காதல் தோல்வி கடிதம்

அந்த மாதுளை
நிறத்தாளை கண்டதும்
என் மனதில்
விழுந்ததோ மா துளை

அவள் தேவதைகள்
விளையாடும் திடல்
கண்டதும் சிலிர்க்காமல்
சிவக்கின்றது என் உடல்

அவள் கவிதைத்
தொழிற்சாலையின் முதலாளி
நானோ கனவுத்
தொழிற்சாலையின் தொழிலாளி

அவள் ஆடிமாதத் திருவிழா
நான் அவளுக்குள்
தொலைந்த குழந்தை

அவள் கடல்
அதில் நதியாய்
சங்கமிக்கத் தவிக்கின்றது
என் உடல்

அவள் தாய்க்கருவில்
பிறக்காது பூக்கருவில்
பிறந்தவள்
அதனால் புன்னகைக்க
மறந்தவள்

காதல் சொல்லியே
வறண்டு போனது என் தொண்டை
அவள் வெறுத்தாலும்
நிறுத்தப்போவதில்லை நான்
அவளுக்குச் செய்யும் தொண்டை

தொண்டைக்குழியிலிருந்து
என் காதல் வெளிவந்தும்
அது தோண்டிய குழிக்குள்
சென்றது ஏனோ ?

என் உடல் நொந்து
மடல் தந்து அவள்
பின்னே அலைந்தது வீணோ ?

அவள் மனம்
என்னை மணம்
செய்திருந்தால்
என் மனம்
ஆகியிருக்குமோ பிணம் ?

அவள் மனம் என்னை
மணம் செய்திருந்தால்
என் மனம் தினம்
வீசியிருக்கும் மணம்....

அடுத்த பிறவியிலாவது
காக்கப்படட்டும் என் மானம்
அதுவரை சென்றுவருகின்றேன் வானம் ...

எழுதியவர் : குமார் (18-May-16, 7:29 am)
பார்வை : 1073

மேலே