குமரிக்கு சமர்ப்பணம்

அந்தியின் சாயலில்
சுதந்திரமாய் வந்தாள்
என் காதலி
குமரி அவளைப் பற்றி பேசினேன்
அவளும் பதில் பேசினாள்

குமரியே.. கன்னியாகுமரியே
உன்னில் கிறிஸ்தவர்கள் அதிகம் என்றேன்
ஆமாம் ஆமாம் என்றாள்

மன்னிக்கும் குணம்
அதிகம் இருக்குமென்றேன்

இல்லாமலா..?
சோனியாவுக்கும் கருணாநிதிக்கும்
வாக்களித்தார்கள் என்றாள்

இரக்கம் உள்ளோர்
இருப்பார்களே என்றேன்

இல்லாமலா..?
ஈழத்துத் தமிழர்களுக்கு
அஞ்சலி செலுத்தினார்கள் என்றாள்

கல்வியறிவு உள்ளோர்
அதிகம்தானே என்றேன்

அதிகம் இல்லாமலா..
சாலைப்பழுதுப் போராட்டத்தில்
திரள்கிறார்கள் இரண்டு பேர் என்றாள்

சகிப்புத்தன்மை அதிகம்
உள்ளவர் உண்டே என்றேன்

மிக மிக அதிகம் தான்
ஓட்டைப் பேருந்துகளில் கூட
அமைதியாய் பயணிக்கிறார்களே என்றாள்

உரிமைகளைப் கேட்டுப்பெறுவதில்
துணிச்சலுள்ளவர்கள் உள்ளனரே என்றேன்

உள்ளனர் உள்ளனர்
உடைந்த சாலைகளில் தினம்
கூடுதலாக ஒன்றிரண்டு குழிகளை
அரசாங்கத்திடமிருந்து
பெற்றுக் கொள்கின்றனர் என்றாள்

மொழிப்பற்றுள்ளவர்கள்
அதிகம் என்றேன்

ஆமாம் ஆமாம்
தமிழாசிரியர் பிள்ளைகளும்
tamil படிக்கின்றனர்
சி.பி.எஸ்.சி , மெட்ரிகுலேசனில் என்றாள்

உற்று நோக்கினாள்
நான் சிந்தித்துக் கொண்டிருந்தேன்

அரசன் எவ்வழியோ
அவ்வழியே மக்கள் என்றாள்

இல்லை இல்லை
திருடர் எவ்வழியோ
அவ்வழியே அரசன் என்றேன்

மீண்டும் சொன்னாள்
அரசன் எவ்வழியோ அவ்வழியே
மக்கள் என்றாள்

சுதந்திரமாய் வந்தவள்
அடிமைப்பட்டுப் போனாள்
தமிழர் போன்று..!
காணாமல் போனாள்
திராவிட மேகங்களுக்கிடையில்
என்னவள் நிலா..!
- - செய்தி “குமரி மாவட்டத்தில் தி.மு.க , காங்கிரஸ் வெற்றி”

எழுதியவர் : செ.பா.சிவராசன் (20-May-16, 11:08 pm)
பார்வை : 211

மேலே