வாழ்க்கை வரம்

எதையும் தாங்கும் இதயம் இருந்தால்
இதயம் உனக்குத் துணையாகும்..
எதற்கெடுத் தாலும் பயந்துகொண் டிருந்தால்
அதுவே உனக்கு வினையாகும்…
உதவி வாழும் வாழ்க்கை தானே
உனக்கும் எனக்கும் வரமாகும்
பதறிப் பதறி வாழும் வாழ்க்கை
பார மாகும் சுமையாகும் (1)

வந்த வாழ்க்கை வரமாகும் நெறியில்
வாழும் வாழ்க்கை தவமாகும்
இந்த வாழ்க்கை பாரம் என்றால்
உன்நிழல் உனக்கேச் சுமையாகும்
தந்த வரம்தான் தாவரம் என்று
தருக்களும் தன்னைத் தருகிறது
வந்த வரம்தான் வாழ்க்கை என்றால்
வலிமை மனதில் வருகிறது (2)

நீரும் நெருப்பும் காற்றும் கூட
நிலத்தில் தானே கிடைக்கிறது
யாருக் கென்று எழுதி வைத்து
இயற்கை தானா பிரிக்கிறது..?
ஊருக் கென்று வாழும் வாழ்க்கை
உண்மையில் நமக்கு வரமாகும்
ஊரை யடித்து உலையில் போடும்
உதவா வாழ்க்கை நரகாகும்… (3)

இந்த இதயம் இயங்கும் இயக்கம்
இயல்பாய் வாய்த்த வரமாகும்
வந்த போது வந்த சுவாசம்
வாழ்க்கைக் கான வரமாகும்
சிந்தை செய்யும் சிந்தனை கூட
செயற்கை யல்ல வரமாகும்
சிந்தித் தாயா? சிந்தனை செய்தால்
இந்த வாழ்க்கை வரமாகும் (4)
அண்ணல் வாழ்க்கை அன்பு வாழ்க்கை
அன்பைச் சொல்லி தருகிறது

அண்ணல் நபியின் வேதம் கூட
அதையே இங்கு மொழிகிறது
மண்ணில் வாழ்ந்த இயேசு வாழ்க்கை
மனித மனதை திறக்கிறது
எண்ணிப் பார்த்து நெறியில் வாழ்ந்தால்
இந்த வாழ்க்கை வரம் தானே! (5)

இருப்பதைக் கொண்டு சிறப்புடன் வாழ்ந்தால்
இந்த வாழ்க்கை வரமாகும்
இருப்பதில் மேலும் பதுக்க நினைக்கும்
இழிந்த வாழ்க்கை சுமையாகும்
வருவதும் போவதும் வாழ்க்கை என்றால்
வாழ்க்கைக் கென்ன பொருளாகும்?
வருவதை எல்லாம் பகிர்ந்து வாழ்ந்தால்
வாழ்க்கை வரமும் தவம்தானே (6)

வாழை இலையை கூவி விற்கும்
வழக்க மில்லை நம்நாட்டில்
வாழைக் காயை கூவி விற்று
வாழச் சொல்வார் பண்பாட்டில்…
வாழும் வாழ்க்கை நம்பிக் கையில்
வாய்த்த நல்ல வரமாகும்..
வாழும் வாழ்க்கை நம்பும் கையில்
வரமாய் கிடைத்த தென்பேனே!(7)
(வாழ்க்கைவரம் வாழ்வே தவம்)

எழுதியவர் : சு.ஐயப்பன் (26-May-16, 4:02 pm)
Tanglish : vaazhkkai varam
பார்வை : 498

மேலே