துயில் கலைக்கிறாய் சிலநாள் இரவில் கஸல்

இரவில் சிலநாள் துயில் கலைக்கிறாய்
துயிலில் சில நாள் கனவுத் திரை விரிக்கிறாய்

மலர்விரியும் தோட்டத்தில் மாலை வா என்றால்
வருகிறேன் என்கிறாய் வர மறுக்கிறாய்

நேச வாசலை நெஞ்சினில் திறந்து விட்டு
நித்தம் நெஞ்சில் வலி கொடுக்கிறாய்

கண்கள் தோட்டத்தில் காதலாய் விரிந்தவள் நீ
நெஞ்சத் தோட்டத்தில் ஏன் முள்ளை விதைக்கிறாய்

கல்நெஞ்சக்காரி ஆகிவிட்டாய் சகி கவின் காதலில்
மோகவீதியில் நீ அறிந்தே மோசம் செய்கிறாய் !

----கவின் சாரலன்
கஸல் குறிப்புகள் :
மத்லா--- ஆரம்ப வரிகளின் ஈற்றுச் சொல் ஒரே ஓசையில் ஒலிக்க வேண்டும்
இங்கே கிறாய் . இது கஸலின் கா ஃ பியா
இது ஒவ்வொரு இரண்டாம் வரியிலும் வரவேண்டும்
மக்தா---கடைசிக் கண்ணியில் வரும் புனைப் பெயர் கையெழுத்து.
இது விரும்பினால் பதியலாம் . மிர்ஜாவின் புனைப் பெயர் காலிப்
இது அவரது கஸல் ஒவ்வொன்றிலும் அமைந்திருக்கும்
மத்லா கா ஃ பியா மக்தா ----இதுதான் கஸல்
புரிந்தால் விரும்பினால் எழுதிப் பாருங்கள் .
பாலைப் பசுஞ் சோலைபோல் கோடையில் கஸல் இனிமை தரும்

எழுதியவர் : கவின் சாரலன் (20-Apr-16, 5:31 pm)
பார்வை : 259

மேலே