது.இந்தக் கவிதைகள் பேசாத பொருளில்லை என்று உறுதியாக சொல்லிவிடலாம்.

மேலும்,இத்தொடரில் பதிவு செய்யப்பட்ட கவிதைகளைக் குறித்து வாய்ப்பு உள்ள போதெல்லாம் அலைபேசியில் தொடர்பு கொண்ட தோழர்களுக்குள் கருத்துக்களைப் பரிமாறிக் கொண்டோம். மகிழ்ந்தோம்.சரியான ஒரு பயணத்தை முன்னெடுத்திருக்கிறோம் என்று பெருமையுற்றோம்.

கருத்தால்,கொள்கையால் மாறுபட்ட சிந்தனைகள் பலஇருப்பினும், நடமாடும் நதிகளின் பயணத்தை சரியாகவும் நிறைவாகவும் முடித்துவைக்க வேண்டும் என்ற பொதுநோக்கில் ஒன்றிணைந்து இம் முயற்சியில் பெரிதும் ஒத்துழைத்த அனைத்து தோழர்களுக்கும் மிக்க நன்றி.

நடமாடும் நதிகளின் பயணம் துவங்கிய நாள் முதல்,தோழர்கள் ஜின்னா,டி.என்.முரளி, ஆண்டன்பெனி,ஓவியர் கமல் காளிதாஸ் ஆகியோரின் அயராத உழைப்பும் அக்கறையும் என்றென்றும் நினைவிலிருத்த வேண்டிய ஒன்றாகும். உங்கள் அனைவரின் சார்பிலும் அவர்களுக்கு மீண்டும் ஒரு நன்றியைத் தெரிவித்துக் கொள்கிறேன்.

"பூட்டிய வீட்டில்
ஆடிக் கொண்டிருக்குது
மழலையின் ஊஞ்சல் "

------- என்றுதான் இந்த நிறைவுப்பகுதியை சற்றுமுன் எழுதத் துவங்கினேன்.ஆனால்,அந்த ரீதியில் தொடர்ந்து யோசிக்கும் போது,நான் சொல்வதற்கு இன்னும் முக்கியமான விஷயங்கள் இருப்பதாகப் பட்டது.அதனால் எனது பாதையையும் மாற்றிக்கொண்டேன்.

எதுவாக இருந்தாலும் அபி இப்படித்தான் எழுதுவார் என்று தெரிந்தும்,இத்தொடரில் எனக்கு அளிக்கப்பட்ட சிறப்பு வாய்ப்புக்கு,தோழர் ஜின்னா உட்பட தோழர்களுக்கு நன்றியைத் தெரிவித்துக் கொள்கிறேன்.

கவிதைக் கடலோடு சங்கமித்துவிட்ட நடமாடும் நதிகள் எனும் இத்தொடரின் பயணம் இங்கே நிறைவுறுகிறது என்பதைத் தெரிவித்துக் கொள்வதோடு,இன்னும் அடுத்தடுத்த பயணங்களில் இதுபோலவே மனமும் கரமும் உங்களோடு இணைகின்ற நாளை, உங்களைப் போலவே நானும் எதிர்பார்த்து நிறைவு செய்கிறேன்.நன்றி,வணக்கம்.!

மீண்டும் பேசுவோம்..!
அன்புடன்
பொள்ளாச்சி அபி.

எழுதியவர் : பொள்ளாச்சி அபி B +ve (1-Apr-16, 12:15 am)
பார்வை : 574

மேலே