ஆண்டுப்பலன்களும் அதன் பரிகாரங்களும்

புது வருடம். புது நம்பிக்கைகள். புதுப்புதுக் கனவுகள். மன்னிக்கவும். கனவுகளில்லை. உங்களின் உழைப்பு, திறமை சார்ந்த வருங்காலத் திட்டங்கள் எனறு இந்த வருடம் உங்களுக்கு மிகவும் மகிழ்ச்சியாகவும், தன்னிறைவாகவும் இருக்கப் போவது உறுதி. பலருக்கு சென்ற வருடம் முன்னேற்றமாக இருந்திருக்கலாம். சிலருக்கு பொருளிழப்பு, உறவுகளின் பிரிவு, பணிசார்ந்த நிம்மதியின்மை, எதிர் கொண்டாலும் அனைத்து மனப் போராட்டங்களையும் திறமையுடன் நேர் கொண்டு, போராடி இந்த அளவிற்கு இன்னல்களைக் கடந்து வெற்றிகரமாக நடை போடும் உங்களின் தைரியமே இந்த வருடம் நிச்சயம் உங்களை உயரத்திற்குக் கொண்டு போகப் போகிறது. இந்த வருட முன்னேற்றம் குறித்து என்னிடம் கேட்கப்பட்ட பல கேள்விகளில் ‘பன்னிரெண்டு கேள்விகளிற்கு பன்னிரெண்டு ராசிகளாக வகைப்படுத்தி நான் பலன்களைக் கூறியிருக்கிறேன். அவ்வளவுதான்.
இந்தப் பன்னிரெண்டு கேள்விகளுக்கும் பதில் அனைவருக்கும் பொருந்தும் பொதுப் பலன்கள் என்றாலும் சம்பந்தப்பட்ட கேள்வியாளர்களுக்கு சரியான பதிலைக் கொடுக்க ஓரளவு முயற்சித்திருக்கிறேன்.
கேள்வி 1: (மேஷம்) என் முன் என்னதான் வளமான மேய்ச்சல் நிலம் இருந்தாலும் என் வாழ்க்கை மட்டும் ஏன் வறண்டே இருக்கிறது?
பதில்: உங்கள் கேள்வியிலேயே அதற்கான பதிலும் இருக்கிறதே. இலக்கற்ற நுனிப்புல் மேய்ந்து ஏனொதானோவென்று வாழ்கிற, உங்களுக்குத் தேவை ஒரு குறிப்பிட்ட துறை மட்டுமே சார்ந்த உங்களது அறிவு. மாணவனாக இருந்தால் குறிப்பிட்ட துறை சார்ந்த புத்தங்களைப் படித்து விஷயஞானத்தை வளர்த்துக் கொள்ளுங்கள். வளமான மேய்ச்சல் நிலத்தின் முழு அதிபதி நீங்கள். வரும் வாய்ப்புகளை ஆதாயப்படுத்திக் கொள்ள உங்களுக்கு கூடுதல் கவனமும் இடைவிடாத திட்ட மிட்ட உழைப்பும் அவசியம் தேவை.
கேள்வி 2: (ரிஷபம்) மாடு போல் நான் உழைத்தாலும் ஏதுவும் மடி தங்குவதில்லை. உழைப்பின் மேலே எனக்கு எரிச்சல்தான் வருகிறது. அது எதனால்?
நீங்கள் உழைப்பாளிதான் என்பதில் பெருமைப்பட்டுக் கொள்ளுங்கள். ஆகக்கூடி உழைப்பு குறித்து உங்களிடம் இருக்கும் ஆர்வத்திற்கு மேல் நீங்கள் திட்டமிட்ட உழைப்பை மேற்கொள்ளாதுதான் அடிப்படைக் காரணம். தற்போதைய உங்களின் உழைப்பு ரசாயனம் சேர்த்து பழுக்க வைத்த கனி போன்றது. ருசி இருக்காது. பசி தீரும் அவ்வளவுதான். திட்டமிட்டு உழைக்க இந்த வருடம் உங்களுக்கான வெற்றிகனிகளை நிச்சயம் நீங்கள் கொய்வீர்கள்.
கேள்வி 3: (மிதுனம்) என்னதான் சம்பாதித்தாலும் இரட்டைச் செலவுகள்தான். ஜான் ஏறினால் முழம் சறுக்குகிறதே, அது எதனால்?
பதில்: வேண்டாத செலவுகளை இந்த வருடம் நிறுத்திப் பாருங்கள். பழைய பொருளாதாரத் தோல்விகளிலிருந்து நீங்களே கற்றுக்கொண்ட பாடங்களை சக வாசகர்களிடன் நிச்சயம ஒருநாள் பகிர்ந்துகொள்ளப் போகிறீர்கள்,. உங்களின் பலமே உங்களின் திட்டமிடாத பொருளாதார அணுகுமுறையில் நீங்கள் கற்றுக்கொண்ட படிப்பினைதான். ஆட்சியாளர்கள் கற்க மறுத்தாலும் நீங்களாவது இதைக் கடைபிடியுங்கள்.
கேள்வி 4: (கடகம்) நண்டுப் பிடியாக வரவு செலவுகளை எவ்வளவு கட்டுப்படுத்தினாலும் நழுவிக்கைவிட என் திட்டங்கள் மீண்டும் பழைய நிலைக்கே வந்துவிடுகிறதே, அது ஏன்?
எதைப் பிடிப்பது, எதை விடுப்பது என்பதில் உங்களுக்கு அரோக்கியமான கண்ணோட்டம் இந்த வருடம் மிகவும் அவசியம். வரவிற்கேற்ப செலவு என்பது பொதுவான விதி என்றாலும், உங்களின் வரவு சார்ந்த தன்னிறைவை உடனே உடைத்தெரிந்து புது ஆளுமையை இந்த வருடம் வளர்த்துக்கொள்ளுங்கள். பிறகென்ன! புது வருமானம், புது சேமிப்பு என்று நிம்மதியாக அடுத்த வருடம் இறுமாப்புடன் என்னை வந்து பார்க்கப் போகிறீர்கள். புதுப்புது பெயர்களின் பழைய பொருளாதாரக் கொள்கைகளையே திணித்துக்கொண்டிருக்கும் அரசாங்கங்கள் போலில்லாமல் புதிய அணுகுமுறைகளோடு வாழ்க்கையை புதிதாகத் தொடங்குங்கள்.

கேள்வி 5: (சிம்மம்) ஒரு காலத்தில் சிங்கம் போல ஆளுமை செய்த குடும்பம் எங்களுடையது. இப்போதோ அடுத்தவர்களை அண்டி வாழவேண்டியிருப்பதால், மனம் கூசுகிறது. எங்களுக்கு இந்தவருடமாவது வழி பிறக்குமா?
அண்டி வாழ்வது ஒரு தற்காலிகத் தேவையெனில் அதில் குற்றமே இல்லை. அது ஒரு தார்மீக சமுதாய எதிர்பார்ப்பு. சமூகம் என்பதே ஒருவரை ஒருவர் சார்ந்து வாழ்வதுதான், எனிமும் உங்களின் தொழில் இயலாமை, சமூக நிர்பந்தம், பொருளாதாரச் சரிவுகள், ஒரு காரணமாக இருந்தால் பழைய பெருமைகளை மூட்டை கட்டி, மூலையில் எறிந்து நடைமுறை வாழ்க்கையை ஒப்புக்கொண்டு கடுமையாக உழையுங்கள். உழைப்பிற்கு இல்லை ஊன்று கோல். இதுவே உங்கள் ராசிக்கு இந்த வருடத் தீர்வு.
கேள்வி 6: (கன்னி) பெண்ணாக ஏன் பிறந்தோமென்று இருக்கிறது. கணவனிடமும் பிள்ளைகளிடமும் அடங்கிப் போயே என் சுயம் மறைந்துவிட்டது. இந்த வருடமாவது எனக்கு மாறுதல் கிடைக்குமா?
பதில்: தோழியே நீங்கள் தைரியமாக இருக்க வேண்டிய வருடம் இது. உங்களுக்கென்று பதிவான அடுக்களை வேலைகளை மட்டும் தோளில் சுமக்காமல், தனித்திறமையை இந்த வருடம் வளர்த்துக்கொள்ளப் போகிறீர்கள் பொருளாதார சுதந்திரத்தை நீங்கள் பெறுவது குறித்தான உங்களின் முயற்சி இந்த வருடம் தனிப்பலன் களை நிச்சயம் கொடுக்கப்போகிறது. சிறு தொழிலோ, பகுதி நேர வேலையோ வேலைகளோ உங்களின் வாழ்க்கையை உங்களின் வீட்டார்கள் முன் உயர்த்திக் காட்டப்போகிறது. அதற்கு என் வாழ்த்துக்கள். ஒரு பக்கம் இது உங்கள் மீது என்றைய அரசியல் பொருளாதாரத்தால் திணிக்கப்படுவதுதான். அதே வேளையில் இது உங்கள் உரிமை. உலகச் சந்தை நெருக்கடியால் வேலை வாய்ப்பை இழப்போரில் பெரும் பகுதியினர் பெண்கள்தான் என்றாலும் உங்கள் முயற்சியை துளியும் கைவிடாதீர்கள்.
கேள்வி 7: (துலாம்) எவ்வளோ நியாயமாய் நடந்து கொண்டாலும், எனக்கு கிடைத்ததென்னவோ கோமாளிப்பட்டம்தான். துளியும் அனுசரிப்பே இல்லாத ஆசாமியென்று என் நட்பு வட்டம் வெகுவாகச் சுருங்கிப் போனதற்குக் காரணம் என்ன?
பதில்: நியாயமாக இருப்பது உங்களின் பிறவிக் குணம். மிகவும் பெருமையாக இருக்கிறது. உங்களின் இயலாமை குறித்த சோகம் எனக்கும் புரிகிறது. வாழ்க்கையைக் கறாராக, வரையறைபடுத்திக் கோடுகள் கிழித்து இறுக்கமாக வாழ்வதால் வந்த வினைதான் இது. கொஞ்சம் அனுசரணையுடன் நீங்கள் இந்த வருடம் மாற, உங்களின் கொள்கையை விட்டுக்கொடுக்காமல் , அதே சமயம் , நண்பர்களைக் கொஞ்சம் அரவணைத்துப் போவதற்கு சீக்கிரமே பழகிக்கொள்வீர்கள்.
கேள்வி 8: (விருச்சிகம்) என் மனைவி தேள்போல வார்த்தைகளால் என்னைக் கொட்டிக்கொண்டேயிருக்கிறாள். இந்த வருடமும் இது தொடருமா?
பதில்: ஐயா பிரச்சினை உங்கள் மனைவியிடம் இல்லை. கொஞ்சம் மூளையக் கசக்கி விட்டுச் சொல்லுங்கள், எத்தனை மாதங்களுக்கு முன்பு உங்கள் மனைவிடம் மனம் விட்டு நீங்கள் பேசியிருக்கிறீர்கள். அலுவலகம், வீடு என்ற இயந்திர கதி வாழ்க்கையில் உங்கள் மனைவியை ஒரு மனுஷியாக மதித்து , அவளின் திறமைகளை கொஞ்சம் பாராட்டிப் பாருங்களேன். இந்த வருடம் உங்களின் கைமேல் பலன் நிச்சயம்.

கேள்வி 9: (தனசு) என் குறியலக்குகள் எப்போதும் மிகுந்த நம்பிக்கை கொடுத்தாலும், இலக்கை அடையும் போது சில சமயம் தவறிவிடுகிறதே ஏன்?
பதில்: உங்களின் இலக்கின் குறியீடு ஒரு புள்ளி என்று வைத்துக்கொண்டால் அதை அடைவதற்கான குறிக்கொளில், சிறிய அசைவு இருந்தாலும், உங்கள் முயற்சி சிதைந்துவிடும். நாணேற்றும் விரல்களில் தன்னம்பிக்கையுடன் தைரியமும் இருக்க வேண்டும். நம்பிக்கை, தைரியம், தொழில் படிப்பு சார்ந்த புத்திசாலித்தனத்துடன் இந்த வருடத்தை ஆரம்பிக்கப் போகிறீர்கள்.
கேள்வி 10: (மகரம்) கடல் அரக்கனாய் வாழ்க்கை என்னைத் துரத்துகிறது. வாழ்க்கையின் விளிம்பிற்கே வந்து விட்டேன். இந்தவருடம் என் நிலை என்ன?
குட்டக்குட்டக் குனிபவனை பற்றி கேள்விப்பட்டு இருக்கிறீர்களா?. கடல் அரக்கன் என்ன. அதற்கு மேல் ஒரு மாபெரும்பூதம் உங்களைத் துரத்தினாலும், என்றாவது ஒரு சமயம் சிறிது நீங்கள் திரும்பிப்பார்த்து இருக்கிறீர்களா? உங்களின் முதல் பார்வையிலேயே அவனின் வேகம் குறையலாம். இரண்டாம் பார்வையில் அவன் நிலை தடுமாறலாம். வாழ்க்கையென்றாலே போராடித்தான் வெல்ல வேண்டும். இந்த வருடம் நீங்கள் திரும்பிப்பார்த்து உங்களின் பலன்களைக் கண்டறியும் பொன்னான காலம்.

கேள்வி 11: (கும்பம்) பால் பொங்கும் நேரம் தாழி உடைந்த கதைதான் என்னுடையது. ஏன் எனக்கு மட்டும் எவ்வளவு முயன்றும் கடைசி நேரம் பொறுமையிழந்து முயற்சி அனைத்தும் நீர்த்துப்போகிறது.
பதில்: நண்பரே பொறுமை ஒரு போராளி. கடைசிவரைக்கும் போராடவேண்டும். இலக்கு வெற்றி பெறும் வரை மட்டும்மல்லாமல் அதை நிலைப்படுத்த தொடர்ந்து போராடவேண்டும். இப்போது புரிகிறதா உங்களின் பலவீனம். தானாய் எதுவும் மாறாது நண்பரே.
கேள்வி 12: (மீனம்) வாழ்க்கைப் போராட்டத்தில் எதிர் நீச்சல் போட்டு நீந்தியே ஆக வேண்டியிருக்கிறது. போராடாமல் நான் வசதியுடன் வாழ இந்த வருடமாவது எனக்கு வழி பிறக்குமா?
பதில்: ஐயா, உங்களின் மூளைச் செல்களை முதளாலித்துவ சோம்பேறித்தன கறையான் அரிக்க ஆரம்பித்திருக்கிறது. நல்ல வேலை. அதுவே உங்களின் உயிர்கொல்லி நோயாக மாறுவதற்கு முன் இந்தக் கேள்வியைக் கேட்டிருக்கிறீர்கள். உங்களுக்குத் தேவை ஒரு சுயமான் சிறிய மூளைச் சலவை. உழைப்பு எதிர் நீச்சல் குறித்து ஆழமான ஒரு மறு வாசிப்பு. உங்களின் நோய்க்கு இந்த வருடம் மருந்து முயற்சிமட்டுமே. தொடர் முயற்சி கூடுதல் பலனைக் கொடுக்கும்.

எழுதியவர் : பிரேம பிரபா (23-May-16, 8:12 pm)
சேர்த்தது : பிரேம பிரபா
பார்வை : 83

மேலே