சிகரம் தொடு

எட்டு எட்டா(ய்) நாலெட்டில்
இமயம் எட்டும் காலெட்டில்
சுட்டும் கணக்கைச் சொல்கின்றேன்
சொல்லில் நுட்பம் உண்டென்பேன்
எட்டா யிரத்து எண்ணூற்று
நாற்பத் தெட்டே அடிவைத்தால்
தொட்டு விடலாம் இமயத்தை
தொடுவோம் சிகரம் தொடுவோமே (1)

உருகிப் போகும் பனிகூட
உறுதி யாலே மலையாகும்
கருகும் கரியும் திடத்தாலே
கட்டி வைர மணியாகும்
தருவான் துளிநீர் சிப்பிக்குள்
தங்கி திடத்தால் முத்தாகும்
பெருகும் மனதின் திடத்தாலே
சிகரம் தொடுவோம் தொடுவோமே(2)

தொடுதிரை பேசி யலைபேசி
தொடுதிரை வங்கி இயந்திரங்கள்
தொடுதிரை வருகைப் பதிவியங்கி
துறைதொறும் வந்த முன்னேற்றம்
தொடுதிரை மாய வரவல்ல
தொட்டதும் மலர்ந்த பூவல்ல
தொடந்திடும் உழைப்பே,கடுமுழைப்பால்
தொடுதொடு சிகரம் தொடுவாயே(3)

சந்தி பெருக்கக் கற்றோமே
சந்திரன் கண்டு தொட்டோமே
முந்திக் காக்கும் மருத்துவத்தின்
முறைகள் எல்லாம் கண்டோமே
எந்தத் துறைதான் என்றாலும்
இன்னும் இன்னும் அதிலின்னும்
சிந்தித் தேநாம் அதனுச்சி
சிகரம் தொடுவோம் தொடுவோமே(4)

சந்தம் தொடுமே சங்கீதம்
தாளம் தொடுமே ராகத்தை
சந்திரன் தொடுமே செயற்கைக்கோள்
சாதனை தொடுமே நம்குறிக்கோள்
முந்தித் தொடுமே முகில்,வானை
முயற்சி தொடுமே பெரும் வெற்றி
சிந்தை தொடுமே என்கவிதை
சிகரம் தொடுமே நம்பிக்கை(5)
*********************************************************************************************************

(எட்டு எட்டா(ய்) நாலெட்டில்-8848 அடி உயரம் இமயம்)

எழுதியவர் : சு.ஐயப்பன் (26-May-16, 3:58 pm)
பார்வை : 3034

மேலே