மனிதநேயம் - எழுத்து நடத்தும் உழைப்பாளர் தின போட்டிக்கான கட்டுரை

மனிதநேயம்

மனிதனை மனிதனாய் பார்த்து நேசிப்பதே மனிதநேயம்.மனிதகுலத்திற்கு அன்பு ஒரு கண் என்றால்,மனிதநேயம் மற்றொரு கண்.இது தான் நம் உலகத்தின் தேவை.அன்பை கூட நமக்கு மிகவும் தெரிந்தவர்கள் மீதுதான் காட்ட முடிகிறது.ஆனால் மனிதநேயத்தை மட்டுமே நாம் முன்பின் தெரியாதவர்களிடம் பகிர்ந்து கொள்ள முடிகிறது.

மனிதநேயத்தின் மாயாஜாலம்:

வறண்ட பாலைவனம் போல் இருந்த பல மனிதர்களின் மனதனிலே பசுமை செய்திருக்கிறது.கோபம், வெறி,சுயநலம் மிக்க மனிதர்கள் பலரை மனிதனாய் மாற்றியுள்ளது.இல்லையேல், கலிங்கப்போருக்கு பிறகு தான் கொன்று குவித்த மனிதர்களை கண்டு வருந்தி இனி நாம் போர் புரிய கூடாது..அமைதியே நம் வழி என ஏன் யோசித்திருக்க வேண்டும்.

காய்ந்து சருகாக வேண்டிய முல்லைக்கொடிக்கு பாரி மன்னன் ஏன் தேர் தந்து உதவிட வேண்டும்.

தான் பிறக்காத ஒரு நாட்டின் புரட்சிக்காக சேகுவாரோ ஏன் போராடிருக்க வேண்டும்.
தனக்கு சிறிதும் சம்பந்தமில்லாத ஏழை ஒருவர் மேலாடையின்றி வெயிலில் உழைப்பதை கண்டு ‘என் நாட்டில் ஏழைமக்கள் என்று நல்ல ஆடை அணிகிறார்களோ அன்று நான் ஆடை அணிந்து கொள்கிறேன்’ என காந்தியை அரையாடையுடன் வாழ வைத்தது எது?

நிதி திரட்டும் போது கடைக்காரன் எச்சிலை முகத்தில் உமிழ்ந்த போது ‘இது எனக்கு போதும் என்னை சார்ந்தவர்களுக்கு ஏதேனும் தாருங்கள்’ என சிறிதும் கோபமின்றி அன்னை தெரசாவை கூற வைத்தது எது.

மணீப்பூர் மாநிலத்தில் அப்பாவி மக்களுக்கு எதிராக ஆயுதப்படையினரால் (ASFPA) நடத்தப்படும் கொடுமைக்களுக்கு எதிராக கிட்டதட்ட பத்து ஆண்டுகளுக்கு மேலாக ஐரோம் சர்மிளா அவர்களை உண்ணாவிரதம் மூலம் போராட வைத்தது எது
அனைத்தும் மனிதநேயம்.

மனிதநேயம் மனிதர்களுக்கு மட்டுமா..?

மனிதநேயம் மனிதர்களுக்கு மட்டும் என அடக்கிவிட முடியாது.அது பிற உயிரினங்கள் மீதும் செலுத்தப்படுகிறது.பறவைகள்,விலங்குகள் மீதான மனிதநேய விளைவுதான் ‘ப்ளுகிராஸ்’அமைப்பு.நம்மை போல் பிறவும் வாழ்வன என்பதே அதன் அடித்தளம்.அதன் மூலமாக இன்று மிருகங்கள் மீதான கொடுமைகள் தண்டிக்கப்படுகிறது.

‘வாடிய பயிரை கண்டபோதெல்லாம் வாடினேன்’ என வள்ளலாரை வாட வைத்தது மனிதநேயம் .

சில விலங்குகளை தெய்வத்தின் அடையாளமாக கருதும் நாம் அதே தெய்வங்களுக்காக விலங்குகளை பலியிடவே செய்கிறோம். வேட்டையாடப்பட்டு..வேட்டையாடி வளர்ந்த நம்மால் ‘கொன்ற பாவம் தின்றால் போச்சு’ என்ற அளவிற்குத்தான் அவற்றின் மீது மனிதநேயத்தை காட்ட முடிகிறது.

சிலர் வீட்டின் வாசல்களில் அரிசி மாவினால் கோலம்மிடுவது வழக்கம்.அதில்,அந்த அரசிமாவு எறும்புகளுக்கு உணவாக பயன்படும் என்ற சிறிய மனிதநேயம் ஓளிந்திருக்கிறது.

ஏமாற்றப்படும் மனிதநேயம்:

மனிதனை தவிர எந்த விலங்குகளும் ஏமாற்றி வாழ்வதில்லை.ஓவ்வொரு மனிதனும் விதவிதமாக ஏமாற்றபடுகிறான் (அ) ஏமாற்றுகிறான்.இல்லாமைக்காக ஏமாற்றிய மனிதன் இழிவான வாழ்வுக்காக ஏமாற்றுகிறான்.ஆசை,முட்டாள் தனம் ஆகியவற்றால் ஏமாற்றப்பட்ட மனிதன் இன்று மனிதநேயத்தால் ஏமாற்றபடுகிறான்.

இன்று பல பேருந்து நிலையங்களில் கல்லூரி மாணவர்களை (குறிப்பாக மாணவிகளை) குறிவைத்து இந்த ஏமாற்றம் நடைப்பெருகிறது.ஏனெனில்,அவர்களிடம் நிச்சயம் பணம் இருக்கும் தருவார்கள் என்ற நம்பிக்கை.அவர்களிடம் ‘என் பணம் பறிப்போய்விட்டது..20ரூபாய் இருந்தால் போதும் நான் ஊர்க்கு செல்வேன்..தாருங்கள்’ என கெஞ்சி வாங்குவார்கள்.இவ்வாறு,பலரிடம் ஏமாற்றுவார்கள்.சில சின்னசிறு குழைந்தைகள் கூட இதற்கு உட்படுத்தப்படுகின்றனர்.

உத்தரகாண்ட் மழை வெள்ளத்தின் போது சில கும்பல்கள் போலியான அமைப்புகளின்
பெயரில் இனணையங்களில் பணம் திரட்டி மக்களை ஏமாற்றியதுண்டு.

எங்கெங்கு காணினும் மனிதநேயமடா:

இறைவன் தூணில் துரும்பில் இருப்பார் என்பார்கள்.அது போல மனிதநேயமும் இருக்கிறது.யாரிடம் தான் இல்லை மனிதநேயம்.கடந்த ஆண்டு சென்னை மற்றும் கடலூரில் ஏற்பட்ட வெள்ளப்பெருக்கை யோசித்து பார்த்தால் புரியும்.அப்பொழுது எந்த சாதிக்கரமும் நீட்டபடவில்லை..எந்த மதத்தின் கரமும் நீட்டப்படவில்லை..நீட்டப்பட்ட கரங்கள் அனைத்தும் மனிதநேய கரங்களே.அந்த மழையினால் அணைகள் உடைந்து பாய்ந்தது வெள்ளம் மட்டுமல்ல.. மனிதநேயமும்தான்.

இன்று உடல் உறுப்பு தானம்,இரத்த தானம் அதிகரித்துள்ளது.புற்றுநோயால் பாதிக்கப்பட்டு முடியிழந்தவர்களுக்காக முடிதானம் செய்கின்றனர்.இவை மனிதயேம்தானே.

சேவையின் தேவை:

இங்கு பணம் இருப்பவர்கள் அனைவராலும் சேவை செய்ய முடிவதில்லை.ஏனெனில்,சேவைக்கு தேவை மனிதயேம்.அத்தகைய சேவை புரிவோர் பலர்கு உதவி செய்து பங்களிப்பவர்களும் உண்டு.உதவி வேறு..சேவை வேறாயினும் அடிப்படை ஒன்றுதான்..மனிதநேயம்.

ஹென்றி டியூனான்ட் செய்தது மிகப்பெரிய சேவை.இவர் ஜெனிவா நாட்டவர்.வேலைக்காரணமாக இத்தாலி நாட்டிற்கு சென்ற போது சால்ப்பரினோ நகருக்கு சென்றார்.அங்கு போரினால் 40,000 வீரர்கள் காயம்பட்டு,உணவின்றி தவித்துள்ளனர்.அவர்களுக்கு ஊர் மக்களை திரட்டி உதவிய ஹென்றி ‘சால்ப்பரீனோ நினைவுகள்’ என்ற ஒரு புத்தகத்தையும் எழுதி வெளியீட்டார்.அதில் ‘போரில் காயப்படும் மக்களுக்கு உதவி செய்ய எந்த சார்பும் இல்லாத ஒரு பன்னாட்டு அமைப்பை உருவாக்க வேண்டும்’ வலியுறுத்தியிருந்தார்.அதன்படி,ஜெனிவா மக்கள் நல அமைப்பின் தலைவர் குஸ்தவ் மாய்னீர் என்பவர் உதவியால் 16 நாடுகளில் செஞ்சிலுவை சங்கம் உருவாக்கப்பட்டது.பின்னர்,இந்த அமைப்பு பல நாடுகளில் காலுன்றியது.இலங்கை போரில் பாதிக்கப்பட்ட மக்களில் கிட்டதட்ட 2100 மக்கள் இதன் உதவியால் வாழ்ந்து வருகின்றனர்.

முடிவுரை:

மனித குலத்தின் பிணைப்பே மனிதநேயம்.இது இன்றி மனிதகுலம் வாழ முடியாது.பயங்கரவாதம்,சாதி வேறுபாடுகளுக்கு இடையே நம்மை மனிதர்களாய் இயக்கிக் கொண்டிருப்பது மனிதநேயம்.

எழுதியவர் : பா.சிவச்சந்திரன் (8-May-16, 1:51 pm)
சேர்த்தது : சிவச்சந்திரன்
பார்வை : 1881

சிறந்த கட்டுரைகள்

மேலே