நெஞ்சில் குடியிருக்கும் அன்பருக்கு - சண்முகப்பிரியா

சிவாஜி கணேசன், வைஜயந்திமாலா நடித்த ‘இரும்புத் திரை’ என்ற திரைப்படத்தில் (1960 ஆம் ஆண்டு வெளிவந்தது) பட்டுக்கோட்டை கல்யாணசுந்தரம் இயற்றி, எஸ்.வி.வெங்கடராமன் இசையமைப்பில் டி.எம். சௌந்தரராஜன், பி. லீலா 'சண்முகப்பிரியா' ராகத்தில் மிக இனிமையான குரலில் பாடிய ஒரு அருமையான பாடல். சிவாஜி கணேசன், வைஜயந்திமாலா இருவரும் அருமையாக நடித்திருப்பார்கள்.

நெஞ்சில் குடியிருக்கும் அன்பருக்கு நானிருக்கும்
நிலைமை என்னவென்று தெரியுமா
நினைவை புரிந்து கொள்ள முடியுமா
என் நினைவை புரிந்து கொள்ள முடியுமா

கண்ணில் குடியிருக்கும் காதலிக்கு நானிருக்கும்
கவனம் என்னவென்று தெரியுமா
கருத்தை புரிந்து கொள்ள முடியுமா
என் கருத்தை புரிந்து கொள்ள முடியுமா

என்றும் பேசாத தென்றல்
இன்று மட்டும் காதில் வந்து ஆ ஆ
இன்பம் இன்பம் என்று சொல்வதும் என்ன

ஓர விழி பார்வையிலே
உள்ளதெல்லாம் சொல்லி விட்டு ஆ ஆ
ஒன்றும் தெரியாதது போல்
கேட்பதும் ஏனோ (நெஞ்சில்)

கண்ணில் குடியிருக்கும் காதலிக்கு நானிருக்கும்
கவனம் என்னவென்று தெரியுமா
கருத்தை புரிந்து கொள்ள முடியுமா
என் கருத்தை புரிந்து கொள்ள முடியுமா

மலர்க்கொடி தலையாட்ட மரக்கிளையும் கை நீட்ட
கிளையில் கொடி இணையும்படி ஆனதும் ஏனோ
இயற்கையின் வளர்ச்சி முறை இளமை செய்யும் கிளர்ச்சி இவை
ஏனென்று நீ கேட்டால் யானறிவேனோ

நெஞ்சில் குடியிருக்கும் அன்பருக்கு நானிருக்கும்
நிலைமை என்னவென்று தெரியுமா
நினைவை புரிந்து கொள்ள முடியுமா
என் நினைவை புரிந்து கொள்ள முடியுமா (கண்ணில்)

பாடலின் ஒவ்வொரு வரியும் மிக இனிமையானது. காதலி காதலனை தன் நெஞ்சிலும், காதலன் தன் காதலியை தன் கண்களிலும் வைத்துப் போற்றுகிறார்கள்.

’என்றும் பேசாத தென்றல்
இன்று மட்டும் காதில் வந்து
இன்பம் இன்பம் என்று சொல்வதும் என்ன’ என்று காதலி கேட்பதும், அதற்கு,

’ஓர விழி பார்வையிலே
உள்ளதெல்லாம் சொல்லி விட்டு ஆ ஆ
ஒன்றும் தெரியாதது போல்
கேட்பதும் ஏனோ’ என்று காதலன் சொல்வதும் நயமான சொல்லாடல்.

‘மலர்க்கொடி தலையாட்ட மரக்கிளையும் கை நீட்ட
கிளையில் கொடி இணையும்படி ஆனதும் ஏனோ’ என்று காதலி கேட்பதும், அதற்கு,

’இயற்கையின் வளர்ச்சி முறை இளமை செய்யும் கிளர்ச்சி இவை
ஏனென்று நீ கேட்டால் யானறிவேனோ’ என காதலன் பதிலளிப்பதும் அருமை.

பட்டுக்கோட்டை கல்யாணசுந்தரத்தின் தமிழும், கற்பனையும், கவிதை புனைவும் மிகவும் போற்றத்தக்கவை. இவரது பாடல்கள் என்றும் அழியாது, நினைவில் என்றென்றும் நிலைப்பவை.

எழுதியவர் : வ.க.கன்னியப்பன் (15-Apr-16, 2:12 pm)
சேர்த்தது : Dr.V.K.Kanniappan
பார்வை : 771

மேலே