உயிர் உதிரப் பறந்த அவ் வெண்கொக்கு

அடர்வனமற்ற
இருப்பின் பால் தனித்து
ஒற்றை கால் தவத்தில்
ஒரு கடிய வாழ்வை
நகர்த்திய பெண் பட்சி

வற்றிய நதிகளின் எல்லைதாண்டி
குஞ்சுகளின் இரைக்காய்
பாலை வெளியேகி
ஆட்டிடைச்சியாயும்
ஊண் தேடியலைந்ததாய்
கேவி அழுதிருக்கிறது என்னிடம்

நான் குஞ்சாய் இருந்த வேளையது
மனசு தாளாமல்
வலியோடு அழுதிருந்தேன்
வேறெதற்கும் வழியற்று நானும்

பின் வந்த காலங்களில்
பசித்திருந்த பொழுதுகளை சேமித்து
சுய அலகின் இறகுகளால்
கூடும் பின்னியது

தன் குஞ்சுகளின் வாழ்வு துலங்கும்
கனவுகளில் சிலிர்த்த
பொழுதொன்றில்
தன் ஆயுள்குளம் வற்ற
கணக்கு வழக்குகளை முடித்து
கரை ஏறிற்று

மீட்சி பெறு கணம்
எம் விழிகளில்
நதிகளை திருப்பி விட்டு
இறுதி விடை வாங்கி
திரும்பி வரா திசை நோக்கி
உயிருதிர்த்திப் பறந்தது
அவ்வெண் கொக்கு.


ரோஷான் ஏ.ஜிப்ரி-இலங்கை.

எழுதியவர் : ரோஷான் ஏ.ஜிப்ரி-இலங்கை. (11-Apr-16, 11:26 pm)
பார்வை : 89

மேலே