ஃபீனிக்ஸ் தேவதை

ஃபீனிக்ஸ் தேவதை
*****************************

இறந்து பார்க்கிறேன்
உயிர் எத்தனை பைசாவிற்கு மதிப்பென்று
இறப்பதைக் குறித்த
காரணங்கள் என்று குறிப்பாக
ஏதுமில்லை
இதயம் தன்துடிப்பை நிறுத்தும்
நொடிக்குப் பெயர் மரணம் என்றார்கள்

தேவைகளைக் கடந்து
அதற்குமேலும் சுமக்க
அழுத்தங்களைக்
கொடுத்தாலே போதுமானது
வேகமாக இயங்கி
அது தன் செயல்பாட்டை இழந்துவிடும்

இறந்து பார்க்கிறேன்
உயிர் எத்தனை பைசாவிற்கு மதிப்பென்று

உடலை உயிர்ப்பிரிந்தால்
அது பிணம்
மனதை காதல் பிரிந்தால்
அது நடைப்பிணம்
உடலைப் பிரிந்த உயிரும்
பித்தைப் பிரிந்த நினைவுமாக
எங்கும் சேராமல்
இறந்து பார்க்கிறேன்
என் உயிரும், என் காதலும்
எத்தனை பைசாவிற்கு மதிப்பென்று

இனி என்ன
நான் கொடுத்து கொடுத்து
பாரமான என் முத்தங்களை
உன் வழித்துணைக்கு
கைத்தாங்கலாக தருகிறேன்
கொண்டு போ

இந்த நினைவுகளின் பிரிவைக்கண்டு
அழாதே ,,
உனக்குத் தெரியாமல்
உனக்கும் எனக்கும் தெரிந்த
என் பின்னால் இருப்பவன்
உனக்கு ஆறுதல் சொல்ல
நீ கழுத்துசாயும் நேரம்பார்த்து
தோள் முட்டுக்கொடுக்கக் காத்திருக்கலாம்
ஆதலால் அழாதே

காதலை விளக்கிக் கொண்டிருப்பாய்
ஏதோ ஒருசில அழகான
முகங்களுடனும்
உனக்குப் பிடித்த பாடல்களுடனும்
திரைப்படங்களுடனும்
ஒப்பிட்டுப் பார்த்து
விளக்கிக் கொண்டிருப்பாய்
அப்படி என்று
நீ உனக்குள் வைத்துக் கொண்டால்
அது காதலில்லைதான்
என் சந்தேகங்களும்
என் கோபமும்
என் அன்பும்
யாரையோ நீ வர்ணிக்கும் அழகு
எனக்கானதில்லை
நீ எனக்கு மட்டுமே என்ற
வயிறு வாணலியின்
எண்ணெய்க் கொதிப்பும்
காதலில்லைதான்
பரவாயில்லை
அவை உன்னை அச்சுறுத்தட்டும்
உன் பாதையில்
நீ சுவை என்று நெருங்கும்
அத்தனையும்
சாத்தானின் பழனங்கள் தான்
உன்னை இழுத்துக் கொண்டிருக்கின்றன
வேறு எப்படி உனை மீட்பது

எங்கெல்லாம் நீ தவறுகளை
சுகிப்பதாக
நான் நினைக்கிறேனோ
அங்கெல்லாம்
வானுயர ஜுவாலை மூட்டி
அவை உன்னை அச்சுறுத்தட்டும்

முகமல் முழு ஆடையுடனும்
ஒளி உதிரும்
வெண்ணிற இறகுகளுடனும்
கால்கள் தட்டாது
உன் வீட்டு கூரைமீது
படபடக்கிறேன்
உன்னைத் தவிர
மற்றவர்களுக்கு பேயாக
இருந்துவிட்டுப் போகிறேன்
,,,,,,குழப்பமில்லை,,,,,

எங்கெல்லாம்
உன் நன்மைகளுடைய
கற்பைக் கொள்ளும்
சிரித்த தீமைகள் இருக்கின்றனவோ
அங்கெல்லாம்
க்ரூரம் கொண்டு எரித்துவிட்டு
உனைத் தொடரும் நான்
ஆக்ரோஷ நெருப்பு கோளமாகி
கனலாகி,, கங்காகி
ஏதோ ஓரிடத்தில்
சாம்பலாகி விழுகிறேன்

விலகி ஓடாதே
"சற்றேனும்
திரும்பியிருக்கலாம் தான்"
சூடு அகலாத
சாம்பல் குவியலில் இருந்து
சன்னக்குரலோடு
அயர்ந்த உள்மூச்சு சப்தமிட
உடலோடு ஒட்டிப்பிறந்த
வெண்ணிற முகமல் ஆடையுடன்
ஒளி உதிரும்
வெண்ணிற இறகுகளுடன்
சாந்தமே உருவாகி
முளைவிட்டு
மலர்ந்துகொண்டிருக்கும்
ஒரு "ஃபீனிக்ஸ் தேவதை"யைக் காண
"சற்றேனும் நீ
திரும்பியிருக்கலாம்தான்"

ஒரு மின்தடங்கல் நாளின்
மெழுகுவர்த்தி
இரவொன்றில்
அண்ணார்ந்து பார்
மேகமாகி
அதன் கண்களிலிருந்து
தூறல் தெளிக்கிறேன் ம்ம்
முதல் துளியால் முகம் தழுவுவேன்
அப்போது அழுதுக்கொள்
நாம் நம் அன்பை ஏன் இழந்துவிட்டோம் என்று

"பூக்காரன் கவிதைகள்"

எழுதியவர் : அனுசரன் (6-May-16, 6:43 am)
பார்வை : 86

மேலே