தமிழிசை பாடுகின்ற வானம்பாடி - சிவரஞ்சனி

தமிழிசை பாடுகின்ற வானம்பாடி - என்
தலைவன் முருகனை தினம் தேடி - நான்
தமிழிசை பாடுகின்ற வானம்பாடி!

அமிழ்தினும் இனிதான தமிழ்ப்பாட்டு - அந்த
ஆறுமுகம் மயங்கும் அதைக்கேட்டு - செந்
தமிழிசை பாடுகின்ற வானம்பாடி! - என்
தலைவன் முருகனை தினம் தேடி! (தமிழிசை)

திருப்புகழில் மணக்கும் தமிழிசையே - தேன்
திருவாசகம் தன்னில் தமிழிசையே!
திருஅருட்பாவெல்லாம் தமிழிசையே - தமிழ்
தெய்வத்தை வசமாக்கும் தமிழிசையே! (தமிழிசை)

பூம்பாவைக்கு உயிரைத் தந்த இசை - பொங்கும்
புனலினையே எதிர்த்து வந்த இசை!
பாம்பு தன் நஞ்செடுக்க வைத்த இசை - என்றும்
பரவசம் ஊட்டுகின்ற இன்ப இசை! (தமிழிசை)

எழுதியவர்: பெயர்?

பூம்பாவைக்கு உயிரைத் தந்த இசை – மயிலையில் மாண்ட பூம்பாவையைத் தேவாரப்பண் பாடி எழுப்பினார் திருஞானசம்பந்தர்.

பொங்கும் புனலினையே எதிர்த்து நின்ற இசை - புனல் வாதிலே தமிழில் பண்ணெழுதி வைகை ஆற்றில் போட்டார் திருஞானசம்பந்தர். அது திருஏடகம் என்ற இடத்தில் வைகை ஆற்று வெள்ளத்தை எதிர்த்து கரை ஒதுங்கியது.

பாம்பு தன் நஞ்செடுக்க வைத்த இசை – பாம்பு தன்னால் தீண்டி உயிர் நீத்த அப்பூதியடிகளின் மகனை திருநாவுக்கரசர் பதிகம் பாடிப் பிழைக்க வைத்ததைக் கூறுகிறது.

ஆதாரம்:இசை இன்பம் வலைப்பூ/2007

எழுதியவர் : வ.க.கன்னியப்பன் (22-May-16, 7:21 pm)
சேர்த்தது : Dr.V.K.Kanniappan
பார்வை : 148

மேலே